Enable Javscript for better performance
poem about father in kavithaimani |அப்பாவின் நாற்காலி வாசகர் கவிதை 4- Dinamani

சுடச்சுட

  
  daddy

  அப்பாவின் நாற்காலி

  கோடிக் கோடியாய் விரையம் செய்து  
  வந்த தில்லை அப்பாவின் நாற்காலி 
  அன்பையும் ஆதரவையும் அர்பணித்து 
  வந்ததிந்த அரிய அப்பாவின் நாற்காலி 

  கோடிக்கு பலத்தோல்வி காத்திருக்கும் 
  அன்புக்கென்றும் வெற்றி பூத்திருக்கும் 
  பணங்கொடுத்து பதவி வாங்கலாமது 
  நிலைக்கு மென்று சொல்லமுடியாது 

  பாசத்தை பொழிய மக்களே சேரலாமது 
  நிலைக்கா தென சொல்ல முடியாது
  செத்துப்போன மரம் மரியாதை தரும் 
  கம்பீரமாக அப்பாவின் நாற்காலி க்கு 

  உயிர்கள் உதாசீனம் படுத்துகிறது 
  அதில் அமர்ந்து கொண்டிருக்கும் 
  அர்த்தமற்றோரை; இங்கு அப்பாவின் 
  நாற்காலி சீதோஷ்ண நிலையற்றது

  - வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

  **

  நினைவுகள் சதிராடுது அப்பாவின் நாற்காலியிலே  !
  நிகழ்வுகள் கதிராடுது நானான 
  இந்நிலையிலே !
  இடர் சுழல் இடையினில் பேணி நமைக் காத்தவர்தான் !
  இப்புவி வாழ்வினில் நிகரிலா 
  இறையவர்தான் ! 
  அப்பாவின் பணியாசனமே 
  நாற்காலி !
  அவர் குடும்பந் தனக்காய் வாழ்ந்திட்டக் கூலி !
  இன்னல் நமக்கென்று கலங்கிடும் 
  பேதையரே !
  இன்னுயிர் துறக்கவும் உடன் துணிகின்ற  மடையரே !
  உம்முயிர் சூட்சுமம் பெற்றோரே ! -நீவீர்
  உயிர் விட உரிமை அற்றவரே !
  என்னிலை தனிலும் மனதிலிருத்து, அப்பாவின் நாற்காலி !
  எத்துயர் தனிலும் வாழ்ந்துக் காட்டு,  நீ அப்பாவின் கூலி !

  - இலக்கிய அறிவுமதி

  **

  அப்பாவின்   தோள்களைப்போல்   அம்மா   வின்தன்
          அழகிடையும்    குழந்தையது   அமர்வ   தற்கு
  இப்புவியில்   ஈடுயிணை   யாகப்   போற்றும்
           இனிதான    நாற்காலி  வேறு   முண்டோ?
  தப்பான    அரசியலார்   போட்டிப்   போட்டு
           தவளைப்போல்    தாவுகிற   பதவிக்   கேற்ற
  அப்பதவி    நாற்காலி   பிடுங்கக்    கூடும்;
            அப்பாவின்   நாற்காலி   நிலைக்கும்   செல்வம்!

  கற்றதனின்    கல்விக்கு   ஏற்ற    வேலை
           கனிந்தந்த   நாற்காலி    வாய்க்கும்;   என்றும்
  பெற்றதனால்   பெற்றோரைச்   சுமக்கும்   பிள்ளை
           பாங்குடனே   இறுதியிலே    கால்க   ளில்லா
  பற்றுடனே   சுமக்கின்ற   பாடை   யஃதும்
          பயணம்செய்   நாற்காலி   முடிவே   யாகும்;
  அற்றொருநாள்   போனபின்னும்   பிள்ளை   யர்க்கு
           அப்பாவின்   நாற்காலி   துணையே   யாகும்!
     
  - கவிக்கடல், கவிதைக்கோமான், பெங்களூரு. 

  **

  பூட்டன் உட்கார்ந்த  சாய்வு  நாற்காலி
  பாட்டன்  உட்கார்ந்த  சாய்வு நாற்காலி
  அப்பா உட்கார்ந்த ஆய்வு நாற்காலி
  இன்று நான் உட்காரத் தொடங்கிய
  நான்கு தலைமுறைப் பார்த்த
  பாங்கான  மரத்தில் செய்த
  உறுதியான நாற்காலி.... அது
  அப்பாவின்  நாற்காலி.... இன்று
  வரும் நாற்காலிகளை தலைகுனிய
  வைக்கும் உறுதியான  நாற்காலி!
  பல வீடுகள்  மாறினாலும்
  கலகலவென  சிரிப்புடன்  தூக்கி சென்று
  பொலிவுடன் பாதுகாத்த  நாற்காலி!
  மனைவி  கேலி பேசி  ஓரம் போட்டாலும்
  அதில் துண்டு போட்டு அமரும் பொழுது
  கண்டு விடலாம்  அப்பா, தாத்தா
  சுண்டு விரலில்  வருடிய நெகிழ்வுகளை!
  நாற்காலி அமர மட்டுமல்ல
  நம் பாரம்பரியம்  பேசும்
  ஒரு அருமையான பொக்கிஷம்!

