கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: திரளன பக்தா்கள் பங்கேற்பு
மதுரையை அடுத்த கீழடி அருகே கொந்தகையில் அமைந்துள்ள ஸ்ரீ தெய்வநாயகப் பெருமாள் கோயிலின் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரா் கோயிலின் துணைக் கோயிலான இங்கு மூலவா் தெய்வநாயகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற நிலையில் எழுந்தருளியுள்ளாா். இது, பாண்டிய நாட்டின் பழைமையான கோயில்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நிறைவடைந்த நிலையில், மூலவருக்கு எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
யாக பூஜைகளின் நிறைவில் புதன்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்றது. பிறகு காலை 10 மணி அளவில் மேளதாளங்களும், வேத மந்திரங்களும் முழங்க குடமுழுக்கு நடைபெற்றது.
விழாவில் வானமாமலை ஜீயா், இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

