தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தி.ஜானகிராமன்

தஞ்சை மாவட்டப் பேச்சும் நையாண்டியம் தனது கதைகளின் தனித்தன்மைகளாகக் கொண்ட படைப்பாளர் தி.ஜா என அன்பாக அழைக்கப்பெறும்
தமிழ் அறிஞர்கள் அறிவோம்: தி.ஜானகிராமன்

தஞ்சை மாவட்டப் பேச்சும் நையாண்டியம் தனது கதைகளின் தனித்தன்மைகளாகக் கொண்ட படைப்பாளர் தி.ஜா என அன்பாக அழைக்கப்பெறும் சிறுகதையாசிரியர். விடுதலைக்குப் பிந்திய சிறுகதை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்.

நவீன இலக்கிய எழுத்தாளர்களுள் மிக அதிகமாகப் பேசப்பட்டவர் தி.ஜானகிராமன். அதிலும் "அம்மா வந்தாள்' எனும் நாவல் எழுதியதற்காக அவர், அவரது ஜாதியிலிருந்தே நீக்கப்பட்டார். ஏனெனில் தி.ஜா.வின் படைப்புகளில் வரும் பெண்கள் பெரும்பாலும் மரபு மீறியவர்களாகவே இருந்தனர். ஆனால், அவர்களின் பாத்திரப் படைப்பை நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால் அப்பெண்கள் நம் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பிறப்பு: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் தேவக்குடி என்னும் சிற்றூரில் 1921 ஜூன் 18 ஆம் தேதி மிகச்சிறந்த சொற்பொழிவாளரான தியாகராச சாஸ்திரி என்னும் இசைக்கலைஞருக்கு பிராமணக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மரபு காப்பதில் ஆர்வமுள்ள பழமைப்பிடிப்புள்ள பொருளாதார வசதிகொண்ட குடிம்பம்.

தி.ஜா. பிறந்த ஆறாவது மாதமே குடும்பம் கும்பகோணத்தில் குடியேறியது. அதன்பின் தஞ்சைக்கு மாற்றலானது.

கல்வி: தஞ்சாவூர் புனித பீட்டர் பள்ளியிலும், சென்ரல் பிரைமரிப் பள்ளியிலும் தொடக்கக்கலிவி கற்றார்.  1929 முதல் 1936 வரை கல்யாண சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்தார். தனது பள்ளிப்படிப்பை சக்தி வைத்தியம் கதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

கல்லூரி படிப்பு: 1936 முதல் 1940 வரை கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும், பி.ஏ.வும் பயின்றார். 1942 முதல் 1943 வரை எல்.டி.பட்டம் பெற்றார்.

நண்பர்கள்: கரிச்சான் குஞ்சு என்கிற நாராயணசாமி, வேள்வித்தீ நாவலாசிரியர் எம்.வி.வெங்கட்ராமன் ஆகியோர் தி.ஜாவிற்கு நண்பர்களாயிருந்தனர்.

முன்னோடி: கல்லூரியில் படிக்கும்போது கு.ப. ராசகோபாலனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் எனவே தனது எழுத்துலக முன்னோடியாக கு.ப.ராசகோபாலனையே சொல்லிக்கொள்வார்.

பணிகள்: 1943 - 44-ல் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். 1944 - 45-ல் சென்னை எழும்பூர் உயர்நிலைப்பள்ளியில், 1945 முதல் 1954 வரை 9 ஆண்டுகள் தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையிலும், குத்தாலம் பள்ளிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

வானொலி: 1945 முதல் 1960 வரை சென்னை வானொலி நிலையத்தில் 14 ஆண்டுகள் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றினார்.

1968 முதல் 1974 வரை தில்லி வானொலி நிலையத்தில் உதவித் தலைமை கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணிபுரிந்தார். பின்பதவி உயர்வு பெற்று 1974 முதல் 1981 வரை தலைமை கல்வி அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வானொலி நிலையங்களில் பணியாற்றியபோது அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், மலேஷியா முதலிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். சமையற்கலையிலும் வல்லுநராகத் திகழ்ந்த தி.ஜா., இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவராக விளங்கினார்.

இதழ் ஆசிரியர்: பணி ஒய்வுக்குப் பிறகு தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சுதந்திர உணர்வு: கல்லூரியில் படித்த காலத்திலேயே அவருக்குச் சுதந்திரப் போராட்ட உணர்வு மேலோங்கி இருந்த காலத்தில் இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது காந்தி, நேரு ஆகியோர் மீது பேரன்பு கொண்ட தி.ஜா 1936-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி கும்பகோணம் பெசண்ட் தெருவில் நடைபெற்ற நேரு பேசிய கூட்டத்தில் கலந்துகொள்ள கல்லூரியில் இசைவுபெறாத விடுப்பு எடுத்தமைக்கு தி.ஜா. எட்டணா அபராதம் கட்டினார். அந்த அபராதத்தை எதிர்த்து கல்லூரியில் வேலை நிறுத்தமும் நடந்தது. இவருடைய செம்பருத்தி, மோகமுள் ஆகிய நாவல்களில் சுதந்திர தாகம், அந்நியத்துணி எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியல் போன்றவற்றைக் காணமுடியும்.

1937 ஆம் ஆண்டு தம் முதல் கதையான "மன்னித்து விடு" என்னும் சிறுகதையில் உப்பு சத்தியாக்கிரகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழி அறிவு: தந்தை சிறந்த புராணச் சொற்பொழிவாளர். வடமொழி அறிவும் பெற்றவர். எனவே தி.ஜாவும் தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழிகளிலும் புலமை உடையவராக இருந்தார். கும்பகோணம் ஆங்கிலப் பேராசிரியர் சீதாராமையர் மூலம் ஆங்கில இலக்கியங்களை அறிந்தவர், கல்லூரிப் படிப்பை முடித்து, பணிக்குச் செல்லாமல் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஐரோப்பிய இலக்கியங்களைக் கற்றார்.

தன் தந்தையாருடன் புராண இசைச் சொற்பொழிவுகளுக்குச் சென்றமையாலும் பின்பாட்டுப் பாடினமையாலும் இளமையிலேயே இசையறிவைப் பெற்றார். உமையாள்புரம் சாமிநாதையர், மிருதங்கம் சுப்பையர், பத்தமடை சுந்தரம் ஐயர் ஆகியோரை இசைத்துறை ஆசிரியர்களாகக் கொண்டிருந்தார்.

எழுத்துப்பணி: 85 சிறுகதைகளை எழுதி சிறுகதையுலகில் தனிப்பெரும் அரசராக விளங்கினார் தி.ஜானகிராமன்.

சிறுகதைத் தொகுதிகள்: 7

கெட்டுமேளம் - 1947

சிவப்பு ரிக்ஷா - 1950

அக்பர் சாஸ்திரி - 1963

யாதும் ஊரே - 1967

பிடி கருணை - 1974

சக்தி வைத்தியம் - 1978 (தமிழுக்கான சாகித்ய அகாதமி பரிசு)

மனிதாபிமானம் - 1981 என்னும் தலைப்பில் தொகுதிகளாக வெளிவந்தன். பத்திரிக்கையில் வெளியாகி நூல் வடிவில் வெளிவராத கதைகளைத் தொகுத்து தி.ஜானகிராமன் 120 கதைகள் எழுதி இருக்கிறார் எனக் குறிப்பிடுவர் திறனாய்வாளர்கள்.

இவரது கதைகளில் பஞ்சத்து ஆண்டி, ரசிகரும் ரசிககைகளும், தேவர் குதிரை, கோபுர விளக்கு, சிலிர்ப்பு ஆகியவை மிகச் சிறந்த கதைகளாகும். இவரது சக்தி வைத்தியம் தொகுதி 1979 ஆம் ஆண்டு சாகித்ய அகடாமி விருது பெற்றது.

நாவல்: அமிர்தம்(1945), மலர் மஞ்சம் (1961), அன்பே ஆரமுதே (1963), மோகமுள் (1964) இது மிகச்சிறந்த நாவல், திரைப்படமாக எடுக்கப்பெற்றது. இதனை இயக்குநர் ஞானசேகரன் (பாரதி பட இயக்குநர்) இயக்கியுள்ளார். அம்மா வந்தாள் (1966), உயிர்த்தேன் (1967), செம்பருத்தி (1968), மரப்பசு (1975), அடி (1979), நளபாகம் (1983 எனப் பத்து நாவல்களை எழுதியுள்ளார்.

"அம்மா வந்தாள்' நாவல் ஆங்கிலத்திலும், குஜராத்தி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

குறுநாவல்: கமலம் (1963), தோடு (1963), அவலும் உமியும் (1963), சிவஞானம் (1964), நாலாவது சார் (1964), வீடு முதலிய குறு நாவல்களையும் எழுதியுள்ளார்.

நாடகங்கள்: நாலுவேலி நிலம் (1958), வடிவேல் வாத்தியார் (1963), டாக்டர் மருந்து ஆகிய நாடகங்களையும் எழுதியுள்ளார்.

பயண நூல்கள்: தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதினார். இது 1967ல் நூலாக வெளியிடப்பெற்றது. ரோமானிய செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை கருங்கடலும் கலைக்கடலும் என்னும் தலைப்பில் 1974ல் வெளியிட்டார்.

கட்டுரைகள்: 25 கட்டுரைகள் எழுதியுள்ளார். இவை இலக்கியம், இசை பற்றிய கட்டுரைகள் ஆகும்.

மொழி பெயர்ப்பு: ஹென்றி ஏ.டன்லப், ஹான்ஸ் என் டச் எழுதிய அணுக்கரு பற்றிய ஆங்கில நூலை "அணு உங்கள் ஊழியன்" என்றும், ஜார்ஜ் காமோ எழுதிய பூமி பற்றிய நூலை "பூமி என்னும் கிரஹம்" என்றும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நோபல் பரிசு பெற்ற கிரேஸியா டெல்டாவின் "அன்னை" நாவலை மொழி பெயர்த்துள்ளார்.

பயணமுடிவு: 1981 பணி ஓய்விற்குப் பின் சென்னை திருவான்மியூரில் வசித்தார். உடல் நலக்குறைவால் 1982 நவம்பர் 18 ஆம் தேதி மறைந்தார். மானுடத்தில் அவர் உடல் மறைந்தாலும் அவரது படைப்புகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

""தமிழின் நெடும்பரப்பில் தி.ஜானகிராமன் ஓர் அற்புதம், பூரணமான ஓர் இலக்கிய அனுபவம் என்பது முழு உண்மையே'' என்று க.நா.சுப்பிரமணியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com