ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள்!

ஆனந்த சயனமூர்த்தியாக வீற்றிருக்கும் கோயில்..
பள்ளிகொண்ட பெருமாள்
பள்ளிகொண்ட பெருமாள்
Updated on
1 min read

புதுக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 20 கிமீ தொலைவில் உள்ள இத்தலம் திருமெய்யம் எனும் பெயர் மருவி திருமயம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. திருமெய்யம் என்றால் உண்மையின் இருப்பிடம் எனவும் சமஸ்கிருதத்தில் சத்தியஷேத்திரம் எனப் பொருள்படுகிறது. கிபி 8,9-ம் நூற்றாண்டில் இங்குள்ள கோட்டையினுள் குடவரையில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டது. இந்த குடவரையில் மேற்கில் சிவனும், கிழக்கில் விஷ்ணுவுக்கும் அருகருகே கோயில்கள் அமைந்துள்ளது வேறெங்குமில்லாத சிறப்பாகும்.

விஷ்ணு பெருமான் சத்தியமூர்த்தி என அழைக்கப்படுகிறார். திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற 108 தலங்களில் இதுவும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பு. அதனாலேயே வைணவ பிரிவினரின் முக்கிய தலமாகத் திகழ்கிறது. மேலும் திருவரங்கம் வைணவக் கோயிலைவிடக் காலத்தால் முந்தியதால் இது ஆதிரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. குகைக் கோயிலினுள் விஷ்ணு பெருமாள் ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட ஆனந்த சயனமூர்த்தியாக வீற்றிருக்கிறார்.

தல வரலாறு

பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தபோது, மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொண்டனர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர்.

பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயைக் கக்கினார். பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வன்கொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.

புராண வரலாறு

திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவார்களுக்குக் கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. சத்தியகிரி எனும் இம்மலை சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்டப் புராணத்தில் கூறப்படுகிறது.

சைவ வைணவ ஒற்றுமை

திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும், சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com