தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

காக்கும் கடவுள் கெங்கையம்மன்

கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீர்ப்பவராய் இருப்பவர் அன்னை கெங்கையம்மன்.

News image
Updated On :19 மே 2026, 8:02 pm IST

கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீர்ப்பவராய் இருப்பவர் அன்னை கெங்கையம்மன். ஆண்டுதோறும் வைகாசி ஒன்றாம் தேதி நடைபெறும் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசுத் திருவிழா பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் திருவிழா. ஜாதி, மத, மொழி, இன பேதமின்றி, உலகெங்கும் வாழும் குடியாத்தம் நகரம், அதன் சுற்றுப்புறப் பகுதி மக்கள் பங்கேற்கும் சமத்துவத் திருவிழா. கண்களால் சிரசுவைப் பார்த்த நொடியிலேயே உடலெங்கும் சிலிர்த்து உடலும், மனமும் உற்சாகம் பெறும் உன்னதத் திருவிழா.

வைகாசி ஒன்றாம் தேதியன்று நடைபெறும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவன்று, சிரசுவைப் பார்த்து வேண்டினால் போதும்; மனமுருக அம்மனை நினைத்தாலே போதும்; தீவினைகள் அகலும் - நல்வினைகள் தொடரும். நாடி வந்து வழிபட்டால் பாவங்கள் பொடிபடும்; சங்கடங்களைத் தீர்த்து நல்வழி காட்டுவாள். முந்நூறு ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் சிரசுப் பெருவிழா நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

150 ஆண்டுகளுக்கு முந்தைய கோயிலில் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

சித்திரை மாதம் தொடங்கியவுடன், கோயிலில் பால்கம்பம் நடுதலுடன் திருவிழா தொடங்கும். 2-ஆவது வாரத்தில் காப்புக் கட்டும் விழா நடைபெறும். நகர மக்கள் கூழ் வார்த்து, பொங்கலிட்டு அம்மனை வழிபடத் தொடங்குவர். சித்திரை மாத இறுதியில் அம்மனுக்குத் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சித்திரை 31-இல் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சிரசுப் பெருவிழா வைகாசி 1-இல் நடைபெறுகிறது.

வேண்டிய வரங்களை அருள்பாலிப்பதற்கு சாட்சியே பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தும் பல லட்சம் தேங்காய்கள்தான்.

வைகாசி ஒன்றாம் தேதியன்று நடைபெறும் சிரசுத் திருவிழாவன்று அதிகாலை 4 மணியளவில் தாரை, தப்பட்டை, மேள, தாளங்கள் முழங்க அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரப்படும். பின்னர் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, சிரசு ஊர்வலம் புறப்படுகிறது. தரணம்பேட்டை என்.ஜி. செட்டித் தெரு, காந்தி ரோடு, ஜவாஹர்லால் தெரு, கோபாலபுரம் வழியாக அம்மன் சிரசு சுமார் 1 கி.மீ. தொலைவு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து, கோயிலை காலை 9 மணிக்கு வந்தடையும். 5 மணி நேர ஊர்வலத்தின்போது, அம்மன் சிரசு மீது பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர்கள், பூமாலைகள் போன்றவற்றை தூவி வரவேற்பது உண்டு. சிரசுவின் மீது பட்டு, சிதறும் பூக்களைப் பொக்கிஷம் போல பக்தர்கள் எடுத்துச் செல்வர்.

ஊர்வலத்தின்போது, அம்மனும் தாய் வீட்டுக்கு வருவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார். ஆட்டம், பாட்டத்துடன் அம்மன் உற்சாகமாக அழைத்து வரப்படுவார்.

கோயிலில் சாந்த சொரூபியாய் அம்மன்:

அம்மன் சிரசு கோயிலுக்கு வந்ததும், சிரசு மண்டபத்தில் பொருத்தப்படும். பின்னர் 10 மணிக்கு ஊர் மக்களின் சார்பில் கூழ்வார்த்தல் நடைபெறுகிறது. இதன்

பிறகு கெங்கையம்மன் சாந்தம் அடைந்து, சாந்த சொரூபியாக மாறுகிறாள். காலை 10 மணிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் இரவு வரை தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பத்தைத் தனதாக்கிக் கொண்டு, பக்தர்களுக்கு நற்பயன்களை அளித்து அருள்பாலிக்கிறார்.

காலையில் கெங்கையம்மன் கோயிலுக்கு சிரசு வரும்போது, உற்சாகமாய் சந்தோஷ முகத்தில் வரும் சிரசுவை காண முடியும். அதே நேரத்தில் இரவு வீடு செல்லும்போது, கண்ணீர்விட்டு அழுதபடி சோகமாய் திரும்புவதைக் காணமுடியும். இந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது பகுதி மக்களுடன் ஆட்டம், பாட்டமாக வந்து 'ஊர் மாலை' அணிவித்து மகிழ்வர்.

இதையடுத்து, மாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு தாய் வீட்டுக்கு விடை கொடுத்து, கெங்கையம்மன் புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்வார். கெளண்டன்ய மகாநதி, ராஜேந்திர சிங் தெரு, ஆழ்வார் முருகப்ப முதலி தெரு ஆகிய தெருக்களின் வழியாகச் சென்று, சுண்ணாம்புப் பேட்டை சலவைப் படித்துறையில் சிரசு ஊர்வலம் நிறைவு பெறுகிறது. தாய்வீட்டிலிருந்து விடை பெறும் வருத்தத்தில் வாடிய முகத்துடன் அம்மன் சிரசு காணப்படும். அப்போது கெளண்டன்ய மகா நதிக்கரையில் கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கண்ணைக் கவரும் புஷ்பப் பல்லக்கு:

சிரசுப் பெருவிழாவுக்கு மறுநாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. திருவிழாவுக்கு 3-ஆவது இரவு புஷ்ப பல்லக்கு விழா நடைபெறுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் ஒரு பல்லக்கு, தரணம்பேட்டையில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சார்பில் இரண்டாம் பல்லக்கு, குடியாத்தம் நகர, வட்ட அகமுடையார் சங்கம் சார்பில் நடுப்பேட்டையில் மூன்றாவது பல்லக்கு என மூன்று பல்லக்குகள் வீதியுலா வரும்.

இதைத் தொடர்ந்து, அடுத்த சில நாள்களில் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இவ்வாறாக, வைகாசிப் பெருவிழா 48 நாள்கள் ஒரு மண்டலமாக நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.