

1000 ஆண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் என்று அழைக்கப்படும் எம்பார் திருக்கோவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு பூரண கும்ப மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ரூபாய் 78 லட்சம் மதிப்பில் கோவிலை புனரமைப்பு செய்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தை காண பல்வேறு கிராமத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
எம்பார் சுவாமிக்கு 1000வது ஆண்டு அவதார உற்சவம் இன்று முதல் தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கமலவல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட பெருமாள் (எ) எம்பார் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
1,026ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் எம்பார் சுவாமிகள். இவர், ராமானுஜரின் சிற்றன்னையின் மகன் ஆவார். ஆண்டுதோறும் மதுரமங்கலத்தில் எம்பார் சுவாமி உற்சவ விழா 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், இந்த கோவிலில், கடைசியாக 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எம்பாரின் 1,000வது அவதார உற்சவ விழா இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில் இந்த கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் அறநிலையத் துறை சார்பில் ரூ.78 லட்சம் செலவில் கோவில் புனரமைக்கப்பட்டு 'எம்பார் சுவாமியின் 1,000வது ஆண்டு உற்சவ விழாவுக்கு முன், வைகுண்ட பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று அதிகாலை 5:30 மணியளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர், யாக கொண்டளத்தில் வைத்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் இன்று கோபுர கலசத்தில் இருந்த புனித நீரை கோவில் முன்பு வலம் வந்து உற்சவர் கமலவல்லி மற்றும் வைகுண்ட பெருமாள் ராஜா அலங்காரத்தில் உற்சவம் மண்டபத்தில் எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி பூரண கும்ப மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரமங்கலம் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து புனித நீரை தெளித்து கொண்டு கும்பாபிஷேக விழா சிறப்பித்தனர்
கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் எம்பார் சுவாமிக்கு 1000வது ஆண்டு அவதார உற்சவம் தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேக நிகழ்வுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கதிரவன், சரக ஆய்வாளர், அலுவலக ஊழியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் என பலர் ஏற்பாடுகள் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.