Enable Javscript for better performance
Today is a lovely day | இந்த நாள் இனிய நாள் வாசகர் கவிதை பாகம் 4- Dinamani

சுடச்சுட

  
  good_day

  good day

  இந்த நாள் இனிய நாள்

  கீழ்வானை அலங்கரித்த செங்கதிர்கள்
  வெண்முகிலிடை ஊடுருவி மெல்ல பாய,
  இரைதேட அணி வகுத்த பறவைகள் 
  விண்ணுக்கு அழகு சேர்க்க,
  நுனிப்புல் மேல் பனித்துளி கண் சிமிட்ட
  கதிரவன் கண்ட தாமரை இதழ் விரிக்க,
  சிலிர்த்தெழுந்து கொண்டை சேவல் கூவ,
  கிளைகளிடை மறைந்திருந்து இசைக்கும் குயில்களோடு,
  மனிதருள் அறியாமை இருள் நீங்கி
  வன்செயல்கள் தவிர்ப்பதுடன், பெண்மை மதித்து, 
  இன்சொல் பகிர, மனிதநேயம் மலர்ந்திட
  வறுமை ஒழிந்திட , வளம் பெருகிட ,
  மனிதம் வளர்க்கும் நன்னாளாய்
  இன்முகம் காட்டி பொழுது புலரட்டுமே
  புன்னகை பூக்கும் பொன்னாளாய்
  இந்த நாள் இனிய நாளாய் !

  - தனலட்சுமி பரமசிவம்

  **
  விடுதலை நாட்டில் விளைந்த பின்னே
  விடுதலைப் பெற்றுக் கருவறை விட்டு
  தடுப்பணை இல்லாதாயின் அன்பில்
  தவழ்ந்த இந்நாள் இனிய நாளே!

  பட்டம் பெற்ற அந்தநாள், முதலில்
  பணியில் சேர்ந்த அந்தநாள், திருமணம்
  நடந்த முடிந்து முதலிரவு கண்டநாள்,
  நலமுடன் முதல்மகன் ஈன்றநாள் இனியநாள்!

  மொழியினம் மேம்பட முதல்போ ராட்டநாள்;
  மேடையில் முதன்முதல் முழங்கிய திருநாள்;
  அழிவிலா அருங்கவி முதலில் வடித்தநாள்;
  அருமை விருது அனைத்தும் பெற்றநாள்;

  பிறருக் குதவிய பெருமை மிகுநாள்,
  பாராட்டு மேடையில் பெற்ற நன்னாள்,
  உறவுகள் கூடி உவந்த   அந்நாள்
  உள்ளம் மகிழ்ந்த  இந்தநாள்  இனியநாள்!

  - நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு

  **

  கொஞ்சம் அழகு
      நிறைய அன்பு !
  கொஞ்சம் நட்பு
      நிறைய நம்பிக்கை!
  கொஞ்சம் தனிமை
       நிறைய இனிமை !
  கொஞ்சம் சுதந்திரம்
       நிறைய தைரியம்!
  கொஞ்சம் ஊக்கம்
       நிறைய உழைப்பு!
  கொஞ்சம் பெருமை
       நிறைய பொறுமை!
  கொஞ்சம் கற்பனை
       நிறைய கவிதை !
  இருந்தால் போதும்
  இந்தநாள் மட்டுமல்ல
  எந்த நாளும் இனிய நாளே !

  - கே.ருக்மணி.

  **

  மாமல்லபுரத்தில் மோடி-ஜின்பிங்க்  சந்திப்பு மகிழ்ச்சிதந்தது
   இந்திய சீனா உறவில் எதிர்காலம் நிச்சயமாகலாம்
  தமிழரின் விருந்தளிப்பில் ஜிங்க் பின் கவிழ்ந்துவிட்டார்
    தமிழராக மாறி மாமல்லபுரத்தில் வழிகாட்டினார் மோடி

  இமிழ்க்கடல் அமுதமாய் இனிக்கும் இச்செய்தி எனக்கு
     இந்த அக்டோபர் பதினோராம் நாள் இனிய நாள் நமக்கு
  அதிகாரப் பூர்வமற்ற பேச்சுவார்த்தை ஆனாலும் பலன் தரும்
     அருணாச்சலப்பிரதேச ஆக்கிரமிப்பு அகலலாம் வாய்ப்பதிகம்

  அதிகார பூர்வ மற்றபேச்சு பாக்கிஸ்தானுக்கு வைத்த ஆப்பு !
      அமெரிக்காவுக்கும் அதிர்ச்சி யளித்திருக்கும்! ஆனந்தம்தான்
  பதறாமல் யோசித்துப் பார்த்தால் பழமை சார்ந்தது இந்தபேச்சு
       நூறாண்டு பழமைச்செய்திகள் பரிமாறபட்டிருக்கலாம்

   சிதறாது இந்தியா!இப்படி மாநில மொழிகள் அனைத்துக்கும்
  :     இந்தியபிரதமர் மதிப்பளித்தால் எனச்சொல்லத்தோன்றும்  
  இந்தநாள் இனிய நாள்“ என ஏன்  சொல்லக் கூடாது
     இங்குள்ள எல்லோருக்குமே  இந்தநாள் இனியநாள்         

  - கவிஞர் அரங்க.கோவிந்தராஜன், இராஜபாளையம்

  **
  ஒவ்வொருவரும் நாளை விடியும் என்ற நம்பிக்கையுடன்
  இரவை  முடிக்கும் அனைத்துநாளும்  இனிய நாள்தான்!
  தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட 
  அம்மாவின்  வயிற்றில் இன்பமாக இருப்பதால்
  அந்த சிசுவிற்கு  ஒவ்வொருநாளும்  இன்ப நாள்தான்!
  பள்ளிக்கு செல்லும் மழலைக்கு  அன்புடன் 
  சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்
  பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்கு
  இனிய நாள்!.............
  கதிரவன்  வரும் எல்லா நாளுமே இனிய நாள்தான்!
  ஏழை பணக்காரன்  உயர்ந்தவர்  தாழ்ந்தவர்
  ஆண்  பெண்  என்ற  பேதமறியா 
  கதிரவனிடம் கற்போம்  நாளின் இன்பத்தை!
  மனிதனின்  மனம் எதை விரும்புகிறதோ
  தடையின்றி அது நடந்தால்  அவனுக்கு
  அந்த நாள் இனிய நாள்!
  மனிதர்களே நல்லதை நினைத்தால்
  நல்லது  நடக்கும்........நினைப்பில்
  களங்கம் இருந்தால்  அது  பிறக்கும் நாட்களை
  களங்கமாக்கி விடும்......
  தேவை இல்லாதவற்றை  பார்க்காதே!
  தேவை இல்லாதவற்றை  கேட்காதே!
  தேவை இல்லாதவற்றை  பேசாதே!
  என்ற மூன்று குரங்குகள்  சொல்லும்
  அறிவுரை   நினைவில் கொண்டால்
  எந்த நாளும் இனிய  நாள்தான்!

  - உஷாமுத்துராமன், திருநகர்

  **
  வட வேங்கடம் முதலாய்த் தென்
  குமரிக் கடல் முடிவாய் வளர்ந்தாய்
  ஒரு முகமாய் தமிழ் மொழியால்
  எங்கள் உணர்வாய்! தாயேயெங்கள்  உயிராய்;
  இனங்கள் பல இருந்தால் என்ன
  பலநாட்டில் பணி புரிந்தா லென்ன
  உணர்வால் ஒன்று படுவோம் அது
  மொழியால் எங்கள் உயிராய் என்றும்
  இணைவோம் சங்கத் தமிழால்! இன்பத்தமிழால்;
  ஒருதுன்பமும் வருமோ அது எழுமுன்னரே
  பொடியே ஒரு படையொ டுனைக்
  காப்போம் கன்னித் தமிழேயெங்கள் தாயே!
  செழுந் தமிழே! எங்கள் தாயே;
  புலவோர் பலர் அறநூற் பல
  அருங் காவியம் கொடுத்தாய் அந்த
  அமிழ்தைச் சுவைப் போமே உனை
  உயர்த்திப் பிடிப்போமே எங்கள் உயிரே!
  நீ வாழ்க! பல யுகமே!

  குறிப்பு:-
   
  நவம்பர் -1 - தமிழ்நாடு பிறந்த நாள்; மாநிலத்தை சிறப்பித்து எழுதப்பட்டது

  - கு. இரா, வடக்கு அயர்லாந்து.

  **

  கட்டியிருந்த ஆடை ஒட்டியிருந்த நிழல் சுற்றியிருந்த குருதி

  பற்றியிருந்த உறவுகள் அனைத்தையும் ஆண்டவன் உனக்கு

  வந்ததப்பா ஒருநாள் அந்த நாள் இந்த
  நாள் இனிய நாள்

  என்றாகிவிட்டதுவே; நனவு வரும் கனவு வரும் உறக்கம் வரும்

  பேருரக்கம் வரும் உயிரடக்கம் வரும்
  அவஸ்தை எனும்

  உருவத்திலே ஆண்டு அனுபவித்து விட்டவர்கள் எதிர்பார்ப்பு

  இந்த நாள் இனிய நாள் என்றாகிடவே;
  வாழும் போது தாழத்

  தெரியவில்லை; தாழும் போது வாழத் தெரியவில்லை

  மாசற்ற மனதில் எழும் தூசுதும்புகளை
  யாரேனும் சுத்தம்

  செய்வார்களா; இந்த நாள் இனிய நாள் என்றாகிடுமா ஏக்கம்

  ஏங்கும் உள்ளங்களை யார் தேற்றுவார்
  அன்னவரையே யாரும்

  போற்றுவார்; இனிய நாளை எட்டிடவே ஏமாற்றுவார் எதற்கும்

  அசையாதாரை தூற்றுவார் இந்த நாள் இனிய நாள் என்றாகிடவே

  ஒவ்வொரு விடியலும் ஒவ்வொருக்கும்
  இந்த நாள் இனிய நாள்

  ஒவ்வொரு கொடியசைந்து வாழ்த்தும்
  இந்த நாள் இனிய நாள்

  ஒவ்வொரு நொடிபிறக்கும் போதிலும்
  இந்த நாள் இனிய நாள்
   
  - ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

  **

  சென்றநாள் கசந்தநாள் நன்றி கடனாக
  நமக்களித்துச் சென்றநாள் அந்த நாளே
  இந்த நாள் இனிய நாள் என்றெண்ணி
  மகிழ்ச்சியாக கொண்டாடுவார் சிலரே

  சூடுபட்ட பூனை அடுப்பண்ட போகாது
  என்பார் போல் கசந்தநாள் கண்டவர்
  இனிய நாளை அளவோடு கொண்டாடி
  கசந்தநாள் வராதிருக்க சிக்கணிப்பார்

  பழைய குருடி கதவைத் திறடி என்னும்
  பழமொழிக்கொப்ப துன்புற்ற நாளின்
  நினைவு கொண்டு மீண்டும் துன்புறா
  திருக்க தம்மை சுதாரித்துக் கொள்வர்

  இந்த நாள் இனிய நாள் தான் இனியும்
  வரவிருக்கும் நாள் எந்த நாள் என்பது
  அவரவர்களே நிர்ணயிக்க ஆகிவிடும்
  இந்தநாள் எந்தநாளும் இனியநாளாக

  - வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை 

  **

  வாருங்கள் வாருங்கள் இளைஞர்காள்
  ----வருங்காலம் உங்களுடை தோளில்காண்
  பாருங்கள் உலகத்தைப் பட்டறிவால்
  ----பாதைவரும் நீநடக்கக் கண்முன்னால் !
  தன்னம்பிக்கை என்பதைநீ கைகொண்டால்
  ----தளராத முயற்சிதனை மெய்கொண்டால்
  முன்நிற்கும் தடைகளெல்லாம் தூளாகும்
  ----முன்னேற உனையேற்றும் படியாகும் !
  சாதிக்கப் பிறந்தவர்கள் எனும்நினைப்பில்
  ----சரித்திரத்தை மாற்றுபவர் எனும்பிடிப்பில்
  மோதியெழு உனைக்கண்டே தோல்வியஞ்சும்
  ----மோகத்தில் உனையணைத்தே வெற்றிகொஞ்சும் !
  உனையுயர்த்தும் மந்திரமும் உன்மனமே
  ----உனைத்தாழ்த்தும் தந்திரமும் உன்மனமே
  முனைப்போடு மனத்தைநீ வசப்படுத்து
  ----முயல்வென்ற ஆமையெனப் புலப்படுத்து !
  ஏற்றங்கள் தானாக வந்திடாது
  ----ஏணிவந்து உன்னருகில் நின்றிடாது
  மாற்றங்கள் எல்லாமே உன்கரத்தில்
  ----மனத்துணிவில் நீசெய்யும் செயல்பாட்டில் !
  மூலையிலே முடங்காமல் தலைநிமிர்த்து
  ----மூடியுள்ள இருள்விலக விழியுயர்த்து
  காலையிளம் பரிதியென வாழ்வொளிரும்
  ----கனவுகண்ட இனியநாளும் வந்தொளிரும் !

  - பாவலர் கருமலைத்தமிழாழன்

  **
  மனம் போன போக்கில்
  போகாமல்!
  தினமும் அனுதினமும்
  ஆராய்ந்து செயல்படும் எந்த நாளும் இனிய நாள் தான் என்று
  இந்த நாளும் இனிய நாள் தான் என்றே நம்மை  சொல்லிட வைக்கும்!

  கூட்டாக உழைத்து
  அதன்மூலம் வரும்
  லாபத்தை: சரிசமமாக
  எந்த நிறுவனங்கள்
  தருகிறதோ!
  அங்கே இந்த நாள்
  இனிய நாள் ஆகிடுமே!

  தேவையானவற்றை!
  தேவைக்கு ஏற்ப!
  தேவையான போது!
  தேடிக்கொடுப்பவர்கள்
  இருக்கும் இடத்தில்
  இந்த நாள் இனிய நாள் ஆகிடுமே!

  தான் தனக்கு என்றில்லாமல்!
  மழை போல் பொதுவாக
  நினைத்து செயல்படும்!
  நிலையான மனங்கள்
  உள்ள இடத்தில்;
  இந்த நாள் இனிய நாள் ஆகிடுமே!

  நாம் ! நமது! நம்மவர்!
  இப்படி சமத்துவம்!
  சகோதரத்துவம்!
  உள்ள இடத்தில்;
  இந்த நாள் இனிய நாள் ஆகிடுமே!

  வயதான போதிலும்
  தாயை! தந்தையை!
  கைவிடாத பிள்ளைகள்
  உள்ள இடத்தில்;
  இந்த நாள் இனிய நாள் ஆகிடுமே!

  செய்த உதவியை
  அந்த உதவியால்
  கிடைத்திட்ட பதவியால்
  உதவி செய்தவர்!
  உதவி நாடி வரும் போது!
  உதாசீனம் செய்யாமல்!
  உதவும் குணங்கள்
  உள்ள இடத்தில்!
  இந்த நாள் இனிய நாள் ஆகிடுமே!

  - கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்

  **

  அதிகாலை சூரியனுக்கு முன்னும் 
  வெறும் வயிற்றில் இரை தேடி பறக்கும் 
  பறவைகளுக்கு முன்னும் 
  கூவும் சேவலின் குரலோசை
  கொக்கரிக்கும் கோழியின் அழகோசை 
  தாய்ப்பாசத்தை வெளிப்படுத்தும் 
  அம்மாவெனும் பசுவோசை 
  இவைகளை இனிமையாய் கேட்குமுன்னும் 
  ஓசோனின் ஆக்சிஜனை உறிஞ்சி எடுக்க 
  மாசில்லா காற்றுதனை கட்டித்தழுவ 
  சப்தமில்லா ஓசையை உணர்ந்து ருசிக்க 
  படுக்கையிலிருந்து எழும் மனிதனுக்கு 
  இந்த நாள் இனிய நாளாகும்.

  - மன்சூர் அஹமத்

  **

  அன்பென்ற மழையில்
  ஆசைகளற்ற நிலையில்
  இன்புற்று மனிதர்
  ஈன்றோரை மறவாது,
  உண்மையை உணர்ந்து,
  ஊக்கமே உழைக்க
  என்றும் பெருமையாம்,
  ஏற்றமே அருள் கொடையாம்,
  ஐயமில்லா பெருவாழ்வில்
  ஒன்றுபட்டு நாம் வாழ,
  ஓங்கட்டும் நம் புகேழே
  ஒளவை சொல் மந்திரமாம்,
  சாதியற்ற சமுதாயம் அமைந்திட்ட அந்நாளே
  இனிய நாள் என்றுரைப்பேன்.

  - செந்தில்குமார் சுப்பிரமணியன்

  **

  உண்மைக்காதல் உலகில் நிலவும் நாள்
  போதைப்பொருள் உலகில் புழங்கா நாள்
  கலகம் கலட்டா குழப்பம் இல்லா நாள்
  கலப்படமில்லாப் பொருள் விற்கும் நாள்
  மாசு இல்லாத காற்று கிடைக்கும் நாள்
  மாசு நிறை கள்ளப்பணம் கலக்கா நாள்
  சாலைகளில் வாகனங்கள் இல்லா நாள்
  சாலைகளில் விபத்துகள் நிகழா நாள்
  அரசியலாளர் பண்புடன் நடக்கும் நாள்
  அரசியலில் இலஞ்சஊழல் இல்லா நாள்
  பெண்கள் பாதுகாப்பாய் வலம் வரும் நாள்
  ஆண்கள் குடித்துக் கும்மாளம் போடா நாள்
  இல்லத்தையேற்று மக்கள்இனிதே நடத்தும் நாள்
  நல்லறமே கொண்டு மானிடர் வாழும் நன்னாள்
  அந்த இனிய நாள் இனிவரும் காலத்தில் வருமோ?

  - மீனாள் தேவராஜன்

  **
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai