ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி திருவிழா!

கள்ளழகர் சித்திரைத் திருவிழா பற்றி..

News image

தண்ணீர் பீச்சு அடித்து வரவேற்கும் கள்ளழகர் - video crop

Updated On :28 ஏப்ரல் 2026, 10:14 am

மதுரையில் கள்ளழகர் சித்திரைத் திருவிழா தொடங்கி இன்று 10 ம் நாள் திருவிழாவாக இன்று காலை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. அதேபோல் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே 1ம் தேதி காலை நடைபெறவுள்ளது.

சைவர்கள் மற்றும் வைணவர்களை இணைக்கும் இத்திருவிழாவில் வைகை ஆற்றின் தெற்கே 10 நாள்கள் மீனாட்சியின் திருவிழா கொடிகட்டிப் பறக்கும். வடக்கே 5 நாள்களுக்கு கள்ளழகர் திருவிழா மதுரை குலுங்க குலுங்க நடைபெறும். சித்திரைத் திருவிழாவிற்காக கள்ளழகர் பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடனாக கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீர் பீச்சு அடித்து கள்ளழகரைக் குளிரச் செய்வதைத் தலைமுறை தலைமுறையாகத் தொன்றுதொட்டுச் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்வில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பக்தர் அணியும் சல்லடம் எனப்படும் பல வண்ணங்கள் நிறைந்த ஆடை, தலையில் கட்டும் உருமா, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தோழப்பரைக் குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பு

தண்ணீர் பீச்சி அடிப்பதற்காக ஆட்டுத் தோல்களை 3 மாதங்களுக்கு முன்னரே பதப்படுத்தி அவற்றை ஆட்டுத் தோப்பறைகளாக மாற்றும் பணியில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலைச் செய்து வருகின்றனர். ஆட்டுத்தோல்களை வாங்கி தண்ணீரில் சுண்ணாம்புக்கல் சேர்த்து ஊற வைக்கிறார்கள். பின்னர், அதில் உள்ள ரோமங்களை நீக்கி 4 நாள் ஊற வைத்து, தண்ணீரில் அலசி கத்தியை வைத்து சுரண்டி அதன் பிறகு ஆவாரம் பூச்செடியைக் கொண்டு வந்து தண்ணீரில் தோலோடு ஊற வைக்கின்றனர்.

Story image

கருவப்பட்டை, கடுக்காய் ஆகியவற்றையும் சேர்த்து தண்ணீரோடு ஊற வைத்து, காய வைத்த பிறகு மீண்டும் தண்ணீரில் நனைத்து அவற்றைக் காலால் தேய்த்து அயன் செய்த மாதிரி விறைப்பாக்குகின்றனர். ஆட்டின் வலது கால் துளையில் தண்ணீர் பீய்ச்சும் அமைப்பை உருவாக்கி, இடது கால் துளையைத் தோள்பட்டையில் தொங்குவதற்கான அமைப்பாக மாற்றி தோப்பறையாக உருவாக்குகின்றனர். இதுபோன்ற பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னரே தோப்பரையாக பயன்படுகிறது.

ஒரு தோலுக்கு ரூ. 400 முதல் ரூ. 450 வரை செலவாகிறது. வாங்கும் வாடிக்கையாளர்கள் எங்கள் சிரமத்தைப் புரிந்துகொள்ளாமல் பேரம் பேசுகின்றனர் என்கிறார் மதுரை கீழமாசி வீதியில் விற்பனை செய்யும் நாகராஜ். மேலும் அவர் கூறுகையில், அழகர் சம்மந்தப்பட்ட பொருள்களைத் தயாரிப்பதில் நாங்களும் ஒரு நெறிமுறையுடன் தான் செயல்படுகிறோம் பக்தர்களும் நியாயமான முறையில் பேரம் பேசாமல் வாங்கி செல்லவேண்டும் என்கிறார்.

சிவகங்கை மாவட்டம் மணலூர் கிராமத்திலிருந்து வரும் பக்தர் கார்த்திக் கூறுகையி்ல்,

நாங்கள் பரம்பரையாகக் கள்ளழகருக்குத் தண்ணீர் பிய்ச்சி அடிக்க இங்கு வந்துதான் தோப்பரை வாங்கி செல்கிறோம். இது எங்களது குலவழக்கமாக செய்து வருகிறோம். கள்ளழகர் எங்களது குலதெய்வம், திரி எடுத்து வருவது, தண்ணீர் பீய்ச்சுவது என்பது அனைத்து மக்களும் நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கனும், நாம மட்டும் நல்லா இருந்தா பத்தாது நாடே நல்லா இருக்கனும்னு வேண்டிக்கொண்டுதான் கள்ளழகர் மனம் குளிர தண்ணீர் பீய்ச்சுகிறோம்.

வைகை ஆற்றில் தண்ணீர் பீய்ச்சிவிட்டு ராமராயர் மண்டபம் பின்னர் வண்டியூர் சென்று கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சி வணங்கிச் செல்கிறோம் என்றார்.

மதுரை மாவட்டம் அரியலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டிசாமி கூறுகையில்,

கள்ளழகருக்கு நேர்த்திக்கடனாக நாங்கள் காலம் காலமாகத் தண்ணீர் பீய்ச்சி வருகிறோம். அழகர் மலையான் மேனி மீது தண்ணீர் பீய்ச்சுவதால் நமது துன்பம் விலகும். வைகை ஆறு மற்றும் வண்டியூர் பகுதியல் சென்று தண்ணீர் பீய்ச்சுவோம் என்றார்.

கள்ளழகர் வேடமிடும் பக்தர்களின் கிரீடம்

கள்ளழகர் வேடமிட்டு வரும் பக்தர்கள் தலையில், கீரிடம் போல் தலைப்பாகை அணிந்து அதில் கிளி, மயில் தோகை வைத்து வரும்போது கள்ளழகர் நேரில் வருவது போன்ற தோற்றமளிக்கும். தண்ணீர் பீய்ச்சுவது, திரியாட்டம் ஆடுவது, கருப்பசாமி வேடமிட்டு வருபவர்களுக்குத் தலைப்பாகை அணிவது கீரிடம் சூடுவது போன்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

Story image

இது குறித்து உருமா கட்டும் தொழிலாளி திருமன் கூறுகையில்,

உருமா கட்டுவது நாங்கள் பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறோம். இதற்கு 8 முழம் சேலை வாங்கி அதனைத் தலையில் கூடை வைத்து அதில் சேலையைச் சுருட்டி கரை வரும்படி அடித்து லாவகமாக கட்ட வேண்டும். இதற்குக் கூடை கட்டு கூலி என ரூ. 500 செலவாகும். மக்கள் நல்லா இருக்கனும் என்பதற்காகப் பாட்டன் பூட்டன் காலத்திலிருந்து தொன்றுதொட்டு செய்து வருகிறோம். கள்ளழகர் வேடமிட்டு வருபவர்கள் இந்த கூடை உருமா கட்டினால் கருப்பசாமி நேரில் வருவது போல் பிரமிப்பாக இருக்கும் என்றார்.

மதுரையைச் சேர்ந்த பிரியா கூறுகையில்,

இந்தாண்டு முதல்முதலாக எனது மகன் தண்ணீர் பீய்ச்சுகிறான். அதற்காக உருமா கட்டுவதற்கான கூடை சேலை உள்ளிட்ட பொருள்கள் வாங்கி வந்து கீழமாசி வீதி தேர் அருகில் உருமா கட்ட வந்திருக்கிறோம். கஷ்டங்கள் தீர வேண்டும். கேட்டதைத் தரும் கடவுள் கள்ளழகரை வணங்கி நேர்த்திக்கடனை செலுத்துவோம் என்றார்.

மதுரை திருப்பாலையை சேர்ந்த ரெங்கநாயகி கூறுகையில்,

எனது தந்தை பல ஆண்டுகளாகக் கள்ளழகருக்குத் தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடன் செலுத்தி வந்தார். இப்போது எனது பேரன் தண்ணீர் பீய்ச்சப் பல ஆண்டுகளுக்கு முன்னரே வேண்டிக்கொண்டோம். ஆனால் இது இந்தாண்டு தான் நிறைவேறப் போகின்றது என மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

களைக்கட்டும் மதுரை குன்னத்தூர் சத்திரம்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகருக்குத் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள், அணிந்து செல்லும் ஆடைதான் சல்லடம். நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்காக, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் தயாராக வைக்கப்பட்டுள்ளது. சல்லடம் போட்டு போனா கள்ளழகரே நேரில் வந்தது போல் பக்தர்கள் அவரை இருகரம் கூப்பி வணங்குகின்றனர். இங்குச் சாதி மதம் பேதமில்லை.

Story image

குன்னத்தூர் சத்திரத்தில் முருகன் ஸ்டோர் எனும் கடை வைத்துள்ள சசிகுமார் கூறுகையில்,

சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்கள் நாங்கள் பெருமைமிக்க விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். திருக்கல்யாணத்திற்கான மீனாட்சி உடை, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக சல்லடம், தீப்பந்தம் மற்றும் கருப்புசாமிக்கான உடை மற்றும் உள்ள பொருள்கள் இவை அனைத்தும் மதுரை புது மண்டபத்தைத் தவிர வேறு எங்கும் கிடைக்காது. நாங்கள் மூன்று தலைமுறைகளாக இந்த கடையை வைத்து உள்ளோம். எங்களிடம் கருப்பசாமி ஆட்டம், திரி ஆட்டம், மீனாட்சி வேடம், சிவன் வேடமிட்டு வரும் குழந்தைகளுக்கு என அனைவருக்கும் ஆடை வழங்குகிறோம் அந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.

கிராமத்திலிருந்து வருபவர்கள் விரதம் இருந்து இங்கு வந்து ஆடை ரசித்துத் தேர்வு செய்து வாங்கி சென்று கள்ளழகரை தரிசிக்கின்றனர். நாங்களும் பக்தர்களின் மனம் அறிந்து ஆடைகள் தருகிறோம். ரூ. 400 இருந்து ஆயிரம் ரூபாய் மேல் ரகம் வாரியாக ஆடைகள் உள்ளன. எங்களிடம் ஆடைகள் தயாரிக்கும் பணியில் 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு கிரியாட்டக்காரர்களுக்கான ட்ரவுசர், குல்லா ஆகியவையும் கிடைக்கின்றன. அதுபோக அழகர் விசிறி குடை ஆகியவையும் தயாராக உள்ளது. மதுரை மட்டுமல்லாது சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து வாங்கி செல்வார்கள் மீனாட்சி கோயில் அருகே வாங்குவதைத் தெய்வ நம்பிக்கையாகக் கருதுகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.