சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்குப் பூஜைக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றும் வரும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை கோயிலில் குவிந்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. வருடாந்திர மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம், ஜன.14-இல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த 2 நாள்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 5.30 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் ஐயப்பனின் திருவாபரணங்கள் சன்னதிக்கு வந்தடைகின்றது. அதன்பிறகு புனித ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு அதன்பிறகு கருவறையில் தீபாராதனை நடைபெறும்.
அதன்பிறகு கோயில் வளாகத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பொன்னம்பலமேடு மலை உச்சியின் மீது தெய்வீக ஒளியாகக் கருதப்படும் மகரஜோதியைப் பக்தர்கள் தரிசிக்க உள்ளனர்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர் கே. ஜெயகுமார் கூறுகையில், மகரஜோதி'யைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்களாக நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் இந்தாண்டு எந்தவித இடையூறும் இன்றி இதுவரை நடைபெற்றதாகவும், இன்றும் அதேபோன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
ஐயப்ப பக்தர்கள் மகரஜோதியின்போது அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் தரிசனம் செய்வதை உறுதி செய்யும் வகையில் அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.