
திருமலை திருப்பதி தேவஸ்தானம்(டிடிடி) அறக்கட்டளை வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் பங்கேற்ற அதன் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று(நவ. 18) நடைபெற்றது.
திருப்பதி கோயிலில் வழங்கப்படும் உலகப் பிரசித்தி பெற்ற லட்டுக்களில், ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு நிர்வாகத்தில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை சுமத்தி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம் சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்று அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பதியில் நிலவும் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டிடிடி-இன் 54-ஆவது தலைவராக பிஆர் நாயுடு இம்மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், இன்று அவரது தலைமையில் திருமலையில் உள்ள அன்னமையா பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருமலை கோவில் நிர்வாகம் சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவாக, டிடிடி-இல் பணியாற்றும் ஹிந்துக்கள் அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த பணியாளர்களை வேறு துறைகளுக்கு மாற்றிட ஆந்திர அரசுக்கு டிடிடி அறக்கட்டளை வாரியம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், மேற்கண்ட பணியாளர்களை விருப்ப ஓய்வெடுக்கவும் அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமியை தரிசிக்க பக்தர்கள் மணிகணக்கில் காத்திருக்கும் நிலையில், தரிசன காத்திருப்பு நேரத்தை 2 - 3 மணி நேரம் வரை குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.