Enable Javscript for better performance
mouna sirai poems by dinamani kavithaimani readers | மௌனச் சிறை வாசகர் கவிதை 4- Dinamani

சுடச்சுட

  

  மௌனச் சிறை வாசகர் கவிதை 4

  By கவிதைமணி  |   Published on : 11th December 2019 01:05 PM  |   அ+அ அ-   |    |  

  the-silence-4522878_960_720

   

  மௌனச் சிறை

  பேசும் திறன் உடைய நல்ல  மணம்
  வீசும் வார்த்தைகளை
  உச்சரிக்கும்  பண்புடைய ஜீவன்
  கடவுள் படைப்பில்  மனிதன்  ஒருவனே!
  நல்ல வார்த்தை  பேச அறியாவிடில்
  கொல்லும் வார்த்தை சொல்லாமல்
  மெல்லும் நல்ல குணமே "மௌன சிறை!"
  துள்ளும்  வயதில் பயமறியா கூட்டம்
  கிள்ளும் ஒவ்வொரு சொல்லும் 
  தள்ளும்  சோகக் கூட்டத்தில்!
  வேகமான  இக்கூட்டத்தில் சிக்காமல்
  அமைதி தேடினால்  அது
  கிட்டுவது  "மௌன சிறையில்!"
  எப்படிப்பட்ட  கல்லான  இதயத்தையும்
  திறக்க உதவும்  "மௌனம்"
  அது ஒரு சிறந்த  ஆயுதம்!
  எது சிறந்த சொற்களோ  அதை பேசி
  சாதுக்களையும்  சிறை  பிடிக்கலாம்!
  பேசும் வார்த்தையில்  கருணையில்லாமல்
  ஏசும் பேச்சினை பேசாது  "மௌன சிறையில்" இருந்தால்
  வீசும் தென்றலாய்  அமைதி,   இது
  காசின்றி கிடைத்த
  மாசில்லா மந்திரம் என்று உணர்வோம்!

  - பிரகதா நவநீதன்.  மதுரை 

  **

  மௌனச் சிறை

  என் மொத்த செல்களும்
  உன் ஒற்றைப் பார்வையில்
  உயிர்த்தெழுகிறது
  என் கண்கள் கண்ட
  முதல் பேரழகே..
  என் இதயத் துடிப்பு ஒவ்வொன்றும்
  உன் பெயரையே உச்சரிக்கிறது
  உலக அதிசயங்கள்
  மொத்தத்துக்கும்
  நீயே முதன்மை
  தேவ ராகங்கள்
  உன் குரலுக்கு முன்னால்
  வெறும் சத்தங்களே
  புன்னகையால் அழகை கூட்டி
  என்னை சிதைத்து விடுகிறாய்
  செல்லுமிடமெல்லாம்
  என்னை இழுத்து செல்பவளே
  உன்னை நினைக்க வைப்பவளே
  என்னுள் நிரம்பிவிட்டவளே
  ஒருமுறை பார்க்கிறாய்
  பலமுறை எரிகிறேன்
  சுக வார்த்தைளை தேட வைத்து
  எழுத்துகளில் ஒளிந்துகொண்டிருக்கிறாய்
  ஒரு கவிதைக்கே
  கவிதை எழுதிய பாக்கியசாலி நான்

  நேரில் ஒற்றைச் சொல் பேசாதவள்
  எனக்குள் ஆயிரம் முறை பேசுகிறாள்
  வாழும் காலைத்தையே
  வீணடித்திருக்கிறேன்
  உன் ஒரே ஒரு வார்த்தைக்காக
  மௌனச் சிறையில்
  வாட்டியது போதும்
  காதலே...

  - தமிழ்ப்பேரொளி.ஜீவா காசிநாதன்

  **

  உற்றாரும் சுற்றாரும் வியந்து  
  முப்பது முக்கோடி தேவருடன்
  அக்னியும் அருந்ததியும் சாட்சியென
  நாளும் கோளும் நன்றாய் பார்த்து
  நடத்தி வைத்தனர் திருமணம்!

  ஊர் துறந்து உறவை பிரிந்து
  உதவியற்று நாதியற்று
  வேருடன் பிடுங்கிய செடியென
  வேற்றுநாட்டில் வேறு மண்ணில்
  நட்டு வைத்தனர் தன்னந்தனியே!

  கண்ணாய் கருத்தாய் காப்பான் என
  கட்டி வைத்த காவலனும்
  காலனென மாறியது காலத்தின் சூழ்ச்சியே!
  காலங்காலமாய் செக்கிழுத்தும்
  இல்லை இங்கே எனக்கொரு மீட்சியே!

  கோபப் பார்வையால் நீ
  கொடும் சினத்தைக் காட்டினால்
  சுட்டுப் பொசுங்கி சாம்பலாக - நானென்ன
  கொக்கென்று நினைத்தாயோ
  கொடும் கணவா??!!

  - உமா, நோர்வே

  **

  அதிகாலைப் பொழுதின்
  அருணோதயத்தை
  உனது புன்னகையில்
  கண்டேன் !
  துள்ளும் மீன்களின்
  அள்ளும் அழகினை
  உனது விழிகளில்
  ரசித்தேன் !
  வீசும் தென்றலின்
  பேசும் மொழியை
  உந்தன் அசைவில்
  அறிந்தேன் !
  மல்லிகை மலரின்
  மெல்லிய வாசத்தை
  உந்தன் சுவாசத்தில்
  உணர்ந்தேன் !
  இனியவளே !
  இன்று உந்தன்
  மெளனச் சிறைக்குள்
  விடுதலை விரும்பாத
  அன்புக் கைதியானேன் !

  - ஜெயா வெங்கட், கோவை 45

  **

  ஊமையாகி
  உள்ளுக்குள் குமறுகின்றன
  சொல்ல வந்த நியாயங்கள்.
  அகம் உலாவும் மர்மத்தை
  முகம் காட்டிக்கொடுக்கும்
  என்பதால்
  சிரித்து நடிக்கவே
  செலவிடுகிறேன் நேரத்தை.
  ஒவ்வொரு நொடியும்
  சீண்டிவிட்டுப் போகின்றன
  குறுக்கும் நெடுக்குமாய்க்
  கோர வவ்வால்கள்
  மெளனம் உடைக்கவே
  மொழிகள் முயல்கின்றன
  தோற்றுத்தாம் போவோம் எனத்தெரிந்தே...

  -கோ. மன்றவாணன்

  **

  மௌனங்கள் பல சமயங்களில்
  மனதில் பல மாற்றங்கள்
  ஏற்படுத்தும் பெண்ணே!
  மூடிய விழித்திரையின்
  கனவுகளில் இளவயது
  உறவுகளுடன் அன்புப் பரிமாற்றம்!
  அன்னிய நாட்டு மோகத்தில்
  பண முதலைகளின் பிடியில்
  அன்பு இரையாக
  பணம் அங்கே சிம்மாசனமிட
  மௌன சிறைக்குள்
  பாசமலர் இணையத்தில்
  வான்முகிலாய் தென்றலாய்
  பறவைகளுடன் மெளனமொழியாய்
  சொந்தக்கதைகளை இணையத்தில்
  பணத்திற்காக விலைபேசி விற்று
  பதக்கங்களை இட்டுக் கொண்டிருக்கிறது!

  - நிலா

  **

  கார்முகில்   மௌனச்   சிறைக்குள்ளே
         கதிரவன்   திங்கள்   தவித்திடுமே!
  கார்முகில்   மௌனச்   சிறையினையும்
         காற்றும்    உடைத்தால்   மழைவருமே!
  வேர்கள்    மௌனச்    சிறைக்குள்ளே
         வாழ்வதால்    மரமும்    உயிர்த்திடுமே!
  நீர்தான்   மௌனச்   சிறையணைக்குள் 
         நிலமும்    விளைய   இருந்திடுமே!

  மலையின்   மௌனச்   சிறையினையும்
        முனைந்து   உடைத்தால்    அருவியாகும்;
  சிலையின்    மௌனம்   கலையாகும்;
         செதுக்கும்   உளி,கல்   சிறையுடைக்கும்;
  அலைகடல்   நடுவே   மௌனத்தின்
         அமைதிச்  சிறையும்    இருந்தாலும்
  அலைகடல்   கரையில்   ஆர்பறிக்கும்;
          அதுபோல்   மனிதம்   வடிவெடுக்கும்!

  மௌனச்    சிறையால்   நன்மைதீமை
          மாறி    மாறி    விளைந்திடுமே!
  மௌனச்   சிறையில்   அவரவரின்
         மனத்தைப்    பொறுத்தே   பயன்விளையும்;
  மௌனச்    சிறையின்    கூண்டுக்குள்
         மனிதர்   இருந்தால்   சண்டையில்லை;
  மௌனச்   சிறையில்    வாழ்ந்திடவே
         மனிதா    வாழ    முயன்றிடுவாய்!

  - கவிக்கடல்,  கவிதைக்கோமான், பெங்களூரு.

  **

  அமைதி  காக்கும் உள்ளத்தில்
  மலரும் சிந்தனைகளை
  புலரும் ஒவ்வொரு காலையிலும்
  தன்னுள்ளே  புதைத்துக் கொள்ளுதலே
  "மௌனம்" என்று தைரியமாக சொல்வர்!
  எந்த ஒரு நிலையிலும் நாம்
  அந்த  "மௌன   சிறையில்"
  இருந்து விட்டால் எப்படிப்பட்ட சுழ்நிலைக்கும்
  மருந்து போல அமைந்துவிடும்.
  பேசிய   வார்த்தை  உனக்கு எஜமான்
  பேசாது மௌனத்தின் பிடியில்
  ஏசாமல் இருக்கும் வார்த்தைகளுக்கு
  நீயே எஜமான்.................!
  துக்கம் பெருக்கெடுத்து
  ஏக்கமாக மாறி  வறுத்தெடுக்கும்
  போக்காக அமையும் நேரம்          
  " நேக்காக"  மௌன  சிறையில்
   அடைந்துவிட்டால்...........
  துக்கம் பலனின்றி வந்த வழியே
  ஓடி நிம்மதிப் பூவினை மலரச் செய்யும்!
  "மௌன சிறையில்" அமர்ந்து
  தியானம் செய்து  ஞானம் பெற்று
  நிம்மதியுடன்  வாழ்வோம்!  

  - உஷாமுத்துராமன்,  திருநகர்

  **

  பேச்சு வாக்கில் வாக்கு வாதம் முற்றும் 
  கணவன் மனைவிக்கு இடையில் !
  நீ பேச வேண்டாம் இனிமேல் என்னுடன் 
  நானும் பேச மாட்டேன் உன்னுடன் இனி !
  இது இடைக்கால தீர்வு !
  மௌனம் காப்பர்  இருவரும் ...யார் 
  முதலில் பேசுவது என்னும் தயக்கம் 
  ஒரு பக்கம் !  யார் பெரியவர் என்னும் 
  அஹங்காரம் மறு  பக்கம் !
  மௌன மொழியால் இருவருக்குமே 
  சங்கடம் ...சலிப்பு! 
  யார் முதலில் கண் சிமிட்டுவது என்னும் 
  குழப்பம் !
  சத்தம்  போட்டு பேசிய இருவருக்கும் 
  சட்டப்படி  சிறை தண்டனை மௌன சிறை ! 
  குற்றம் பார்த்தால் சுற்றம் மட்டுமா இருக்காது?
  சத்தமும் இருக்காது ஒரே வீட்டில் ! 
  குற்றம் சற்றே மறந்து மௌனம் கலைத்தால் 
  கிடைக்கும் இருவருக்கும் விடுதலை 
  மௌன சிறைவாசத்தில் இருந்து !

  - கந்தசாமி  நடராஜன் 

  **
  அடுப்படியே கதியென்ற பெண் மனதுள்
  சிறை கொண்ட சொல்லாடல்கள்
  மௌன சிறைக்கம்பிகள் பின்
  மனதுள் உருண்டதே பதற்றத்துடன் !
  மனம் எண்ணியவை நாவுதிர்க்க,
  தேனாய் செவியுள் இடம் கொள்ள
  தென்றலாய் தவழ்ந்த சொற்கோர்வைகள்
  வானில் சிறகடித்தே மகிழ்ச்சியில் !
  நீண்ட மணித்துளிக்குப் பின் உரிமையுடன்
  மௌன சிறையினின்று விடுபட்டோமென்று
  ஏற்றயிறக்கங்களுடன் இதயம் துடிக்க,
  முத்தாய் வெளிவந்ததே சொற்றொடர்கள் !
  பெண் சொல்லுக்கு கிட்டிய சுதந்திரமெண்ணி
  சிறை கொண்ட மௌனமும் மெல்ல
  கம்பிகளுக்கு பின்னால் புன்முறுவலுடன்
  திரை விலக்கியதே கண்சிமிட்டியபடி !

  - தனலட்சுமி பரமசிவம், கன்னியாகுமரி மாவட்டம்

  **

  தவறுக்கு தவறான தவறைச் செய்பவர்கள் சட்டத்தால் பெருவார்
  தண்டனையாக இரும்பு சிறை

  மனதளவில் ஒருதவறும் புரியாதார்
  தன்னைத் தானே வருத்திக் கொள்ள
  மௌனச் சிறை தேர்ந்து கொள்வார்

  காதலென்னும் தூண்டிலில்
  வசியம் என்னும் ஆகாரத்தை
  கோர்த்து வாலிப கோளாறு
  குளத்தில் வீச வசமாக மாட்ட

  அவளது மௌன சிறையில் இட்டு திறப்பானை குளத்தில் எறிந்தாள்
  தேடுகிறேன் கிடைக்கவே இல்லை
  விடுவித்துக் கொள்ள முடியாமல்

  வேண்டாத தெய்வங்களே இல்லை

  - வே. சகாய மேரி

  **
  உயிருக்குள்ளே யொரு உயிரை
  பலவந்தம் செய்து வைத்து உள்ளது
  மௌன சிறை கருவறைக்கு உள்ளே

  மனதிற்குஉள்ளே யொரு மனதை
  திருடி மறைத்து வைத்து உள்ளது
  மௌன சிறை இரகசியம் உள்ளே

  குணத்திற் குள்ளே யொரு சினத்தை
  உருவாக்கி மறைத்து வைத்து உள்ளது
  மௌன சிறை வைத்து கணக்கு தீர்க்க

  இனத்திற்கு குள்ளே யொரு இனத்தை
  உருவாக்கி வைத்துள்ளது பழிதீர்க்கும்
  காலம்வரை மௌன சிறை வைப்பு

  ஜகத்திற்குள்ளே இயக்கம் யாவும்
  அகத்தால் ஆடிய வேஷம் கலைய
  கல்லறையுள் மௌன சிறை வைப்பு

  - ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

  **

  தகர்ந்தது மெளனச்சிறை

  ஆமைதன் உறுப்புகளை ஓட்டிற் குள்ளே
  ----அடக்கிவெளி தெரியாமல் இருத்தல் போல
  ஊமையென வாய்திறந்து பேசு தற்கும்
  ----உரிமையின்றி முடங்கிருந்தார் வீட்டிற் குள்ளே !
  தீமையினை நன்மையினைப் பிரித்துக் காணும்
  ----திறனில்லா அடிமையென வாழ்ந்த தாலே
  மாமைநிற மனிதரினை ஒதுக்கல் போல
  ----மங்கையரை மௌனத்துச் சிறையுள் வைத்தார் !
  ஆண்கள்தம் ஆதிக்க ஆண வத்தில்
  ----அடிகொடுத்து அடிகொடுத்தே வீழ்த்தி ருந்த
  மாண்பற்ற கயமைக்கு வேட்டு வைக்க
  ----மாக்கவியாம் பாரதிதான் எடுத்தார் பாட்டை !
  கூண்டுக்குள் அடைத்திருந்த கிளிகள் தம்மின்
  ----கூர்மூக்கால் கம்பிகளை வளைய வைத்து
  வேண்டியநல் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள
  ----வெளிவந்து போராடும் வெறியைச் சேர்த்தார் !
  பருந்துதனை எதிர்த்திட்ட கோழி போல
  ----பாவையவள் சிலிர்த்தெழுந்தே கட்டு டைத்தாள்
  வருங்காலம் தனதென்றே முழக்க மிட்டு
  ----வானத்தில் ஏறிட்டாள் கல்வி கற்றே !
  அருங்கலைகள் அனைத்திலுமே தேர்ச்சி பெற்றே
  ----ஆர்த்தெழுந்தாள் தலைநிமிர்ந்தாள் புதுமைப் பெண்ணாய்
  பெருமையினைச் சேர்த்தின்று வீட்டை நாட்டைப்
  ----பெரும்படையாய்க் காக்கின்றாள் துணைநிற் போமே !

  - பாவலர் கருமலைத்தமிழாழன்

  **

  எத்தனை மௌன சிறைகளோ ?

  நெய்தல் திணைமேல் ஆழிப்பேரலை சூழினும்,
  மையல் கொண்ட மணலாள்
  மௌன சிறை பொறுமையே !

  நெய்யது மணக்கையில் மனையாள் சுவைச்
  சோறது படைக்கப் பசியாண்
  மௌன சிறை இனிமையே !

  பெய்யும் அன்னியமொழி பகல்மழையில் இனியு
  நெய்கவென சுரக்கு பட்டுத்தமிழ்
  மௌன சிறை பெருமையே !

  மெய்யும் உயிரும் உயிர்மெய்யாய்க் கூடலில்
  மெய்யென இன்பம் காணிருமன
  மௌன சிறை தனிமையே !

  செய்யும் பணிதனில் செய்யாச் சிறுபிழைக்கு
  வையும் மேலாளர்முன் வேண்டும்
  மௌன சிறை அடக்கமுடைமையே !

  தொய்யும் இனம்வளர ஐயமே இனிகொள்ளாது
  பொய்சுலோகங் கேட்க வேண்டாம்
  மௌன சிறை மடமையே !

  நொய்யல் கொடுமணலும் வைகைக் கீழடியும்
  வைத்த தமிழினம் இனியும் வேண்டாம்
  மௌன சிறை புதுமையே !!

  - சந்திரசேகரன் சுப்ரமணியம்

  **
  சிறையில் சிலவகை உண்டு அறிவோம்
  சிலருக்கு தனி அறை சிறை உண்டு!
  உடன் பேசிட ஒருவரும் இருப்பதில்லை
  ஒன்று இரண்டு எல்லாம் அறைக்குள்!
  தில்லையாடி வள்ளியம்மையை இப்படிச் சிறையில்
  தண்டனை வழங்கி தண்டித்தார்கள்!
  சிறையால் நோய் கண்டு மெலிந்தாள்
  சில நாளில் இறந்திடுவாள் என விடுதலை தந்தனர்!
  பார்க்க வந்த காந்தியடிகள் கேட்டார்
  பெண்ணே என்னால் தானே துன்பம் என்றார்!
  வருந்தவில்லை நீங்கள் அறிவித்தால் உடன்
  விரும்பி சிறை செல்லத் தயார் என்றாள்!
  நெகிழ்ந்து போனார் அண்ணல் காந்தியடிகள்
  நெஞ்சுரமிக்க தில்லையாடி வள்ளியம்மையைக் கண்டு!
  மௌன சிறையையும் மகிழ்வோடு ஏற்றாள்
  மக்கள் மனங்களில் தில்லையாடி வள்ளியம்மை!

  - கவிஞர் இரா .இரவி

  **

  யாவர்க்குமாம் குடிபுக உகந்ததோர் நல்லறை
  யாவர்க்குமாம் உட்புகத் தீருமாம் மனக்கறை
  யாவர்க்குமாம் இருந்திடத் தெரியுமாம் ஓரிறை
  யாவர்க்குமாம் விலகியே ஓடிடும் ஒருகுறை
  யாவர்க்குமாம் வெற்றியே கிட்டிடும் பலமுறை
  யாவர்க்குமாம் ஐம்புலம் காத்திடப் புலத்துறை
  யாவர்க்குமாம் மனதிலே பரவிடும் நன்மறை
  யாவர்க்குமாம் வேண்டுவ மௌனச்சிறையது தானே!!

  - கு. இரா, வடக்கு அயர்லாந்து.

  **

  மௌனச்   சிறையில்   மாட்டிக்   கொண்டு
  விழியும்   பிதுங்கிக்   கிடக்கிறதே!
  மௌன    நாடகம்   மண்ணில்   நடக்குது
  மரணச்   சிறையும்   திறக்கிறதே!

  காலந்   தோறும்   கபடச்   சிறையில்
  குவலயம்   எங்கும்  கிடக்கிறதே!
  ஆல    விழுதும்   சுருக்குக்   கயிறாய்
  ஆலமரக்  கழுத்தை   நெறிக்கிறதே!

  அதுபோல்   மனிதக்   குலமும்   மாறியே
  அடுத்தவர்க்  கழுத்தை   அறுக்கிறதே!
  எதுவும்   இங்கே   எள்முனை    
  அளவும் இயல்பாய்  இருக்க    மறுக்கிறதே!

  துறைகள்    தோறும்    துறைகள்    தோறும்
  தூங்கா   மௌனச்   சிறைக்குள்ளே
  மறையாத்   தன்னலம்   மறைந்தே   இருந்து
  மாண்புகள்   தம்மைக்   கொல்கிறதே!

  மௌனச்   சிறையை   உடைக்கும்   வரையில்
  மண்ணில்   போர்கள்   இருக்காது;
  மௌனச்   சிறைக்குள்   இருந்து    விட்டால்
  மனமும்    நோக   வழியேது?

  உலகந்    தோறும்   மௌனச்   சிறைக்குள்
  உவந்து   இருந்தால்  இழப்பேது?
  நலமே   விளையும்;   தீவினை   ஏது?
  நன்கு   உணர்ந்தால்   தாழ்வேது?

  - நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.

  **

  நாம நெனைக்கிற உலகமும்,
  நடக்குற உலகமும் வேறவேற

  நாம நடக்குற ரோடும்,
  வாழுற வீடும் வேறவேற

  நாம படிக்கிற பாடமும்,
  அத நடைமுறைப்படுத்தற வேகமும் வேறவேற

  ரொம்ப வேறவேற!

  மலைக்கும் மடுவுக்கும் ரொம்ப தூரம்;
  அதனால மனசு பாரம் 

  உன் வீரம் எல்லாம் எங்கப்போச்சு?
  காணம் !
  கண்ணுக்கெட்டின தூரம்வர காணம்

  நெனைக்கறப்ப எளிதா தெரியுது,
  நடைமுறைல எதிர்கொள்ளும்போது தடைக்கற்கள் பல இருக்குது

  இத அப்படியே விட்ரலாமா?
  நீயே சொல்லு?
  நடைமுறை இதுதான்னு ஏத்துக்கலாமா?
  எதிர்த்து போரிட்டு ஜெயிக்கலாமா?

  உன் மேல் உனக்கு எவ்வளவு  கோபம் இருந்தாலும் , 
  அத்தனையையும் மறந்துவிடு: 
  எடுத்த செயலை நடைமுறை சாத்தியமாக மாற்றக்கூடிய,
  அசாத்திய துணிச்சலோடு நீ செயல்படு 

  ஓரிரு முறை அடிபட்டு பாடம் கற்று,
  தொடர்ந்து முயற்சி செய்து மீண்டெழும் போது,
  நண்பா நீ வெற்றி பெற்றிருப்பாய்.

  - ம.சபரிநாத், சேலம் 

  **
  நம் கண் முன்னே!
  நடக்கும் அநியாயங்களை!
  தட்டிக் கேட்காமல்!
  மௌன சிறைக்குள்
  இருக்கலாமா?

  அவன் தான் காரணம்!
  அவனால் தான் மரணம்!
  அதை சொல்லவேண்டிய இடத்தில்!
  சொல்லவேண்டிய நேரத்தில்!
  சொல்லாமல்!
  மௌன சிறைக்குள் கிடக்கலாமா?

  இது சரிவராது என்று!
  தனியே முடிவு! செய்துவிட்டு!
  அது தவறான முடிவு!
  என்றாகும் போது!
  அதற்கு வேறு வழிவகை! 
  செய்வதை விட்டு விட்டு!
  மௌன சிறைக்குள்  போகலாமா?

  மௌனம் சம்மதம் என்பர்!
  சிறையை விட்டு!
  வெளிவரும் பறவையாய்!
  மௌன சிறையை விட்டு!
  வெளியே வாருங்கள்!

  மனம் திறந்து பேசுங்கள்!
  மௌனம் கலைந்து பேசுங்கள்!
  சிறைக்குள் மௌனம்!
  வேண்டாமே!
  மௌன சிறை
  தராது !
  வாழ்வில் நிறை!
  மகிழ்ச்சிகள் நிலைக்க!
  மௌனம் கலைத்து
  பேசுவோம்!
  சிறைக்குள் இனி
  மௌனங்களும் வேண்டாம்!
  மரணங்களும் வேண்டாம்!

  - கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai