சுடச்சுட

  

  'ராமாயணத்தை  சினிமாவாக எடுக்க ஆசை'-இயக்குனர் பாலு மகேந்திரா

  By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  |   Published on : 14th October 2016 12:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  balu_mahendira

   

  கேள்வி: ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான லைட்டிங்கை அதிகம் உபயோகிப்பார்கள்.  நீங்கள் எப்படி?

  பதில்: நான் ஒவ்வொரு படத்திலும் மாறுபாடான ஒளியமைப்பையே  செய்கிறேன். எந்த ஒரு ஸ்டையிலையும் தொடர்ந்து பின்பற்றுபவனல்ல. கதைக்கும் குறிப்பிட்ட காட்சிக்கும் எந்தவகையான ஒளி அமைப்பு தேவையோ, அப்படித்தான் நான் லைட்டிங் செய்கிறேன்.  

  கே: நீங்கள் இயங்கி ஒளிப்பதிவு செய்த படங்கள் எல்லாம் தரமாக இருப்பதற்கு காரணங்கள் பல. ஆனால் இப்போது மற்றவர்கள் இயக்க, நீங்கள் கமர்ஷியல் என்று கூறத்தக்க படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்கிறீர்கள்.உங்கள் தரம் முத்திரை தாழ்ந்து விட்டதா?

  ப: என்னுடைய டைரக்ஷனாக இருந்தாலும் சரி.மற்றவர்கள் இயக்குபவையாக இருந்தாலும் சரி.  நான் எதிர்பார்க்குமளவில் ஒளிப்பதிவு அமைந்து விடும். இந்த தரம் கூட கதையையும், என்னோடு பணியாற்றும் குழு, வேலை செய்யும் இடத்தை பொறுத்தே அமையும். படத்தின் திரைக்கதை பிடித்திருந்தால் என்னுடைய  ஒளிப்பதிவின் தரம் அதிகமாகும். சில படங்களை கதைக்காகவும், அதன் திரைக்கதை அமைப்புக்காகவும் ஒப்புக் கொண்டு செய்கிறேன்.

  கே: ஒளிப்பதிவு திறமையை எடுத்துக் காட்டும் வகையில் ஏதாவது சாதனைகளை செய்ய நீங்கள் நினைத்திருக்கிறீர்களா?

  ப: 'சூப்பர்மேன்' படத்தைப் போலவோ, '2001 ஸ்பேஸ் ஓடிசி' படத்தைப் போலவே  ஒளிப்பதிவு செய்ய நான் நினைக்கவில்லை என்றாலும், நம்மிடமுள்ள ராமாயண காவியத்தை படமெடுக்க விரும்புகிறேன். எப்பொழுது என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

  கே: மகிழ்ச்சி தருவது இயக்கும் போதா அல்லது ஒளிப்பதிவு செய்யும் போதா?

  ப; நான் உருவாக்கும் கலைஞன். எனக்கு மிக மகிழ்ச்சியை கொடுப்பது நான் என் விருப்பப்படி உருவாக்கும்  போது தான்.உங்கள் கேள்வியின் படி பார்க்கும் போது இயக்கும் போதுதான்.   

  கே: உங்களது படங்கள் எல்லாம் குறிப்பாக, 'மூடு பனி' , 'அழியாத கோலங்கள்' இவைகள் ஆங்கிலப் படத்தின் தழுவல்கள் என்று கூறினால் ஒப்புக்கொள்வீர்களா?

  ப: மூடுபனியை எடுத்துக் கொண்டால் நாவலாசிரியர் ராஜேந்திரகுமாரின் கதை. ஆனால் அந்த கதையில் இருந்து 40 சதவிகித்தைத்தான் எடுத்துக் கொண்டேன். மீதமுள்ள 60 சதவீதத்தை 'ஜான் பவுலர்' என்ற கதாசிரியர் எழுதிய 'தி கலெக்டர் ' என்ற ஆங்கில புத்தகத்தில் இருந்து நான் உபயோகித்தேன். இந்த இரண்டு கதைகளும் இணைந்துதான் மூடுபனி. 'சைக்கோ' படம் கூட இதனை ஒத்திருக்கிறது என்பது சிலரது வாதம். ஆனால் நான் ஒப்புக் கொள்ளத்  தயாராயில்லை. அழியாத கோலங்களை 'சம்மர் ஆப் லைஃ புக்' என்ற ஆங்கிலப் படம் என்று நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளத்  தயாராக இல்லை.

  இதுவரை எந்த படத்தையும் தழுவி நான் படமெடுக்கவில்லை. ஆனால் அபப்டிக் செய்வது குற்றம் என்றும் சொல்லவில்லை. தழுவுவதோ மொழி மாற்றம் செய்வதோ குற்றம் என்று ஆகிவிட்டால் கம்பராமாயணம் தமிழுக்கு கிடைத்திருக்காது.

  கே: மறைந்த உங்களது மனைவி ஷோபாதான் உங்ககளது படங்களின் தனிச்சிறப்பு என்று சொல்லலாமா?

  ப; அம்மு (ஷோபா) இல்லாத பசியை நினைத்து கூட பார்க்க முடியாது.இந்த ரீதியில் பார்க்கப் போனால் அம்மு இல்லை என்றால் , அந்தப் படம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு எனது படங்களில் ஒன்று கூட அமையவில்லை.

  பேட்டி: சலன்

  படங்கள்: ஆருரான்  

  (சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.82 இதழ்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai