விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி தேரோட்டம்!

விராலிமலை முருகன் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விராலிமலை முருகன்  கோயில் தேரோட்டம்
விராலிமலை முருகன் கோயில் தேரோட்டம்
Published on
Updated on
1 min read

விராலிமலை முருகன் கோயில் நடைபெற்ற வைகாசி தேரோட்டத் திருவிழாவில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரண முழக்கத்துடன் தேரை வடம் பிடித்தனர்.

விராலிமலை முருகன் மலைக்கோயில் 207 படிகள் கொண்ட திருத்தலமாகும். அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்து எனும் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையை கற்ற அருளிய இத்திருத்தலத்தில் தேசியப் பறவையான மயில்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும், ஒரு சில மயில்கள் பக்தர்களைக் கண்ட உற்சாகத்தில் தோகையை விரித்து ஆடும். இது பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமையும். ஆறு முகங்களுடன் வள்ளி, தேவசேனா சமேதராக மலைமேல் முருகன் மயில் மீது வீற்றிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் வைகாசி விசாகம், தைப்பூசத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்த நிலையில் வைகாசி விசாக தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த ஜூன், 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய வைகாசி விசாக விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை நடைபெற்றது. விழாவையொட்டி காலை 9 மணியளவில் மலை மீது இருந்து கேடயத்தில் இறங்கி வந்த வள்ளி-தேவசேனா சமேதராக முருகன் பெரிய தேரிலும், விநாயகர் சின்ன தேரில் எழுந்தருளினார்கள். அதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் தேர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்த தேரின் முன்னால் மங்கள வாத்தியங்கள், ட்ரம் செட் வாசிக்கப்பட்டது. சிவன் வேஷம் அணிந்த பக்தர்கள் சிவதாண்டவம் ஆடியபடி மலையைச் சுற்றி வந்தனர். உற்சாகமடைந்த ஒரு சில சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி மலையைச் சுற்றி வந்தனர். காலை 10 மணிக்கு புறப்பட்ட தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நண்பகல் 11.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

உபயதாரர்கள் சார்பில் ஆங்காங்கே நீர், மோர் பானகம், பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் பக்தர்களுக்கு வழங்கினர். மேலும், திருமண மண்டபங்களில் தலை வாழை இலையுடன் பல்வேறு கூட்டு, பொறியல், அப்பளம்,பாயாசத்துடன் பக்தர்களுக்கு சைவ உணவு பரிமாறப்பட்டது. விழாவில் தமிழக மருத்துவத்துறை சார்பில் தற்காலிக மருந்தகம் அமைக்கப்பட்டுத் தேவைப்படுவோருக்கு மருந்து, மாத்திரைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com