
பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் உற்ஸவம் நடைபெறுது வழக்கம். ஆனால் இந்த பெருமாள் கோயிலில் சொர்க்கவாசலே இல்லை.. என்ன காரணம் என்று தெரிந்துகொள்வோம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் காஞ்சிபுரம் ஸ்ரீ வைகுண்ட வாசப் பெருமாள் கோயிலும் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இந்தத் திருக்கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது. பல்லவர் கால கட்டுமானத்துடன் திகழும் இந்த ஆலயம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிலும் அறநிலையத்துறையின் கீழும் உள்ளது. இத்திருக்கோயிலுக்குப் பரமேஸ்வர விண்ணகரம் என்ற பெயருமுண்டு.
ஒரு சமயம் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்தத் தலத்தின் மேன்மையை காண வருகை புரிந்தனர். அதையறிந்த மகரிஷிகளும் தேவர்களும் கடவுளரைத் தரிசிக்க அங்கே வருகை தந்தனர். இறைவனை தரிசிக்க எல்லாரும் வந்திருக்க, ஆழ்ந்த தவத்திலிருந்த பரத்வாஜ முனிவர் மட்டும் வரவில்லை. இதில் கோபமுற்ற சிவனார் ரம்பா, ஊர்வசி ஆகியோரை அனுப்பி, முனிவரின் தவத்தைக் கலைத்தார்.
அப்போது, முனிவருக்கு ஏற்பட்ட சபலத்தால் பிறந்த குழந்தைக்கு பரமேஸ்வரன் எனும் திருநாமம் சூட்டினார். திருமாலின் பேரருளால் பரமேஸ்வரன் மன்னனானான். அவனுக்கு வைகுந்தப் பதவியையும் அளித்து அருளியதால் பெருமாள் சூடிகொண்டிருக்கும் தலம், பரமேஸ்வர விண்ணகரம் என்றும் பெருமாள் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் எனவும் அழைக்கப்பட்டார்.
காஞ்சி, காமாட்சி அம்மன் கோயிலுக்குக் கிழக்கே சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பளவில் மேற்கு நோக்கிய மொட்டைக் கோபுரமும் இரண்டு பிரகாரங்களையும் கொண்டது இந்த கோயில். மூலவர் ஸ்ரீ பரமபத நாதப் பெருமாள். தாயார் வைகுந்தவல்லி. விமானம் முகுந்த விமானம். இது மூன்று தளம் கொண்டு அஷ்டாங்க விமானமாக உள்ளது. மேல் தளத்தில் எம்பெருமான் நின்ற திருக்கோலத்திலும் இரண்டாம் தளத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக சயனக்கோலத்தில் ரங்கநாதராகவும் கீழ்தளத்தில் வீற்றிருந்த கோலத்தில் ஸ்ரீ வைகுண்டப் பெருமாளாகவும் அருளாட்சி புரிகின்றார்.
இரண்டாவது தளத்தில் அருளும் பெருமாள், வடக்கே தலையும், தெற்கே பாதங்களை வைத்தும் சயனித்திருப்பது மிகவும் விசேஷம் என்கிறார்கள். திருக்கோயிலின் மூலவர் மற்றும் பிரகாரத் தூண்கள் யாவும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.
திருக்கோயிலிலுள்ள பிரமாண்டமான மண்டபங்களும் அவற்றின் தூண் சிற்பங்களும் கொள்ளை அழகுடன் காட்சியளிப்பது சிறப்பு. சுற்றுச் சுவர்களில் சிற்பங்களாகத் திகழும் 18 பல்லவ மாமன்னர்கள் பட்டாபிஷேகக் காட்சிகள் மிகவும் அற்புதம். இன்றளவும் அவை வரலாற்றுச் சான்றுகளாகத் திகழ்கின்றன. இவ்வாலய மூலவரின் திருநாமம் ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் என்றாலும் இங்கு சொர்க்கவாசல் உத்ஸவம் கிடையாது. இப்பெருமாளுக்கு " பரமபதநாதன் என்ற திருநாமமும் உண்டு.
வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீ வைகுந்தவல்லித் தாயாருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தித்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. மார்கழியில் புளியோதரை, சர்க்கரைப்பொங்கல் வைத்து நைவேத்யம் செய்து பெருமாளை வழிபட நினைத்த காரியங்கள் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.
பரமேஸ்வர விண்ணகரம்
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது இவ்வாலயம். இங்கு, நின்ற நம்பி, கிடந்த நம்பி, அமர்ந்த நம்பி என்ற திருக்கோலங்களில் பெருமாளை தரிசிக்கலாம். சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற இக்கோயில் ஒருவிதமான மணல் கற்களால் கட்டப்பட்டது.
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலிலும் சொர்க்கவாசல் உத்ஸவம் கிடையாது.
- டி.எம். இரத்தினவேல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.