Enable Javscript for better performance
(The Tamil Nadu Prohibition of Sm| புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002- Dinamani

சுடச்சுட

  

  தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002

  By வழக்கறிஞர் சி.பி. சரவணன்  |   Published on : 01st November 2019 01:14 PM  |   அ+அ அ-   |    |  

  spit

   

  இந்தியர்களுக்கு கண்ட,கண்ட இடங்களில் எச்சில் துப்பி வைக்குமொரு பழக்கம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. எச்சிலில் 99 சதவீதம் நீர் தான் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், அமிலங்கள், நல்ல பாக்டீரியாக்கள். நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் ஆகிய அத்தனையும் சேர்ந்தே இருக்கின்றனவாம். 

  மேலும், காசநோய், ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல், ஹெர்பஸ் வைரஸ் போன்ற பொது வைரஸான சைட்டோமெகலோவைரஸ் மற்றும் சுரப்பிகள் சார்ந்த காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு காரணமான எப்ஸ்டென் - பார் வைரஸ் போன்றவை எச்சிலின் மூலமாகப் பரவுகின்றன.

  இந்தியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தலைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அதற்கென தண்டனைச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகும் இப்போதும் பலர் திருந்திய பாடில்லை.

  ஆனால் பாருங்கள், இதோ நமது அண்டை நாடான சிங்கப்பூரில் எச்சில் கூட தெருவில் துப்பமாட்டர்கள். சிங்கபூரில் சாலையில் எச்சில் துப்பினால் சிறை தண்டனை.

  1990 ஆம் ஆண்டு வரை எச்சில் துப்புவது குற்றம் என்றும், அவ்வாறு செய்தால் 5 பவுண்ட் அபராதம் என்று பிரிட்டனில் நடைமுறை இருந்து வந்தது.

  அப்படியென்றால் இச்சட்டங்கள் இந்தியாவில் இல்லையே என்று கேட்பீர்கள், தமிழ்நாட்டிலும் கூட இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டன. ஆனால் அவற்றுக்கான விதிகள் மட்டும் இன்னமும் வகுக்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் இன்று தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002 பற்றிப் பார்போம்.

  தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002
  (The Tamil Nadu Prohibition of Smoking and Spitting Act, 2002)

  (சட்ட எண். 4/2003)

  தமிழ்நாடு மாநிலத்தில் பொதுப்பணியிடத்திலோ அல்லது பொதுப் பயன்பாட்டிற்கான இடத்திலோ மற்றும் மக்கள் சேவைக்கான ஊர்தியிலோ, புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்வதற்கும் அதனோடு தொடர்புடைய பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்கானதொரு சட்டம். 

  இந்தியக் குடியரசின் ஐம்பத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக -

  பிரிவு 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும் தொடக்கம்:-


  (1) இந்தச் சட்டம் 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடைசெய்தல் சட்டம் என வழங்கப்பெறும்.
  (2)    இது தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும்.
  (3) இஃது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக் குறிக்கக்கூடிய அத்தகைய தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும். 

  வரம்புரை:

  இந்தச் சட்டத்தின் வெவ்வேறு வகைமுறைகள் வெவ்வேறு தேதிகளில் நடைமுறைக்கு வருமாறு குறிக்கப்படலாம் என்பதோடு, இந்தச் சட்டத்தின் தொடக்கம் என்பதாக வரைமுறை எதிலும் உள்ள சுட்டுகை எதுவும், அந்த வகைமுறை நடைமுறைக்கு வருவதைக் குறிக்கின்ற சுட்டுகையாகப் பொருள் கொள்ளப்படுதல் வேண்டும். 

