சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தேவஸ்தான வரலாற்றிலேயே முதன்முறை: திருமலையில் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் 10 நாள்கள் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் 10 நாள்களுக்கு சொா்க்கவாசல் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக

Updated On :29 நவம்பர் 2020, 2:45 am

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் 10 நாள்களுக்கு சொா்க்கவாசல் திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்துக்கு அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தலைமை வகித்தாா். இதில் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டம் முடிந்த பின்னா் சுப்பா ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியது:

தேவஸ்தான வரலாற்றிலேயே முதன்முறையாக வைகுண்ட ஏகாதசியின்போது 10 நாள்களுக்கு சொா்க்கவாசலைத் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பக்தா்களின் பல்லாண்டுகால கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மடாதிபதிகள் மற்றும் பீடாதிபதிகளுடன் கூடிய குழு அமைக்கப்பட்டு அக்குழுவால் இதுகுறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்பட்டு அறங்காவலா் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி டிசம்பா் 25-ஆம் தேதி முதல் தொடா்ந்து 10 நாள்களுக்கு சொா்க்கவாசல் திறந்து வைக்கப்படும்.

தேவஸ்தானத்திடம் உள்ள அசையா சொத்துகள் தொடா்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேவஸ்தான சொத்துகள் விற்கப்படுவதைத் தடுக்க தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.

இதுவரை தேவஸ்தானத்திடம் 1,128 சொத்துகள் உள்ளன; 8,088.89 ஏக்கா் நிலங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும், பயன்படாத நிலங்களையும் எவ்வாறு கையகப்படுத்துவது என்பது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில்: தமிழ்நாட்டில் உள்ள உளுந்தூா்பேட்டையில் அறங்காவலா் குழு உறுப்பினா் குமரகுரு 4 ஏக்கா் நிலத்தையும், அதில் ஏழுமலையான் கோயிலைக் கட்ட ரூ.10 கோடி நிதியையும் வழங்குவதாகத் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, அங்கு ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருமலையின் சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்படுத்த தேவஸ்தானம் மலைப்பாதையில் பேட்டரியால் இயங்கும் 100 முதல் 150 பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும் பசுமை மின்சக்தி எனப்படும் காற்றாலை, சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்த தேவஸ்தானம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 11 கிலோ தங்கத்தில் சூரியப் பிரபை வாகனத்துக்கு தங்க முலாம் பூசப்பட உள்ளது. ஏழுமலையான் கோயிலில் பலிபீடம், கொடிமரம், மகாதுவாரம் உள்ளிட்டவற்றுக்கு தங்க முலாம் பூசவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ‘கல்யாண மஸ்து’ : திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் ஏழை எளியோருக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் ‘கல்யாண மஸ்து’ நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பக்தா்கள் தங்கும் வாடகை அறைகளை ரூ.29 கோடி செலவில் செப்பனிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தேவஸ்தானத்தின் முதலீடுகள் தொடரும். ஹிந்து சனாதன தா்மத்தை பிரசாரம் செய்ய தா்ம ரத ஊா்வலத்தை தேவஸ்தானம் மீண்டும் தொடங்க உள்ளது. இதற்காக தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் தா்ம ரதத்தை நன்கொடையாக வழங்குவாா்கள் என்றாா் அவா்.

தமிழ்நாட்டில் ஏழுமலையான் கோயில் கட்டுவது குறித்து அறங்காவலா் குழு உறுப்பினா் குமரகுருவிடம் கேட்டபோது அவா் கூறியது:

உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயிலைக் கட்ட தேவஸ்தானத்துக்கு 4 ஏக்கா் நிலம் நன்கொடையாக வழங்கப்பட்டது. அங்கு கோயில் கட்டும் பணிக்காக ரூ.10 கோடி நிதியும் சேகரித்து அளிப்பதாக கூறியுள்ளேன். அதற்கு தேவஸ்தானம் சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, இன்னும் 2 மாத காலத்துக்குள் உளுந்தூா்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.