'கருப்பு’ வாசகர் கவிதை பகுதி 3

கருப்புத்தான் அழகென்றே ஆரா திக்கும்  கலைரசனை கொண்டோரும் இருப்ப ரிங்கே.
'கருப்பு’ வாசகர் கவிதை பகுதி 3

கருப்பு!

கருப்புத்தான் அழகென்றே ஆரா திக்கும்
      கலைரசனை கொண்டோரும் இருப்ப ரிங்கே.
கருப்பதுவும் ஒருநிறந்தான் எனினும் வானம்
      காட்டுகின்ற வானவில்லில் அங்க மில்லை
இருட்டென்றால் கருப்பென்றோர் எண்ணங் கொண்டோர்
       இருண்டகாலம் வளமில்லாக் கால மென்பார்
இருப்பெனவே கருப்பதனை வைத்துக் கொண்டால்
       எதிர்காலம் கேள்விக்கு றியாகு மன்றோ.

கருப்பதுவும் அழகென்பார் ரசிப்பார் இங்கே
       காந்தலதும் ருசியென்பார் சுவைப்பார் நன்றே
விருப்பதுவாய்க் கொண்டவர்க்கு கருப்பு வண்ணம்
      வேறுபாடு காண்பதற்கும் எண்ணார் எல்லாம்
திருப்தியுறும் மனந்தான் தெளிந்தால் போதும்
      தேசமது போற்றுகின்ற காம ராசர்
கருப்புவண்ண காந்தியென்று புகழப் பட்டார்
      கருப்பிற்கே ஏற்றமதைத் தந்திட் டாரே!

- கவிமாமணி " இளவல் " ஹரிஹரன், மதுரை

**

வண்ணங்களில் பேதமில்லை
தெய்வங்களில் பிரிவுமில்லை
கண்களில் தோஷமில்லை
காலத்திற்கு மரணமில்லை
முடிந்த காலத்திற்கு தொடக்கமில்லை
கருப்பிற்கும் கலங்கமில்லை

தெய்வத்தின் நிறத்தைக் கொண்டு
உச்சியின் நல் வளத்தை எண்ணி
காலதேவ சனியாய் படைத்து
வெயிலுக்கு பதிலாய் குளிர்தர வைத்து
முன்னோர் வழிபாட்டை ஞாபகம் செய்து
முக்தியைத் தர மோனமிடும் மதியாக நிறுவி

எத்தனை கூரிய கருவிகள் தந்து
சித்தனை உருவாக்கும் விழிமூடிய ஒளியாய்
சிந்தனைத் தரும் கரும்மேகம் போல்
எந்தனை உயர்த்தும் பதினெட்டாம்
படி கருப்பே போற்றி.....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி

**

துக்கத்தின் நிறத்தினை
தூக்கத்தின் பொழுதினை
பண்படா குணத்தினை
பரிதவிக்கும் மனத்தினை

எள்ளலின் தவிப்பினை
ஏகாந்தத் துடிப்பினை
மல்லாந்த கனவினை
விருப்பிலா வெறுப்பினை
நரகத்தின் வடிவினை

கலி தரும் விடிவினை
விஞ்ஞான வினையினை
அது தரும் மழையினை
அஞ்ஞான மனிதனை
அவனது சக்தியினை

எந்நாளும் வெற்று
வினைவினைத் தந்து 
கொல்லும், 
வெடி மருந்து திரியிலா
வெடிக்கும் கருத்த மனங்கள்......

- சுழிகை ப.வீரக்குமார்

**

வண்ணங்களின் ஒளியில்
வசியப்பட்ட மனிதனின்
கண்களுக்கு தெரிவதில்லை
கருமையின் மினுமினுப்பு !
கரியவானில்  தானே
கவின்மிகு நிலவு ஒளிர்கிறது!
கருமையிட்ட  விழிகளிலே
காருண்யம் தெரிகிறது !
காக்கையின் கரிய நிறமே
கவிபாரதியதைப் பாட வைத்தது!
கருந் துளசியின்   ரசமே
கடுஞ்சளியைப் போக்குகிறது !
கருப்பு  நிறக்கல்லிலே
கடவுளுருவம் தெரிகிறது !
கருப்பை  நிறமாகப் பார்க்காமல்
கடவுளின் வரமாகக்
கொள்வோம் !

- கே. ருக்மணி.

**

கருப்பு நிறமதைக்கண்டால்
வெறுக்கும் மனிதன் தான்
கருங்கல் சிலையை
கடவுளாக வணங்குகிறான் !

கருமேகம் பொழியக்
காத்துக்   கிடக்கிறான்!
கருவிழிகளை கண்டு
கவிதை வாசிக்கிறான் !

கருப்புநிறக்  கேசத்திற்காக
கருஞ்சாயம்   பூசுகிறான்!
கரியகாகத்தை முன்னோரென
கூவியுண்ண அழைக்கிறான்!

வெண்மையை  நாடும்
பெண்ணும் ஆணும் 
அறிந்து கொள்ளுங்கள்,
புரிந்து ரசியுங்கள் .
கருப்பும் அழகு தான்!
காந்தலும் ருசிதான் !

- ஜெயா வெங்கட், கோவை

**
கருப்பும் வெளுப்புமே 
காலத்தின் கோலங்கள்!
கருமேகம் திரண்டுவந்தால்
கனமழைக்கு வாய்ப்பதிகம்!
மழையொன்றே உலகத்தின்
மகிழ்வான பெருந்தருணம்!
வாரிசுகள் வளம்பெறவே
வளமான நீர்வேண்டும்!

கருத்த உடம்பினிலும்
கால்வாயாய்ப் பாய்கின்ற
குருதிநிறம் சிவப்பாகும்!
அறியாத வயதுவரை
அகிலத்தில் நாம்வந்து
கருப்பாகப் பிறந்ததற்காய்
கவலையில் இருக்கும்மனம்!
அப்புறம் மாறிவிடும்!

கருப்பில் ஓர்அழகு
காந்தலில் தனிருசி!
மனது பண்பட்டால் 
மகிழ்வும் நிலைத்திருக்கும்!
கருப்போ சிவப்போ
களத்தில் நாம்செய்யும்
உழைப்பொன்றே நம்மை
உயரத்தில் கொண்டுவைக்கும்!

-ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி

**

குழலிசைக் கண்ணணின் வண்ணமாய் மின்னி
குருகுரு விழிகளின் கருவதும் ஆனாய்

கரைந்திடும் காக்கையின் மையென நிரம்பி
கவிக்குயில் மேனியை நிறைத்ததும் நீயே

மழைபொழி மேகத்தைப் பூசியே வைத்து
மறைபொருள் அதுவுமே கொண்டதுன் பேரே

இதம்தரு இரவதின் கூடலாய் ஆனாய்
இறைவியாய் ஆலயம் அருள்வதும் நீயே

ஏட்டினில் எழுத்துடன் கவிதையும் தந்து
ஏகமும் கவர்ந்திடும் ஒருபொருள் நீயே

மயக்கிடும் அழகுடன் கட்சிகள்செய்து சிலர்
மனதினில் வஞ்சமாய் நின்றதும் ஏனோ?

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

கருப்பு
மேகக்கூட்டம் வானத்தில் தோன்றியதே,
கடல் தான் அதற்குக்காரணம்;
அந்த கடலோ நீலம்,
இந்த உடலோ கருமேகம்

மழைக்கும் மண்ணுக்கும் என்ன
தொடர்பு? மரம்
மரத்தின் ஈர்ப்பு தான் மழை நீரோ;
மனிதனின் அளவிலாத எதிர்பார்ப்புதான் கண்ணீரோ?

மரம் ஈர்க்கும் மழை;
மண்ணிற்கு தரும்,
பல செடி கொடி இலை தழை

மனிதனின் அளவிலாத எதிர்பார்ப்பு தான்,
நடைமுறையில் தினம்நடக்கும் அடிதடி கொலை வலை

மனிதனோ அடுத்த மனிதனை  ஏறி மிதித்து;
ஏற்றம் காண நினைக்கிறான்

கேட்டால் வளர்ச்சியாம்!
என்ன வளர்ச்சியோ?
இது என்ன வளர்ச்சியோ??

- ம.சபரிநாத்,சேலம்

**

விண்ணுக்கு  அழகு  கருமையான  மேகம்!
பெண்ணுக்கு அழகு  கருமையான  கூந்தல்!
கண்ணுக்கு அழகு  கருமையான மை!
மாலைக்கு அழகு  வரவேற்க காத்திருக்கும் 
கருமையான  இரவு!
மண்ணுக்கு அழகு கருமையான  தார் சாலை!
இளைஞர்களுக்கு  அழகு கருமையான மீசை!
இதில் எல்லாம்  கருமை நிறத்தை 
பதில் பேசாமல்  நாடும்  மனிதனே....
பெண்  கருப்பாக  இருந்தால்  
தன்னம்பிக்கை இன்றி புறக்கணிப்பது ஏனோ?
"கருப்பே அழகு  காந்தலே ருசி"  என்ற  
பழமொழியினை  மறந்ததேனோ?
கருப்பு அழகுக்கு அழகு  சேர்க்கும் 
பெருமை  சேர்க்கும்  நிறம் அன்றோ?
நிறத்தில்  இல்லையே  உறவுகள்.....
தரத்தில்  உயர்ந்த  மனித இனத்தில் 
பிறந்த  மனிதனுக்கு.....
சிறந்த உணர்வே.......
நிறத்தை  ரசிக்கும்  குணமே....
கருப்பு  நிறத்தையும்  போற்றுவோம்!

-  பிரகதா நவநீதன்.  மதுரை

**

வண்ணங்கள்  பல  -  அதில் 
எண்ணம் தேடும் மானுடனே....
திண்ணமும்   திடமும்  கொள்  கருப்பும்
வண்ணங்களில்  ஒன்று  என்று!
கருப்பை  வெறுக்காதே .....  அது
பொறுப்பான  செயல்  அல்ல! 
மறுப்பு  சொல்லாமல்  ஏற்கும்
கருப்பு  அத  மனதிற்கு  சுகமளிப்பது!
கருப்பான  பாலில்லா கருப்பட்டி  காபி 
சுறு சுறுப்பான  செயலுக்கு  உதவும்! 
தூசான காற்றிலுள்ள 
மாசுகளை  ஏற்றுக்  கொள்ளும்  
கருப்பு உடை உன்னை 
உயர்த்திய  காட்டும்!
கருவிழி  உனக்கு  பார்வை 
கொடுப்பதோடு...............
மரித்த  பின்பும்  இன்னொரு 
மனிதனுக்கும் பார்வை  தரும் 
கடவுளின்  உன்னத  படைப்பு!
கருப்பை  ரசிப்போம்..........!
சுறுசுறுப்பாக  வாழ்வோம்................!

 உஷாமுத்துராமன்,  திருநகர்

**

வண்ணங்களால் நான்
வெறுத்தொதுக்கபட்டால்
கருப்பு என்ற
எதிர்கட்சி தொடங்குவேன்!

கருப்பு எலிகளை 
தொண்டானாக்குவேன்!
கருப்பு யானைகளை
உதவிக்கழைப்பேன் !

புத்தகம் படிக்க மட்டுமே
கருவிழியை கொடுப்பேன்
தொலைக்காட்சி பார்க்கையில்
கருவிழியை திரும்ப பெறுவேன்!

ஊழல்வாதிகள் இடும் கருப்பு -மை
கையெழுத்தில் காய்ந்து நிற்கமாட்டேன்!
மேக்கப்பில் காலத்தை செலவழிக்கும்
பெண்களுக்கு கண் கருவளையம் கொடுப்பேன் !

பெரியாரும் ,மண்டேலாவும்
மீண்டும் பிறந்தாயின்
அவர்களிடம் சரணடைவேன் !

இவை அனைத்தும் நடந்தால்
அமாவாசை மேடைகளில்
வெற்றிவிழா கொண்டாடுவேன் !

-அ.அம்பேத் ஜோசப்

**
லவ , குச இருவரில் ஸ்ரீராமன் புத்திரன்
எவனென வினவ , அன்னை சீதையின் ஆணையால்
ஓம குண்டம் புக , முனிவர் செய்த குசன்
சேமமாய் வெளிவந்தான் கன கருப்பாய் !

உருமால். தலையில் கொண்டை , மற்றும்
முருக்கு மீசை , வீச்சரிவாள் , கதாதரனாய்
துன்பம் தீர்க்கும் அருள்வாக்குடன் மனுகுல
இன்பம் பெருக்க உதித்த காவல் கருப்பு !

உன் சினத்திற்கு முன் நிற்பார் யாருளர் ?
உன் வெகுளி காத்திடும் உன் பத்தரை !
உன் அன்பு செழித்திடும் என்றென்றும்
உன் காவல் நிறைக்கும் உபமானம் உண்டோ ?

சின்ன கருப்பு ,பெரிய கருப்பு ,
பதினெட்டாம் படி கருப்பு
ஒண்டி கருப்பு , நொண்டி கருப்பு , சமயகருப்பு ,
ஆகாச கருப்பு , மலையாள கருப்பு , தேரடி கருப்பு
சங்கிலி கருப்பு , பிலாவடி கருப்பு , குல கருப்பு

ஆயிரம் பெயர் கொண்ட மாவீர கருப்பு
பாயிரம் பாட நீ தானாகவே வந்து விடு .

ஐயப்பன் பூஜையில் நிறைவாக வந்து விடு
ஐயமில்லை காத்திடுவாய் வீட்டையும் , நாட்டையும்

கருப்பு கருப்பாய் நிறமானவனே !
கருப்பு கருப்பாய் வரமானவனே !
கருப்பு கருப்பாய் கனிவானவனே !
கருப்பு கருப்பாய் தெய்வமானவனே !

- ராணி பாலகிருஷ்ணன்

**
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com