  பிரிவு 2. பொருள் வரையறைகள்: இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுபொருள் குறித்தாலன்றி:-
  (a)    “விளம்பரம்” என்றால், புகை பிடித்தலை அல்லது புகையிலை மெல்லுதலை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கின்ற (Promoting) விளைவை ஏற்படுத்தும் அறிவிப்பு, சுற்றறிக்கை, சுவரொட்டி, துண்டுப்பிரசுரம், விளம்பரப் பலகைகள் மீது காட்சிக்கு வைத்தல் அல்லது ஒளி, ஒலி, புகை, வாயு ஆகியவற்றால் கண்ணுக்குப் புலப்படக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட காட்சிப் பொருள் மூலமாகவோ அல்லது வேறு முறையிலோ காட்சிக்கு வைத்தல் என்பதனை உள்ளடக்கி, அவ்வாறே பொருள்படும், மற்றும் “விளம்பரம் செய்” என்னும் சொற்றொடரானது அவ்வாறே பொருள் கொள்ளப்படுதலும் வேண்டும். 
  (b)    “அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்” என்றால் 10-ஆம் பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட நபரொருவர் என்று பொருள்படும். 
  (c)    “அரசு” என்றால் மாநில அரசு என்று பொருள்படும். 
  (d)    “பொதுப் பணியிடம் அல்லது பொதுப்பயன்பாட்டிற்கான இடம்” என்றால் 3-ஆம் பிரிவின்படி விளம்பப்பட்ட (declared) இடம் என்று பொருள்படுவதோடு, அரங்கம், மருத்துவமனைக் கட்டிடங்கள், மக்கள் நல்வாழ்வு நிலையங்கள், திரையரங்கு அல்லது மாநாட்டு அரங்குகள், கேளிக்கை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள், வணிக அமைப்பிடங்கள், பொது அலுவலகங்கள், நீதிமன்றக் கட்டடங்கள், கல்வி நிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள். விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள், கடைவீதிகள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வமான அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளடங்களாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மத சம்பந்தமான இடங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து போகும் இவை போன்ற இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். ஆனால் திறந்த வெளியிடங்கள் (open place) எதனையும் உள்ளடக்காது;
  (e)    “பொதுமக்கள் சேவை ஊர்தி” என்றால் 1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (35) ஆம் கூறில் பொருள் வரையறை செய்யப்பட்டவாறான, அதே பொருளையே கொண்டிருக்கும்.
  (f)    “மத சம்பந்தமான இடம்” என்றால் மத வழிபாடு செய்யப்படும்போது இடமாகப் பயன்படுத்தப்படும், கோயில், கிருத்துவ ஆலயம், மசூதி, மடம் அல்லது அது எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அத்தகையதொரு இடம் என்று பொருள்படும்;
  (g)    “புகைப்பிடித்தல்” என்றால் குழல், சுருட்டிய மேலுறை அல்லது பிற கருவி எதன் உதவியுடனும் சிகரெட், சுருட்டு, பீடி அல்லது பிறவாறான வடிவத்தில் புகையிலையைப் பிடித்தல் என்று பொருள்படும்; 
  (h)    “எச்சில் உமிழ்தல்” என்றால் புகையிலை, பான்மசாலா, குட்கா, பாக்கு சேர்த்த வெற்றிலை எந்த உருவத்திலும் அல்லது புகையிலைத் தயாரிப்பு அல்லது புகையிலை அடங்கிய பொருள்கள் எதனையும் மென்று பின்னர், வாவியிருந்து எச்சிலை உமிழ்தல் அல்லது மூக்குப் பொடியை உள்ளிழுத்துவிட்டு மூக்கு வழியே அதை வெளித்தள்ளுதல் என்று பொருள்படும். 

  பிரிவு 3. பொதுப்பணியிடங்களை, பொதுப்பயன்பாட்டிற்கான இடங்களை விளம்புதல்: -

  அரசானது அறிக்கையின் வாயிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பொதுப்பணியிடம் அல்லது பொதுப்பயன்பாட்டிற்கான இடம் எதனையும் இந்தச் சட்டத்தின் நோக்கத்திற்கான இடம் என விளம்பலாம். 

  பிரிவு 4. பொதுப்பணியிடத்திலும் பொதுப்பயன்பாட்டிற்கான இடத்திலும் புகைப் பிடித்தலும் எச்சில் உமிழ்தலும் தடைசெய்யப்படுதல்:-

  பொதுப்பணியிடம் அல்லது பொதுப் பயன்பாட்டிற்கான இடம் எதிலும் நபரெவரும் புகைப்பிடித்தலோ, எச்சில் உமிழ்தலோ கூடாது. 

  பிரிவு 5. பொது மக்கள் சேவைக்கான ஊர்தியில் புகை பிடிப்பதும் எச்சில் உமிழ்வதும் தடை செய்யப்படுதல்: -

  1988-ஆம் ஆண்டு இயக்கூர்திகள் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, பொதுமக்கள் சேவைக்கான ஊர்தி எதிலும் நபரெவரும் புகைப்பிடித்தலோ அல்லது எச்சில் உமிழ்தலோ கூடாது. 

  பிரிவு 6. புகைப்பிடித்தல் மற்றும் (புகையிலை) சுவைத்தல் குறித்த விளம்பரம் தடை செய்யப்படுதல்: -

  அப்போதைக்கு நடைமுறையிலுள்ள பிற சட்டம் எதிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், பணியிடம் அல்லது பயன்பாட்டிற்கான பொது இடம் எதிலும் மற்றும் பொதுமக்கள் சேவைக்கான ஊர்தி எதிலும் புகைப்பிடித்தலை அல்லது புகையிலை, பான்மசாலா அல்லது குட்கா அல்லது புகையிலைத் தயாரிப்பு எதையும் அல்லது வேறுபெயர் எதனாலும் அது வகைப்படுத்தப்படுமானாலும் கூட, அத்தகைய புகையிலையை உள்ளடக்கியிருக்கிற தயாரிப்புகள் எவற்றையும் சுவைப்பதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உபயோகிக்கத் தூண்டுகின்ற (promoting) பொருள் எதனையும், நபரெவரும் விளம்பரப்படுத்துவதோ அல்லது விளம்பரப்படுத்துமாறு செய்வித்தலோ கூடாது. 

  பிரிவு 7. சிகரெட் முதலானவற்றை சேமித்தல், விற்பனை செய்தல் பங்கீடு செய்தல் ஆகியன தடை செய்யப்படுதல்: -

  நபரெவரும், தாமாகவோ, அல்லது அவர்தம் சார்பாக நபரெவருமோ கல்லூரி, பள்ளி அல்லது பிற கல்வி நிலையங்கள் எவற்றையும் சுற்றியுள்ள நூறு மீட்டர் பரப்பிடமொன்றிற்குள்ளாக சிகரெட்டுகள், பீடிகள், சுருட்டுகள், புகையிலையுடனான சுப்பாரி, ஜர்தா, மூக்குப்பொடி அல்லது அத்தகைய பிற புகையிலை அடங்கியுள்ள புகைக்கும் பொருள் அல்லது சுவைக்கும் பொருள்கள் எவற்றையும் சேமித்து வைத்தலோ, விற்றலோ அல்லது பங்கீடு செய்தலோ கூடாது. 

  பிரிவு 8. அறிவிப்புப் பலகை நிறுவி காட்சிக்கு வைத்தல்: -

  பொதுப்பணியிடதை அல்லது பொதுப் பயன்பாட்டிற்கான இடத்தைப் பொறுப்பில் கொண்டுள்ள நபர் ஒவ்வொருவரும், அவ்விடத்திற்கு உள்ளே அல்லது வெளியிலோ கண்ணுக்குத் தெரியும்படி எடுப்பானதோர் இடத்தில் “புகைக்கக் கூடாத இடம்”, எச்சில் துப்பக்கூடாத இடம் மற்றும் புகைப்பதும் எச்சில் உமிழ்வது குற்றமாகும்” என்பதாக அறிவிக்கும் பலகையொன்றை எடுப்பாக நிறுவி காட்சிக்கு வைத்தல் வேண்டும். 

  பிரிவு 9. தண்டங்கள்: - நபரெவரும்:-

  (i)    4, 5 அல்லது 8 ஆம் வகைமுறைகளை மீறுகிறபோது, நூறு ரூபாய் வரையிலான பணத்தண்டனை விதித்துத் தண்டிக்கத்தக்கவராவார். மற்றும், இரண்டாம் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்செயலுக்கு குறைந்த பட்ச பணத்தண்டனை இருநூறு ரூபாய் எனினும் அத்தண்டனை ஐந்நூறு ரூபாய் வரையில் விதிக்கப்படலாம் என்ற வகையில் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
  (ii) 6-ஆம் அல்லது 2ஆம் பிரிவின் வகைமுறைகளை மீறுகிறபோது ஐநூறு ரூபாய் வரையிலான பணத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்படத்தக்கவராவார்; மற்றும் இரண்டாம் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்செயலுக்கு, மூன்று மாதகால அளவிற்கு நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனை அல்லது குறைந்தபட்ச பணத்தண்டனை ஐந்நூறு ரூபாய் எனினும் அத்தண்டனை ஆயிரம் ரூபாய் வரையில் விதிக்கப்பட்டோ அல்லது இரண்டும் விதித்தோ தண்டிக்கப்படுதல் வேண்டும்.

  பிரிவு 10. நபரெவருக்கும் இந்தச் சட்டத்தின்படி செயலாற்றும் அதிகாரமளிக்க அரசுக்கு உள்ள அதிகாரம்: -

  அரசானது, அறிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின்படிச் செயலாற்றத் தகுதி வாய்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு அதிகாரமளிக்கலாம்.

  பிரிவு 11. 10-ஆம் பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட நபர் பொது ஊழியராதல் வேண்டும் என்பது:-

  10-ஆம் பிரிவின்படி அதிகாரமளிக்கப்பட்ட நபர் ஒவ்வொருவரும், இந்தியத்தண்டனைச் சட்டத்தின் 21-ஆம் பிரிவின் பொருளின்படி பொது ஊழியரொருவராகக் கொள்ளப்படுதல் வேண்டும். 

  பிரிவு 12. மீறுபவர்களை வெளியேற்றும் அதிகாரம்: -

  அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர் எவருமோ அல்லது ஆய்வாளரின் படிநிலைக்கு கீழல்லாத காவல்துறை அலுவலர் எவருமோ, இந்தச் சட்டத்தின் வகைமுறைகளை மீறுகிற நபரெவரையும், பொதுப் பயன்பாட்டிற்கான இடத்திலிருந்தோ வெளியேற்றலாம்; மற்றும் பொதுமக்கள் சேவைக்கான ஊர்தியொன்றின் ஓட்டுநர் அல்லது நடத்துநர் எவரும், அப்பொதுமக்கள் சேவைக்கான ஊர்தியில், இந்தச் சட்டத்தின் விதிமுறைகளை மீறுகிற நபரெவரையும் அப்பொதுமக்கள் சேவைக்கான ஊர்தியிலிருந்து வெளியேற்றலாம். 

  பிரிவு 13. குற்றச் செயல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்: -

  நீதிமன்றம் எதுவும் 4, 5, 8 ஆகிய பிரிவுகளின் கீழ்வரும் குற்றச் செயல்களைப் பொறுத்த அளவில், அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரொருவரின் எழுத்துருவில் செய்து கொள்ளப்பட்ட முறையீட்டொன்றின் பேரில் அல்லாமலும் மற்றும் 6-ஆம் மற்றும் 7 ஆம் பிரிவின் படியான குற்றச்செயல்களைப்பொருத்தவரையில் காவல் சார்பு ஆய்வாளரின் படிநிலைக்குக் கீழல்லாத காவல்துறை அலுவலரொருவரின் எழுத்துருவிலான அறிக்கையொன்றின் பேரில் அல்லாமலும், இந்தச் சட்டத்தின்படியான குற்றச்செயல் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. 

  பிரிவு 14. இந்தச் சட்டத்தின்படியான குற்றச் செயல்கள் சுருக்கமான முறையில் விசாரணை செய்யப்படுதல் வேண்டும் என்பது: -

  இந்தச் சட்டத்தின்படியான குற்றச் செயல்கள் அனைத்தையும் 1973-ஆம் ஆண்டு குற்றவிசாரணை முறை தொகுப்புச் சட்டத்தின்படி, சுருக்கமுறை விசாரணைக்கு வகை செய்யப்பட்டாவாறு சுருக்கமான முறையில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும்.

  பிரிவு 15 அதிகார ஒப்படைப்பு: -

  அரசானது அறிவிக்கையின் வாயிலாக, இந்தச் சட்டத்தின்படி அதனால் செலுத்தப்படக்கூடிய, 18-ஆம் பிரிவின் கீழ் விதிகளைச் செய்வதற்கான அதிகாரம் நீங்கலான, அதிகாரம் எதுவும் அதில் குறிப்பிடக்கூடிய அத்தகைய அலுவலரால் அதில் குறித்துரைக்கப்படக்கூடிய நிபந்தனைகள் எவையேனுமிருப்பின், அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டுச் செலுத்தப்படலாம் எனப் பணிக்கலாம்.

  பிரிவு 16. குற்றச் செயல்களை இணக்கமாகத் தீர்த்தல்: -

  இந்தச் சட்டத்தின்படியாகவோ அல்லது அதன் கீழோ, தண்டிக்கத்தக்க குற்றச் செயல்கள் எவற்றையும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, அரசு அல்லது அதனால் இதன்பொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட நபர் எவரும், இதுகுறித்த பொது அல்லது தனி ஆணையின் வாயிலாக குற்றச் செயல்கள் எவற்றையும் இணக்கமாகத் தீர்த்துக்கொள்ளலாம். 

  பிரிவு 17. நிறுவனங்களால் செய்யப்படுகின்ற குற்றச் செயல்கள்: - 

  (1). இந்தச் சட்டத்தின் கிழ் ஒரு குற்றச் செயல் ஒரு நிறுவனத்தால் செய்யப்பட்டிருந்து, அக்குற்றச்செயல் செய்யப்பட்ட காலத்தில் அந்நிறுவனத்தின் அலுவலை நடத்திவரும் அந்நிறுவனத்தைத் தம் பொறுப்பில் கொண்டிருந்தவரும், அதற்குப் பொறுப்பாயிருந்தவரும் மற்றும் அதோடுகூட அந்த நிறுவனமும், அக்குற்றச் செயலைச் செய்திருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, அதன்படியே மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும். 

  வரம்புரை:

  ஆனால், இந்த உட்பிரிவில் அடங்கியுள்ள எதுவும், அத்தகைய நபரெவரும், அக்குற்றச் செயலானது தமக்கு தெரியாமலேயே செய்யப்பட்டிருக்கின்றது என்றோ அல்லது அக்குற்றச்செயல் செய்யப்படூவதைத் தடுப்பதற்கான உரிய முயற்சி அனைத்தையும் தாம் மேற்கொண்டார் என்றோ, அவர் மெய்யிப்பின்பாராயின், இந்தச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ள தண்டனை எதற்கும் அவரை உள்ளடக்காது. 

  (2). (1)-ஆம் உட்பிரிவில் என்ன அடங்கியிருந்த போதிலும், இந்தச் சட்டத்தின்படியான அத்தகைய குற்றச்செயல் ஏதேனும் நிறுவனத்தால் செய்யப்பட்டிருந்து, அக்குற்றச் செயலானது, அந்நிறுவனத்தின் இயக்குநர், மேலாளர், செயலாளர், அல்லது பிற அலுவலர் எவரொருவரின் இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ செய்யப்பட்டிருக்கின்றது அல்லது அவருடைய அசட்டை எதனாலும் செய்யப்பட்டதென சாட்டத்தக்கதாக இருக்கின்றது என மெய்ப்பிக்கப்படுமிடத்து, அத்தகைய இயக்குநர், மேலாளர், செயலாளர் அல்லது பிற அலுவலர் மீது அதன்படியே மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும் வேண்டும். 
  விளக்கம்: - இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக- 
  (a)    “நிறுவனம்” என்றால், கூட்டு நிறுவனம் என்று பொருள்படுவதோடு, நிறுவனம் அல்லது பிற தனி நபர்களின் சங்கத்தையும் உள்ளடக்கும்; மற்றும்,
  (b)    “இயக்குநர்” என்றால் ஒரு நிறுவனம் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் கூட்டாளி என்று பொருள்படும். 
  பிரிவு 18. விதிகளைச் செய்வதற்கான அதிகாரம்: 
  (1)    அரசு, அறிவிக்கை வாயிலாக இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையுமோ அல்லது அவற்றில் எதையுமோ நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலாம். 
  (2)    (a) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் விதிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசிதழில் வெளிப்படுத்துதல் வேண்டும். மற்றும், குறிப்பிட்டதொரு நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்ற வெளிப்படையாகச் சொல்லாப்பட்டாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும். 
  (b). இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்படும் அறிவிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்டதொரு நாளில் அவை நடைமுறைக்கு வருதல் வேண்டுமென்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலன்றி, அவை வெளியிடப்படும் தேதியில் நடைமுறைக்கு வருதல் வேண்டும். 
  (3)    இந்தச் சட்டத்தின்படி செய்யப்படும் விதி ஒவ்வொன்றும் அல்லது பிறப்பிக்கப்படும் அறிவிக்கை () ஒவ்வொன்றும் அது செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவைமுன் வைக்கப்படுதல் வேண்டும். மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ அதையடுத்து வரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர், அத்தகைய விதி அல்லது அறிவிக்கை எதையும் அப்பேரவை மாற்றியமைக்குமாயின் அல்லது அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ செய்யப்படவோ அல்லது பிறப்பிக்கப்படவோ கூடாது என்று அப்பேரவை முடிவு செய்யுமாயின், அதன் பின்பு அந்த விதியோ அல்லது அறிவிக்கையோ, அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செயல்வடிவம் பெறுதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப செயல்வடிவம் பெறாது போகச் செய்வது எதுவும், அந்த விதியின்படியோ அல்லது அறிவிக்கையின்படியோ, முன்னதாகச் செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறில்லாமல் இருத்தல் வேண்டும்.

  kattana sevai