'கருப்பு' வாசகர் கவிதை பகுதி 1

கதிரவனின் கதிரொளியால் உடலில் மெலானின் என்ற  நிறமியின்  
'கருப்பு' வாசகர் கவிதை பகுதி 1

கருப்பு

இரவு
கருப்பாய் இருப்பதால்தான்
பேய் நடமாடுகிறது
நிலாத்துணை அற்ற
தென்னந்தோப்பு ஓசையும்
அச்சுறுத்துகிறது
ஜன்னல் கதவு திறந்து மூடுகிறது
இருட்டுக்கு
நீளக் கைகள் எப்படி முளைத்தன?
தொப்பென்று குதிக்கிறது
கருப்புப் பூனையொன்று
கண்களில் தீச்சட்டி ஏந்தி
என் மனசுக்குள்
அவிந்து போயின
அனைத்து விளக்குகளும்
கருப்புக் கயிறு கட்டினால்
காத்துக் கருப்பு அண்டாது என்ற
பூசாரி
போதையில் உருண்டு கிடக்கிறார்
அப்போதுதான் தடவிப் பார்த்தேன்
என் மணிக்கட்டில் வளையமிட்டிருந்த
கருப்புக் கயிறு
எங்கோ அறுந்து விழுந்துவிட்டிருக்கிறது

இருட்டில் தேடுகிறேன்
அவசர அவசரமாக
அந்தக் கயிற்றை

-கோ. மன்றவாணன்

**

கருப்பதனை விரும்பாதார் யாருமில்லை
களைகூட்டும் கருமுடிக்கு நிகரேயில்லை
இருக்குமிடம் சரியாக இருந்துவிட்டால்
எல்லாமும் அழகாகும் இதுதான் உண்மை

முகமெல்லாம் கறுத்துமுழி பிதுங்கிட்டாலும்
முடிநரைத்து மூக்கூதிப் பருத்திட்டாலும்
அகமெல்லாம் நிறைந்திட்டால் அறிவும் அன்பும்
அங்கிருக்கும் பேரழகு, அதுவு முண்மை.

காலடியும் உள்ளங்கை நிறமும் செம்மை
காட்டுவது தானழகு இளையோ ருக்கும்
பாலினைப்போல் பல்லிருந்தாலழகு, நெஞ்சைப்
பறித்தெடுக்கும் குழந்தையதன் பொக்கைச் செவ்வாய்

நூலறிவால் நல்லொளியைப் பரப்பும் மேலோர்
நுவல்வ தெலாம் செம்மையதா யிருந்திட்டாலும்
சீலமிகு செய்தியெலொம் தீந்தைதந்த
சிறப்புமிகு  கருமைநிறப் பதிவாற் றானே.

(நுவல்வெதெலாம் – சொல்வதெலாம், தீந்தை – மை)

- சித்தி கருணானந்தராஜா.

**

இருட்டிற்கும் வெளிச்சத்திற்கும் 
இடைப்பட்டதாக, பிறப்பு - இறப்பிற்கும் இடையில்
அறியாமைக்கும் - அறிவிற்கும்
ஆனந்தத்திற்கும் - சோகத்திற்கும்
ஒலிக்கும் - மெளனத்திற்கும்,
ஏதோ - ஒன்றில் - ஆழத்திலும் -மேலும்
உள்ளும் - புறமும் - இளமைக்கும் _ முதுமைக்கும்  நடுவிலும் -
பதுமை எனப் பயணிக்கும் ஒன்றை - வினவினேன் - இருப்பது யாதென, கண்கள் கூச
ஒளி வெள்ளத்திற்குப் பின் -அமைதியாய் - பதிலளித்தது - அது,,
கருப்பு .

கவிதைப் பிரியன்

**

எண்சீர் விருத்தம்

கருமுடியோ வெளுத்திடவே விரும்ப மாட்டார்
……………காயமது வெண்மையானால் பல்லி ளிப்பார்.!
கருப்பென்றால் முகம்சுளிக்கும் மனித ருள்ளே
……………கள்ளவுள்ளம் மிகுந்திருப்போர் உலகில் உண்டு.!
உருவத்தில் வெளித்திடினும் உதவும் எண்ணம்
……………ஒருபோதும் இருக்காது உள்ளத் துள்ளே.!
கருப்பான மாண்டெலாவின் கனியும் உள்ளக்
……………கரும்பாக இனித்திருப்போர் உலகில் உண்டா.?
கருப்பட்டிச் சுவையினிலே களிப்பைக் காண
……………கருப்பென்றும் சிவப்பென்றும் சுவையில் உண்டா.?
கருவறையின் நிறத்தினிலே கருப்பி ருந்தும்
……………கடவுளான சிலைகளுமே நிறத்தால் இல்லை.!
கருப்புநிறக் கற்சிலைக்குள் உறையும் தெய்வம்
…………… காண்போரின் உள்ளயிருள் விலக்கு மென்றும்.!
கருநிறத்தில் கருவிழிகள் இல்லை என்றால்
……………கண்ணாலே காண்பதுவும் முடியா தன்றோ.?

- கவிஞர் பெருவை பார்த்தசாரதி

**
தத்தும் மனத்துள் கவிழ்ந்தயிருள் தரித்த உடையோ சிவனடியார் !
முத்த நாதன் போன்றவரே முக்கால் அளவு என்றாலே
தத்தன் போன்ற காப்பாளர் தானே இருந்தும் பயனென்ன ?
பித்தர் மலாடர் கோமான்போல் பெரிதும் பரிசே பெற்றிடுவார் !

கூட இருந்தே குழிபறிக்கும் கொடிய 'சகுனி' ஆவதனால்
கூட இருந்தே குழிபறிக்கும் 'கோட்சே' போன்றார் இருப்பதனால்
கூட இருந்தே குழிபறிக்கும் கொடிய எண்ணம் குமைவதனால்
வாடல் வதைதல் 'நல்லோரே' வையம் காணல் பொல்லாங்கே !

கருமை நீங்கும் கதிரவனால் கனிவே பெருகும் வெண்ணிலவால் !
கருப்பு மனமே கருகிவிடும் ! கனிந்த மனமே பெருங்கடலாய் !
கருகித் தீய்ந்த எருமுட்டை காணும் நெற்றி நீறணியாய் !
கருத்த முகிலே மழையாகும் காணும் பசுமை படர்ந்தினிதாய் !

கருத்த  எண்ணம் கரியாகின் காணும் யாவும் அழகழகாய் !
கருங்கல் கூட உளியாலே காணும் சிலையாய் வடிவழகாய் !
கருப்பர் உள்ளம் பால்வெண்மை கல்வி அவர்க்கோ பேரறிவாய் !
கருப்பைப் போக்கும் ஒளிநீயாய்க் காண எழுவாய் நீயினிதாய் !

- ஆர்க்காடு ஆதவன்

**

எல்லா வண்ணங்களுக்கும்
மடிகொடுத்த வானவில்
கருப்புக்கு மட்டும்
பிடிகொடுக்கவில்லை
கருப்பரசியல் எனும் வெறுப்பரசியல்
விண்ணிலிருந்தே
தொடங்குகிறது
கருப்புமுகில் இல்லைஎன்றால்
வெள்ளைமழைநீர் இல்லை
இருட்டு இருக்கும்வரை
ஒளி ஒளிந்துதான் ஆகவேண்டும்.
ஆதிபிரபஞ்சமும் சரி,
ஆதிமனிதனும் சரி
கருப்பின் இருப்புதான்
கருப்பு என்பது எங்கள் நிறம்
கதிரவனைச் சுவாசித்ததால் வந்த வரம்

- வேலாயுதம் மாரியப்பன்

**
கருப்பை நிறங்களின் கருப்பை எனலாம்
கரிசல் என்பது கருப்பு மணலாம்

காத்துக்கருப்பு அண்டாமல் காக்க
கருக்கரிவாள் ஏந்தும்
எங்கள் கடவுள்கள் கருப்பு

கருந்திராட்சை விழியாட
கருநாகக் குழலாட
கற்புக்கரசியாம் எங்கள்
காதலிகள் கருப்பு

இறுதியாய் ஒன்று;
எரித்தாலும் புதைத்தாலும்
மிச்சமிருப்பது கருப்பு
பின் ஏன் அதன்மேல்
இத்தனை வெறுப்பு?

- கவிஞர் மஹாரதி

**

செதுக்கப்பட்ட கடவுள்களின்
திருமேனியின் நிறம்தான்..
இருந்தும்
சபிக்கப்பட்ட நிறமும் இதுதான்..

மூடநம்பிக்கைகளால் மூழ்கடிக்கப்பட்ட
நிறமும் இதுதான்..
முற்போக்குச் சிந்தனையாய்
முழித்தெழுந்த நிறமும் இதுதான்..

மழை சுமக்கும் கார்முகிலின்
கர்ப்பத்தில் கலந்திருக்கும் நிறமும் இதுதான்..
கரு துளிர்க்கும் கருவறையில்
என் கண்ணும் உன் கண்ணும்
கண்டு வந்த முதல் நிறமும் இதுதான்..

இதெற்கெல்லாம் மேலாக..
வர்ணங்கள் வசப்படாத விழிகளுக்குள்
வார்க்கப்பட்டிருக்கும் 
ஒற்றை நிறம் இதுவென்பதே
இக் கருப்பின் மேல்
நான் கொண்ட மீப்பெரும் காதலுக்கான
முழுக்காரணம்..

- கீர்த்தி கிருஷ்.

**
விடாதுக் கருப்பென்பார், ஆகாதுக் கருப்பென்பார் !
கருப்பேக்   காப்பென்பார், கருப்பேச் சினமென்பார் !
கருமாரித் தெய்வமென்பார், காளியேச் சக்தியென்பார் ! 
அவரவர் நம்பிக்கை, அறிவு அது, அதையேற்பது !
நிறைமனம் உனதெனில், அன்பே காதலி,  மறுக்காதே !
நிறம் இங்குக் கருதாதே ,  நிசம் அதைத் தவிர்க்காதே !
நல் மனம் வெள்ளையடாத், தீ மனம் கருப்பேயடா !
தீயவரேக் கருப்பரடாத், தீண்டத்  தகாதவரடா!
பிறர்க்கின்னாச் செய்தலும், பிறன்மனை நோக்கலும் ,
தர்ம நெறி பிறழ்தலும் , தரங்கெட வாழ்தலும் ,
மனிதருக்கு அழகில்லை ; மன்பதைக்குச் சிறப்பில்லை !
அன்போடு வாழ்ந்துப் பார் ; அறிவின் வழி நடந்துப் பார் !
நன் மகனாய் வாழடா ; நற்றந்தையாய் ஒளிரடா !

- கவி அறிவுக்கண்.

**

வண்ணங்கள் பார்த்திருந்தே யாரும் இங்கே
வாய்பேசி நட்பினையே மறுப்போர் இல்லை
எண்ணங்கள் ஒன்றானால் என்றும் நல்ல
ஏற்றங்கள் தேடிவரும் இன்பம் அன்றோ
கண்மலர்ந்து கனிகின்ற உள்ளம் என்றால்
கனிச்சாறே தருமன்றோ சொற்கள் எல்லாம்
மண்நிலத்தில் விதையாலே பயிர்கள் தோன்றும்
மனநிலத்தில் “விதைத்துவிடு மகிழ்வை என்றும்”

கருப்பென்றே கார்முகிலை வெறுப்போர் உண்டோ
கண்ணிமையைக் கருப்பென்றே களைவோர் உண்டோ
உறுப்பெல்லாம் கருப்பென்றே அறுப்போர் உண்டோ
உல்லாசக் கருமலையை மறப்போர் உண்டோ
பெறுகின்ற மகழ்வெல்லாம் நிறத்தால் இல்லை
பேரன்பைப் பார்த்துநிறம் கொடுப்போர் இல்லை
அறமென்ற ஓர்வழிக்கே வண்ணம் இல்லை
அன்பமைந்த “நெஞ்சத்தில் நிறமே இல்லை”

புன்னகையின் ஒளிகாட்டு கருணை கொண்டு
புரிந்துகொண்டு உனைவாழ்த்தும் வளியே வந்து
அன்றலர்ந்த மலர்போலே இதயங் கொண்டு
இயன்றவரைக் கொடுப்பதுதான் ஈசன் தொண்டு
கன்றழைக்கும் தாய்ப்பசுவாய் பாசம் கொள்ளு
கருப்பென்றும் சிவப்பென்றும் பேதம் தள்ளு
நின்றழியும் நிறம்மறந்து நேசம் காட்டி
நிறைந்துலவும் “நிறமில்லா உயிரைப் போற்று”

-- கவிஞர் “நம்பிக்கை” நாகராஜன்

**

அண்டவெளி முழுவதும் கண்டேன்
.....அமைதியின் வடிவாய் கருப்புவடிவில்
ஆண்டவனை ஆலயங்களில் தேடினேன்
.....அழகின் திருவுருவாய் கருப்புவடிவில்
மேகத்தில் இருந்து மழைதருவது
.....மேன்மையான கருமேகம் அன்றோ
சோகத்தை வெளியே காட்டி
.....செய்திசொல்வது கருநிறம் அன்றோ
தும்பிக்கை கொண்ட யானைநிறம்
.....துள்ளிசை பாடும் வண்டின்நிறம்
நம்பிக்கையோடு வியர்வை சிந்தி
.....நாளும் உழைக்கும் மனிதனின்நிறம்
பெரியார் செய்த புரட்சியின்
.....பாய்ச்சலைக் காட்டியே நிறம்தானே
பாரதியைப் போல நம்நாட்டில்
.....புதுமையைச் செய்த நிறம்தானே

 - கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

தண்ணிக்கே கருப்பு வந்து
தலைநகரே தவிக்கையிலே!
தண்ணீர் பஞ்சம் தீர்க்க வரும்
மழை மேகம் கருப்பு!

கருப்பர்கள் தேசத்தில்
எல்லோருமே கருப்பு!
வெள்ளையர்கள் தேசத்தில்
கருப்புக்கே கருப்பு!

கன்னி ஆத்திகன் அணிந்து கொள்வதும்
கடவுள் மறுப்பு நாத்திகன் அணிந்து கொள்வதும்
நீதிதேவதை கண்ணைக் கட்டிக்கொள்வதும்
நீதிபதி அணிந்து கொள்வதும் கருப்பு துணியே!

வரிகட்டாமல் மறைக்கும் பணமும்
வயதை காட்டாமல் மறைக்கும் தலை மையும்
வாலிபத்தை மறைக்காமல் காட்டும் கண் மையும்
வரிகளை காட்டும் புத்தக மையும் கருப்புதான்!

உயிர் அரங்கேறும் கருவறையும் கருப்பு
உடல் அரங்கேறும் கல்லறையும் கருப்பு
வாகனம் ஊர்ந்து செல்லும் தார்சாலையும் கருப்பு
வரிகளை சுமந்து வரும் கவிதையும் கருப்பு!

-கு.முருகேசன்

**

வானம் சூடிக் கொண்ட கருப்பாடை
மண்ணை குளிரச் செய்கிறது - மழையாய் !

கண்ணில் ஒளிரும் கருவிழி
காணும் காட்சிக்கு ஆதாரமாய் - பார்வை !

காரிருளுள்  ஒளிந்திருக்கும் 
புதியதோர் தொடக்கமாக - விடியல் !

கல்லாலான கருப்பு சிலை - கஷ்டம்
தீர்க்கும் ஆபத்பாந்தவனாய் - கடவுள் !

அன்றாட வாழ்வின் ஆதாரம் அனைத்திலும்
கருப்பிற்கு உண்டு தனியிடம் !

ஏனோ, மனித நிறத்தில் மட்டுமில்லை
கருப்பிற்கென்று ஓர் மதிப்பான இடம்!

கருப்பு - காணும் காட்சிகளில் இல்லை
மனத்துள் படிந்துள்ளது அழுக்குத் திரையாய் !

அழுக்குத் திரை விலக்க - அழகு மனங்கள்
கண்களுக்கு காட்சி தரும் !
  
- பி. தமிழ் முகில்

**

கறுப்பு நிறத்தவன்
கடைக்கோடியில் பிறந்தவன்
வெள்ளத் தோல பார்த்து 
வேதனைப்படுகிறனே......

கதிரவனின் கதிரொளியால் 
உடலில் மெலானின் என்ற  நிறமியின்  
மிகுதியான உற்பத்தியால் 
கறுப்பு நிறமாறி
கலங்கி நிற்கிறானே ..........

கறுப்புத் தமிழா கலங்கி நிற்காதே
தாயும் கறுப்பு தான் தாயகமும் கறுப்பு தான்
தாழ்வு மனப்பான்மை எதற்கு
தகர்த்தெறி..... 

கா.பாலன், காஞ்சேரிமலை.

**

வர்ணங்கள் பலவுண்டு
அதிலே எனக்கும் ஓர் இடமுண்டு
என் பெயரோ கருப்பு என்பர்
அதனால் என்னை விரும்புவோா் சிலருண்டு
அபசகுனமாய் எண்ணி என்னை
வெறுப்போரும் பலருண்டு
இருந்தும் நான் கவலை கொண்டதில்லை
ஏனென்றால் வர்ணங்களில் என்னை மட்டும்
ஓர் கவிஞ்ஞன் கருப்புதான் எனக்கு பிடித்த கலரு
 என என்னை வர்ணித்து பாடியுள்ளான்
ஓபாமா என்னும் கருப்பு மனிதன்
வெள்ளை மாளிகையை அலங்கரித்த போது
வெள்ளைமாளிகையில் கருப்பு நிலவாய்
அண்றொரு நாள்  நான் மிளிர்ந்தேனே
அதனால் பேருவகை கொள்கின்றேன்
என் பெயராய் இப்படிக்கு கருப்பாக

- ஈழநிலா

**

Photo Courtesy : Markus Spiske on Unsplash (The New Indian Express)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com