  - உஷாமுத்துராமன்,  திருநகர்

  **

  அம்மா என்றால் அன்பு தான்!
  அப்பா என்றால் பண்பு தான்!
  அன்புடன் பண்பும் 
  கலந்து வளர்த்தவர்கள்!
   
  எனக்காக தங்களை வருத்தி!
  தனக்காக வாங்குவதையெல்லாம்
  நிறுத்தி!
  எப்பொழுதும் முப்பொழுதும் எல்லாமே எனக்காகவே!
  வாழ்ந்திட்ட அம்மா! அப்பா!

  வயதாகி தளர்ந்தாலும்!
  வற்றாத பாசத்தை!
  மாற்றாமல் மறக்காமல்
  இன்றும் இருப்பது!
  அவர்கள் அன்பிற்கு ஈடேது!

  என் வசம் மெத்தையை தந்துவிட்டு!
  இருவரும் தரையில் பாயில் படுப்பதும்!
  தங்களுக்கு காயம்பட்டால்!
  ஒன்றுமில்லை!
  எனக்கு காயம்பட்டால்!
  அவர்கள் படும் தொல்லை!
  அன்பிற்கொரு எல்லை!

  அம்மாவிற்கு பிடித்தது
  ஊஞ்சல் என்றால்!
  அப்பாவிற்கு பிடித்தது
  நாற்காலி தான்!

  இன்று இரண்டுமே இருக்கிறது!
  அப்பாவும் இல்லை!
  அம்மாவும் இல்லை!

  அப்பாவின் நாற்காலி அப்பாவை சுமந்த காலங்கள் அதிகம்!
  அதில் அப்பா சாய்ந்து கொண்டு!
  அம்மா ஊஞ்சலில் ஆடும் போது!
  தன் தேவைகளை பூர்த்தி செய்த தேவதை!
  என பல தடவைகள்
  சொல்லியிருக்கிறார்!

  அப்பா அம்மாவின் நேசம்!
  உடலால் உணர்வால்
  உள்ளத்தால் கலந்தது!
  எனக்கும் அது 
  கலந்ததால்!

  நானும்  அப்பாவின் நாற்காலியில் சாய்ந்து!
  என் தேவதையான
  மனைவி ஊஞ்சலில் ஆடுவதை ரசிக்கிறேன்!

  எல்லோருக்கும் சொல்கிறேன்!
  மனைவியை மதிப்பவன் ஆசான் ஆகிறான்!

  என் அப்பா அம்மா போல!
  நீங்களும் மனம் ஒத்த
  தம்பதியர் ஆக வாழுங்கள்!
  என்அப்பாவின் நாற்காலி !
  நினைவுகளை தந்ததே! 
  மனதில் நீங்காத! நிழலாக நின்றதே!

  **


  அப்பா அமரராகும் முன்பு
  அப்பா அடிக்கடி அமர்ந்த
  "அப்பாவின் நாற்காலி"
  அவரின் அப்பாவும்(எனக்கு தாத்தா)
  தப்பாமல் தினமும் அனுதினமும்
  அமர்ந்திருந்த அப்பாவின் 
  நாற்காலியில்
  நானும் ஒரு அப்பாவாக!
  அமர்ந்திருக்கிறேன்!
  என் அப்பாவின்
  நினைவில் 
  அமிழ்ந்திருக்கின்றேன்!

  சாய்ந்து சற்று ஓய்வு எடுக்க!
  அம்மாவை அழைக்க
  குரல் கொடுக்க!
  சிறுவனான என்னை
  நாற்காலியில் அமரவைத்து!
  என் அப்பாடா!
  என் சாமிடா!
  என் ராசாடா!

  இப்படி அப்பா!
  என்னை
  அமரவைத்து! கொஞ்சிய
  நாற்காலி!

  என் அப்பாவின் நாற்காலி!
  என்று ! அன்று!
  அவர் சொன்ன
  அதே! நாற்காலி!

  அது! துணிகளை மாற்றிக் கொண்டாலும்!
  அப்பாவைப்போல!
  என்னையும் தாங்கும்
  பணிகளை மாற்றவில்லை!

  நாற்காலியின் உடம்பு
  தேக்கு மரக்கட்டை!
  அதில் அமரும் போதெல்லாம்!
  என் மனக்கட்டை உடைத்து!
  அப்பாவின் நினைவுகளை!
  என் நெஞ்சை நோக்கி!ஓயாமல்
  பாயவைத்து உடைக்கிறது!

  நாற்காலி மாறவில்லை!
  அதில் அமரும் நபர்கள் தான்!
  மாறுகிறார்கள்!
  மொத்தத்தில் அப்பாவின் நாற்காலி!
  அது தான் எங்களுக்கு!
  அரியாசனமானது!

  இனிவரும் !
  எங்கள் சந்ததிகளுக்கு !
  சிம்மாசனம் ஆனது!

  - கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்

  **

  நாற்காலி என்றாலே பதவி தானே
  ----நாடாளும் அரியணையாம் நாற்கா லிக்கே
  பாற்கடலில் அமுதத்தை எடுப்ப தற்குப்
  ----பாய்ந்ததேவர் அசுரர்போல் சண்டை யிங்கே
  ஊற்றுவரும் நீரைப்போல் மனத்திற் குள்ளே
  ----ஊறிவரும் ஆசையிந்த நாற்கா லிக்கே
  தூற்றலையும் போற்றலையும் துரோகத் தையும்
  ----துடைத்தெறியும் பக்குவத்தைத் தருமிக் காலி !
  சேரசோழப் பாண்டியரைத் தமக்குள் ளாகச்
  ----சேராமல் தடுத்ததிந்த நான்கு காலே
  பேரரசர் சிற்றரசர் என்றெல் லோரும்
  ----பெரும்போர்கள் செய்ததிந்த நாற்கா லிக்கே
  கூரறிவு மன்னர்கள் வீற்றி ருந்து
  ----குலம்காத்த நாற்காலி தன்னி லின்றோ
  ஊரறிந்த கயவர்கள் கொள்ளை யர்கள்
  ----உட்கார்ந்து செய்கின்றார் ஊழ லாட்சி !
  அப்பாவின் முதுகிலேறி சவாரி செய்தே
  ----ஆடுகின்ற குழந்தைதான் அடுத்த தாக
  அப்பாவின் மடிமீது அமர்ந்து கொண்டே
  ----அதிகாரம் செய்கிறது வீட்டிற் குள்ளே
  தப்பாகிப் போகாமல் பிஞ்சு நெஞ்சுள்
  ----தர்மத்தை நீதிதனை ஊட்டி விட்டால்
  எப்பதவி பின்னாளில் ஏற்ற போதும்
  ----ஏற்றகுறள் வழியாட்சி செய்வா ரன்றோ !

  - பாவலர் கருமலைத்தமிழாழன்

  **
   

  புள்ளிகளின்   நாற்காலி  எழுத்து   கள்தாம்;
          போடுகின்ற   கோலத்தின்   கோடு  கள்தாம்
  புள்ளிகளின்   நாற்காலி   யாகி  நிற்கும்;
           பட்டத்து   யானையாக   எண்ணிப்   பேரர்
  துள்ளியேறும்   நாற்காலி   தாத்தா   வாகும்;
           பள்ளிக்குச்   செல்லாமல்   மாடு   மேய்க்கும்
  பிள்ளைக்கு   எருமைமாடே   நாற்கா  லியாகும்;
           பண்பினப்பா   நாற்காலி   நினைவின்  சின்னம்!

  நாக்கிற்கு   நாற்காலி   வாயே  யாகும்;
         நயமாக   மூடுகின்ற   இமைகள்  கண்ணைக்
  காக்கின்ற   நாற்காலி   யாகும்;   மூக்குக்
        கண்ணாடி   நாற்காலி   மூக்கே   யாகும்;
  பூக்களுக்கு   நாற்காலி   செடிக   ளாகும்;
         பாட்டிற்கு   நாற்காலி   மெட்டே   யாகும்;
  ஆக்கமுடன்   அமர்ந்தவாறு   பணிகள்  வாங்கும்
         அப்பாவின்   நாற்காலி   வணங்கும்   தெய்வம்!
        
  - நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு

  **

  அப்பாவின் நாற்காலி காலியாகவே உள்ளது இன்று
  அப்பா அமர்ந்திருக்கையில் அழகோ அழகு அன்று!

  அமர்ந்தபடியே கண்களால் வழி நடத்தினார்
  அல்லல் கண்டு வருந்தாமல் போராடி வென்றார்!

  நல்ல கணவராக அம்மாவிற்கு இருந்தார்
  நல்ல அப்பாவாக எனக்கு இருந்தார்!  

  நல்ல மாமனாராக என் மனைவிக்கு இருந்தார்
  நல்ல தாத்தாவாக என் குழந்தைகளுக்கு இருந்தார்!

  இருந்தபோது தெரியவில்லை அவர் அருமை
  இறந்தபின்னே உணர்கின்றேன் அவர் பெருமை!

  நிழலின் அருமை வெயிலில் தெரியும் உண்மை
  நான் அப்பாவை இழந்தபின் அறிந்தேன் அவரை!

  கோபம் அடைந்து நான் பார்த்ததே இல்லை
  குணத்தில் குன்றாக நிமிர்ந்து நின்றவர்!

  அப்பா அமர்ந்த நாற்காலி வெற்றிடமானது
  அவரின் நினைவை அடிக்கடி ஊட்டி வருகின்றது!

  - கவிஞர் இரா .இரவி

  **

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai