'மதுரை’ வாசகர் கவிதை பகுதி 3

'மதுரை’ வாசகர் கவிதை பகுதி 3

பிழைபுரிந்த மன்னனுயிர் துறந்த ஊராம் எட்டுதிக்கும் தெரியுமாறு உயர்ந்து நிற்கும்

மதுரை

கண்களின் வியப்பு அழகரின் மலையாம்
சொற்களின் வியப்பு தமிழெனும் மொழியாம்
நறுமண வியப்பு மல்லிகைப் பூவாம்
செவிகளின் வியப்பு இசைத்தமிழ்ப் பாவாம்
அணைத்திடும் வியப்பு வைகையென் றாறாம்;
சங்கங்கள் வியந்தே சிறந்ததிவ் வூரே
பெண்மையும் வியந்தே ஆண்டவோர் ஊரே
வீரமே செறிந்து வியந்ததோர் ஊரே
திருவிழா வியந்தே விழித்திடும் ஊரே
நான்மாடம் வியந்தே கூடிய ஊரே
கீழடி வியந்தே மூத்ததிவ் ஊரே - என்றும்
புதுமைகள் வியக்கும் இளமைக்கோர் ஊரே!

- கு. இரா, வடக்கு அயர்லாந்து

**

தூங்காத நகரமெனும் மதுரை ; தொன்மை
துலங்குகின்ற கூடலெனப் போற்றும் ஊராம்
தாங்கிநின்று தாயாகத் தமிழ்வ ளர்க்கத்
தகுசங்கம் நான்கிருந்த தமிழின் ஊராம்
பாங்காகப் பாண்டியர்கள் ஆட்சி செய்து
பார்போற்றும் தலைநகராய்த் திகழ்ந்த ஊராம்
மூங்கையனாம் குருபரனைப் பேச வைத்து
மூத்தபிள்ளைத் தமிழ்நூலைத் தந்த ஊராம் !
கள்ளழகர் இறங்குகின்ற வைகை யாற்றின்
கரைதனிலே அமைந்திருக்கும் அருமை ஊராம்
அள்ளியணைத் தின்னல்கள் போக்கி யின்பம்
அருள்கின்ற மீனாட்சி கோயில் ஊராம்
வள்ளியுடன் தெய்வானை இணைந்து வேலன்
வாழுதிருப் பரங்குன்ற அண்மை ஊராம்
உள்ளத்தை மயக்குகின்ற மல்லி கைப்பூ
உயரினத்தால் புகழ்பெற்று மணக்கும் ஊராம் !
பிட்டுக்கு மண்சுமந்த சிவனின் ஊராம்
பிழைபுரிந்த மன்னனுயிர் துறந்த ஊராம்
எட்டுதிக்கும் தெரியுமாறு உயர்ந்து நிற்கும்
எழிலான கோபுரங்கள் நான்கின் ஊராம்
வட்டமாகத் தாமரைப்பூ விரிந்த போன்ற
வடிவமுடன் ஒளிர்கின்ற வளமை ஊராம்
கட்டடத்துக் கலைமிளிரும் நாயக் கர்தம்
கவின்மகாலால் சிறப்புற்ற கவிதை ஊராம் !

- பாவலர் கருமலைத்தமிழாழன்

**

மதுரைக்கென்று மகத்துவங்கள் பல மிகவுண்டு!
தூங்கா நகரமாய்த் துலங்கிடும் அதுவென்றும்!
பாண்டியன் வாழ்ந்ததும் கோவலன் வீழ்ந்ததும்
வரலாற்றில் வந்துற்ற கரும்புள்ளி என்றிட்டால்
கோப்பெருந் தேவியும்  கொடுவிழி கண்ணகியும்
சரித்திரம் படைக்கவென்றே சமூகத்தில் உதித்தவர்கள்!
சங்கம்வைத்துத் தமிழ்வளர்த்த தங்கத் தமிழர்பலர்
வதிந்த மதுரையிலே வாழ்கின்றார் மீனாட்சி!
வேலைக்கு உணவென்ற வியத்தகு பண்பதுவை 
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதனால்
உலகுக்கு உணர்த்திட்டார் ஓய்வில்லா சிவபெருமான்!
ஈசனே இயற்றினாலும் இருக்கும் தவறதனை
ஓசைப் படாமலேற்க ஒருநாளும் முடியாதென்று
உயிரினும் மேலாம் உயர்தமிழ் எமக்கென்று
கச்சை கட்டிய கவின்புலவர் நக்கீரனை
ஈன்றெடுத்த மதுரைக்கு ஏதுநிகர் உலகினிலே!
கீழடி ஆய்வுகளும் கிட்டிவரும் சான்றுகளும்
மதுரையின் பெருமைக்கு மகோன்னதம் பெற்றுத்தரும்!
மல்லி என்றால் மதுரையையே மனம்நினைக்கும்
மணமதுவோ நம்மூக்கின் துவாரம் துளைக்கும்!

-ரெ.ஆத்மநாதன்,  காட்டிகன்,சுவிட்சர்லாந்து

**

மருத மரம் மண்ணில் விளைந்திருக்க ,
மதுரம் எங்கும் திளைத்திருக்க ,
வைகை நதிக்கரையில் எழில் கொஞ்சும்
மாசில்லா மாநகரமே ! மா மதுரையே !
தமிழ் வளர்த்த சங்கங்கள்
ஆழிபேரலைகளில் அழிந்து போன போதிலும்
கடைச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த
பெருமை கொண்ட நகரமே மதுரையே !
மீனாட்சியம்மன் திருக்கோயிலுடன் நாயக்கர்மகால் மிளிர,
தொன்மை வாய்ந்த கூடல் நகரமே !
பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும்
பாண்டிய மன்னர்களின் தலைமை நகரமே !
மண்ணில் பாரம்பரிய விழாக்களோ கோலாகலமாய்
கண்கவர் சித்திரை திருவிழாவுடன்,
காணும் பொங்கலுடன் மெய்சிலிர்க்கும் ஏறுதழுவலும் ,
ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்களின் எடுத்துக்காட்டாய் அமைய ,
கல்வியுடன் தொழில்வளம் செழிக்க கண்டு
விண்முட்டும் புகழுடன் குதூகலிக்குமே
மதுரை மாநகரமே !

- தனலட்சுமி பரமசிவம்

**

நாற்திசையிலும் கோபுரம்  சூழ,
மிதமாய்   வைகை  தவழ ,
பொற்றாமரை  குளம்  தமிழ்  கோல்  ஓச்ச, 
சங்கம்  வைத்து  தமிழ்  வளர்த்த ,
எங்கள்  மதுராபுரி  மதுரை !!
மண மணக்கும்  மல்லியும்  இங்குண்டு ,
குளு குளு  ஜிகர்தண்டாவும்  இங்குண்டு ,
சுட  சுட  இட்லி நடுசாமத்திலும்  பசியாற,  இங்குண்டு ,
வண்ண வண்ண சுங்குடியும்  இங்குண்டு ,
வகை வகை வளையல்  விற்கும்  வளையல்கார  வீதியும் இங்குண்டு,
என்றும்  திருவிழா  கோலம்  பூண்டு  இருக்கும்  எங்கள் திருவிழாநகரம்   மதுரை!!
நெற்றிக்கண்ணை  திறந்தாலும்  குற்றம்  குற்றமே 
என்று  நக்கீரன்  உணர்த்தியதும்  இங்கே ,
நியாயத்திற்காக  பெண்கள்    போராடவேண்டும் 
என்று  கண்ணகி  சிலம்பை  தூங்கியதும்  இங்கே ,
இன்று உயர்  நீமன்றத்தின்  ஓர் கிளையும்  இங்கே !!
இதுவே எங்கள்  மீனாட்சி  (மீன்)  ஆட்சி   செய்த    மதுரை !!
 
 - ப்ரியா ஸ்ரீதர்

**

மலையான் மகள் மீனாட்சி மண்ணாள பிறந்த பூமி
‘மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்‘
என யானை கட்டிப் போரடித்த வளமான பூமி
அண்ணன் அழகர் வைகை இறங்கி வருகையில்
சொக்கருக்கும் மீனாட்சிக்கும் திருமணம் முடிந்ததே
சோகத்தில் கோபத்தில் தல்லாகுளமிருந்து திரும்பினாரே!
கல்யாண விருந்துண்டு களைப்புற்ற குண்டோதரன்
தாகம் தீர்க்க நீர் சுரக்க உண்டானது வைகை ஆறும்
அவன் கைவைக்க, இன்றும் கையாளவே ஓடும் நீரும்
வைகை ஊற்றுப்பெருக்கால் மதுரை வளம் பெறுங்கால்
மாற்றுவளம் கண்டது சுற்றிச்சூழ் விரிகண்மாய்களால்
கண்மாய் பாசனமும் காணாமல் போனதே கயவர்களால்
கண்மாய்கள் மாயமாய் மறைந்தெப்படி மாநிலத்தீர்
மயங்க வேண்டாம், கண்மாய்கள் மேவி கட்டிடமாய், பணமாய்
மருவி, சிறு மழையிலும் வெள்ளப்பெருக்கு காணும் மாயை
மாணிக்கவாசகருக்கு வைகை பெருகியதுபோல் காண்பீர்
இன்றும், மதுரைக்கோவில் குளமதில் பொற்றாமரை காண்பீர்
அன்று மதுரையே தாமரைப்பூ வடிவில் அமைந்ததை அறிவீரோ
அண்டி சுற்றியமை நாற்புறத்தெருக்கள் தாமரையின் இதழ்களாம்
வண்டாடும் பூவின் மையமே வானாட்சி கொள் மீனாட்சிகோவிலாம்
பூவைச் சுற்றும் வண்டுகளாய் இன்றும் மக்கள் மதுரை நாடுவது
பூரிக்கும் வணிகச் சந்தையில் மூழ்கி, செல்வ முத்தெடுக்கவோ?

- மீனா தேவராஜன், சிங்கை

**

முத்தமிழ் சங்கம் கண்ட மதுரை.
மதுரை என்றாலே மல்லிகை பூ நினைவிற்கு வரும்!
மதுரை என்றாலே
கற்புக்கரசி கண்ணகியும் நினைவுக்கு வரும்!
மதுரை என்றாலே
ஆடல் வல்லானின்
திருவிளையாடல்கள்
நினைவுக்கு வரும்!

 மதுரை என்றாலே
இறைவனின் தலையிலிருந்து
வந்திட்ட இனிப்பு ( மதுரம்= இனிப்பு)

மதுரை என்றாலே
இது ஆடல் வல்லான்
கால்மாற்றி ஆடிய
நான் மாடக்கூடல்!

 மதுரை என்றாலே
தூங்கா நகரம்!
ஆலயம் சூழ்ந்த நகரம்!
வைகை நதி பாயும் நகரம்!
திருமலைநாயக்கர் அரண்மனை உள்ள நகரம்!

வைகை ஆற்றில்
கள்ளழகர் இறங்கும் விழா!
அவனியாபுரம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா!
மதுரைக்கு பெருமை
கூட்டும் விழா!

சீறாநாகம்!( நாகமலை)
கறவாபசு!(பசுமலை)
பிளிறா யானை!( யானைமலை)
முட்டாகாளை!( திருப்பாலை)
ஓடா மான்!( சிலைமான்)
வாடா மாலை!( அழகர் மலை)
காயா பாறை!( வாடிப்பட்டி)
பாடா குயில்!( குயில் குடி)
அக்காலத்தில் மதுரை
எல்லை ஊர்கள்.

மதுரை மனங்களை
கொள்ளை கொள்ளும்
அன்னை மீனாட்சி சொக்கநாதரின்
அருளாட்சிக்கு
அத்தாட்சி.

- கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்.

**

மரகதக்கல் மீனாட்சி, மல்லிமணக்க, ஆயிரங்கால் மண்டபத்தில் அருளாட்சி  !
மெருகேற்றச் சிற்பத் தூண்கள், இரண்டின் அடுக்கு ஐந்து இரண்டொடு, இசைத் தூண்கள் ஏழும்  சிற்ப ஆட்சி !
(2×2×2×……10காரணிகள்=1024) 
நகரக் கட்டமைப்பும்,  திருமலை நாயக்கர் மகால் கட்டமைப்பும், மதுரையில் மனம் அள்ளும் காட்சி  !
சிறப்புக்கு, ஆற்றில் அழகர் இறங்கல், மீனாட்சிக் கல்யாணம், சித்திரைத் திருவிழா, தர்காவின் சந்தனக்கூடு திருவிழா சாட்சி  !
மதுரையை ஆண்டது பாண்டியர், சோழர், சுல்தான், விசயநகரப் பேரரசு, நாயக்கர், கர்நாடகர், ஆங்கிலயரே !
மதுரையின் எல்லை, சீறா நாகம், கறவா பசு, பிளிரா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மாலை, காயா பாறை, பாடா குயில் என்பரே !
இன்றோ, கிரானைட்,தகவல் தொழில்நுட்பம்,  மருத்துவ, சட்ட, வேளாண் கல்லூரி, மாநகராட்சி நிர்வாகத்திலே ! 
இனிய வானூர்தி, தொடர்வண்டி நிலையமும், தேசிய நெடுஞ்சாலைகளும் மாசில்லா, மதுரை நகரினிலே !
மதுரையை கண்ணகி எரியூட்டிய தணல்  இன்றும், வெயிலாய் காய்ந்திட, வெக்கைக்குச் சிகிர்தண்டா!
மதுரமாய் தேனும், இரவில், வணிகமும், ஆட்டுக்கால், பருத்திப்பால் கிடைக்கின்ற தூங்கா நகரமடா !
சீரும் பெருமையுமாய் நிர்வாகம் நடக்கையில், பிணக்கும் கொலைகளுமாய், சிலர் கோபக்காரடா !
சிந்தித்தால், மதுரை, நமக்கன்பும்,பிரியமும் காட்டி,  அணைக்கும் உறவாடா !

- கவிஞர் இலக்கிய அறிவு மதி.

**

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com