'மதுரை’ வாசகர் கவிதை பகுதி 1

மதுரைக்கு வழங்கபடும் சிறப்பு பெயர்கள் - 'கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ், 'சீவன் முத்திபுரம்', கடம்பவனம்,
madurai collectorate
madurai collectorate

மதுரை

அமிழ்தினும் இனிய
தமிழ் வளர்த்த
மாமதுரையே!
கீழடி மட்டும்
உன்னுள் புதைக்கப்பட்ட
வரலாறுகள் அல்ல!
உலகெங்கிலும் தமிழ்
நறுந்தேனாய்
முழங்கிய காலம்
இன்னமும் பல
இடங்களில் மௌனமாய்
கற்றறிந்தார்போல
இனித்துக் கிடக்கிறது!
அழகர்பெருமாளாய்
திருப்பரங்குன்றத்தவனாய்
மீனாட்சியின் பதியாய்
எல்லா இறையும்
ஒன்றென அன்பெனும்
தத்துவத்தை உணர்ந்த
உன் நகர் புகழை
வாழ்த்துவோமே!

- நிலா

**

பற்பலநூற் றாண்டுகளாய் உயிர்ப்பாய் நிற்கும்
       பத்மமலர் போலமைந்த நகரம் எங்கள்
சிற்பநிறை சிங்காரக் கோயில் கொண்ட
       சிறப்புமிகு மதுரையம் பதியே ஆகும்
தற்பெருமை இல்லையிது தாமு ணர்ந்த
       சத்தியமே இன்றளவும் பெருமை பாடும்
நற்புராணத் திருவிளையா டல்கள் யாவும்
      நடந்தவிடம் வைகைநதிக் கரைமண் ணாகும்

நான்மாடக் கூடலெனப் பெயரைக் கொண்டு
      நற்கோவில் நகரமென விளங்கும் மண்ணில்
தேன்தமிழின் சங்கமெலாம் இலக்கி யங்கள்
     திகழும்பொற் றாமரைக்கு ளத்தில் நன்றாய்
வான்புகழ அரங்கேற்றி மகிழ்ந்த தன்றோ
     வண்ணத்தேர் பவனிவர மீனாள் காணும்
கோன்போற்றுந் திருவிழவின் கோலங் கண்டால்
     கொள்ளையெழில் மதுரைக்குக் கூடு மன்றோ.

கள்ளழகர் எழுந்தருளும் காட்சி காண,
      கண்களெலாம் வைகையிலே அலையு மன்றோ
எள்ளளவும் குறைவிலாத வீரங் கொண்ட
      எழுச்சியுறு மக்களவர் ஊரே யன்றோ
துள்ளுதமிழ்ப் பேச்சுக்குச் சொக்கா தார்,யார்
      தோன்றுகின்ற அங்கயற்கண் ணியருள் கின்ற
அள்ளுமெழில் ஆலயந்தான் அணியாய்ச் சூடி
      அன்றுமின்றும் என்றுமொளிர் மதுரை யன்றோ!

- கவிமாமணி "இளவல்" ஹரிஹரன், மதுரை

**

புத்தக ஏடுகளை விழுங்கியது
பொற்றாமரைக் குளம்...
புனல்வாதம் நிகழ்ந்த போது!
கொற்றவனின் கொடிமீனைக்
கூசச் செய்தன
மீனாட்சியின் விழிச்சுடர்கள்
கள்ளழகர்
கடந்த கால நதியைத் தேடிவந்து
ஏமாறுகிறார் ஆண்டுதோறும்
ஒவ்வொரு கவிதைப் போட்டியிலும்
தாங்க முடியவில்லை
தருமிகளின் ஆதிக்கம்
நக்கீரன் இல்லாததால்
தனக்குத் தானே பட்டம் சூடித் திரிகிறார்கள்
தமிழ்க்கவிஞர்கள்
சங்கம் வைத்துத்
தமிழ்வளர்த்த மதுரையில்
பெரிய எழுத்து இந்தி
கோவில் மண்டபத்தில்
இன்னமும் சில பாட்டிகள் இருக்கிறார்கள்
பிட்டுக்கு மண்சுமந்த சிவனைக் காண

- கோ. மன்றவாணன்

**

அன்று மீன் ஆட்சி 
ஆள்வோர் கொடியில்
இன்று மீனாட்சி
ஈர்க்கும் மதுரையை
உலகம் உவக்கும்
ஊக்கமாய் கீழடி
என்றும் தூங்கா
ஏகாந்த மதுரை
ஐயம் இல்லா
ஒற்றுமை உணர்வு
ஓர் நீதி ஓர்குடை
ஒளவை இருந்த
சங்கப் பலகை- அதுவே
இளமை மாறா எக்ஸ்ப்ரஸ் மதுரை.
தினமும் மணக்கும் ஓர் மணி- தினமணி

- கவிதாவாணி மைசூர்

**

பொதுமறை என்னும் திருக்குறள் நூலை
     பொலிவுடன் அரங்கேற்றிப் - புகழ்
எதுவரை எனும்படி இயம்பிடா ஏற்ற 
     ஏற்றத்தை ஏற்றநகர் !

முத்தமிழ்ச் சங்கம் வளர்த்தத னாலே
     மொழியும் முதன்மைநகர் !- நான்கு
முத்தெனும் கோயில்கள் முகிழ்த்தத னாலே
     நான்மாடக் கூடல்நகர் !

மதுரைக் காஞ்சியும் சிலப்பதி காரமும்
     மதுதமிழ்த் தேன்பாய்ச்சும் !- அந்நாள்
மதுரை மக்களின் மாண்பினைப் பற்றி
     மலைத்திடக் கதைபேசும் !

வீதிகள் அழகினை விளக்கியே காட்டிடும்
     வியன்தமிழ் வழிதுலங்கும் !- அவ்
வீதிகள் திருவிளை யாடற் புராணத்தில்
     வியக்கவே தான்விளங்கும் !

மல்லிகை மலரால் மணந்திடும் நகரம்
     மாட்சி மிகுநகரம் !- மதுரை
சொல்லினில் அடக்க முடிந்திடா தென்றும்
     தொன்மை மாநகரம் !

- ஆர்க்காடு. ஆதவன்

**

மீன் ஆட்சி செய்ததும்
மீனாட்சி வாசம் செய்வதும் மதுரை!
நாயக்கரும் மருதநாயகரும்
ஆண்ட பூமி மதுரை!

வைகை நதி ஓடும் கூடல் நகர்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த
பாண்டிய நாட்டின் தலைநகரம்!
தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரம்!
தொன்மையான தூங்க நகரம்-இதை
தொல்லியல் ஆய்வும் பகரும்!

மதுரை மல்லி மணம் வீசும்
மதுரைத்தமிழ் குணம் பேசும்!
சித்திரைத் திருவிழா
சிறப்பு சேர்க்கும்!
கள்ளழகர் ஆற்றில் இறங்குவது
அனைவரையும் சேர்க்கும்!

மதுரை அலங்காநல்லூரில்
திமில் வைத்த காளை வரும் துள்ளிக்கிட்டு- அதை
மீசைவைத்த காளை வந்து அடக்குவது ஜல்லிக்கட்டு!

மதுரை சில அரசியல்வாதிக்கு
கொடுத்தது சிறப்பு அதிகாரம்!
இலக்கியவாதிகளுக்கு கொடுத்தது
சிலப்பதிகாரம்!

உலகிலேயே சதுரமாகவும்
சாதுர்யமாகவும் வடிவமைக்கப்பட்ட நகரம்!

பள்ளியில் கல்விக் கண்திறந்த காமராஜருக்கு
பல்கலைக்கழகம் அமைத்த நகரம்!

பாண்டிய மன்னன் நீதி சொன்ன இடத்தில
நீதிமன்றம் அமைக்குது அரசு!
மாடு பிடிக்கும் வீரர்கள் உள்ள ஊரில்
மருத்துவமனைக்கு இடம் பிடிக்குது அரசு!

- கு.முருகேசன்

**

முதல் இடை கடைச் சங்கங்களின் எழுச்சி மதுரையிலே
சுதந்திரமாய் தமிழ்க் காற்று வீசியதும் அங்கே தான்
இதந்தரும் செந்தமிழ்ப் புலவர்களின் இருப்பிடமானதே
முதலில் நக்கீரருக்கு சிவன் முக்கண் காட்டியதுமங்கே

சொற்பேச்சு கேட்டு ஆராயாது தந்த பாண்டியன் தீர்ப்பு
விற்க சிலம்பெடுத்து வந்த கோவலனின் சாவில்முடிய
விற்களின் வீச்சில் வாதாடி மாணிக்கப்பரல்கள் என்றாள்
சொற்களில் சினங்கொண்ட கண்ணகி மன்னனிடம்

நாணயத்தின் நல்லுருவம் பாண்டியன் மனம்புண்பட
ஆணவமழிந்து அக்கணமே உயிர்விட்டான் ராணியுடன்
கோணலற்ற ஆட்சி நடந்த மண்ணில் சிறுதவற்றால்
நாணலும் எரிந்துபோகுமளவு மதுரை எரிந்துபோனதே

முத்து வணிகத்திலே சிறந்து விளங்கிய நகரம் அது
வித்தாய் ஆன்மிகம் வளர மீனாட்சியம்மன் கோயில்
எத்திக்கும் எங்கும் கோயில்கள் சத்திரங்கள் இருந்ததே
புத்திக்கு என உலகத் தமிழ்ச் சங்கம் கண்டதே அரசும்

கூடல் நகர் கடம்பவனம் என இலக்கியம் கூறும் மதுரை
பாடல்பெற்ற திருமலை நாயக்கர் மகாலின் அழகுடன்
தேடலுடன் தென்தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலமல்லவா
வாடலற்ற பழந்தமிழின் பெருமை பேசும் நகரமல்லவா

- கவிஞர் ராம்க்ருஷ்

**

பஃறொளி ஆற்றின் கரையிலே எங்கள்
பண்டையர் வாழ்ந்த பாண்டித் தலைநகர்;
குமரியை அமிழ்திட்ட கடற்கோள் கடந்து;
வையைக் கரையில் புகுந்து எங்கள்
வம்சந் தழைத்தச் சங்க வைத்து;
தமிழை வளர்த்து தரணிக்கே
தங்க ஆச்சாரம் தந்து;
உலக மனிதனின் பாட்டன் பிறந்து;
உன்னத அன்னையுமை ஆண்டு;
பழங்கதைகள் நிறைந்து;
வெறுங்கதை இல்லா புகழ்கதை ஆகி;
பூந்தோட்டம் மேவி பூச்சிந்தும் தேன்
வையையாகிப் புறப்பட்ட இடமோ!
அதனை உரைப்பதால் மதுரையோ!
யானை கட்டிப்போராடிக்கும்
வளமை கொண்டது;
உலகப் புகழ்க் கோயிலின் அருளைக் கொண்டது;
சிலம்புக்கதை திருப்பம் தந்த
வாழ்க்கதை மாற்றும் நகர்;
போற்றும் தமிழ் நூல்களெல்லாம்
மதுரை நகர் தந்த சங்கத்தாலே;
கீழடியில் பார்ப்பதெல்லாம் உயர்ந்த முகட்டின் வடிவினையே.......

- ப.வீரக்குமார், திருச்சுழி.

**

பண்டைய கால நகரிது,
பைந்தமிழ் வளர்ந்த ஊரிது,
பண்பட்ட நாகரீகத் தொட்டிலிது,
கீழடி என்ன மேலுலகையும் வென்ற  ஊரிது,
தடாதகைப் பிராட்டியாரின் வீரம்
சொல்லும் ஊரிது,
மருத நிலங்களின் மத்தியில்
அமைந்த ,  தமிழ்மது உரைக்கும் பூமியிது,
சங்கத்தில் பழுத்த சான்றோரின்
சொந்த ஊரிது,
இறையையே தமிழால் எதிர்த்த ஊரிது,
மங்காப் புகழோடு என்றும் நிலைக்கும் எங்கள் ஊரிது,
வையை வளம் தரும் பாண்டிப் புவியிது,
பல்கலை வளர்த்த எங்கள் மதுராபதி இது......

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

சங்க காலம் முதலாகச்
     சான்றாய் விளங்கும் மாமதுரை !
சங்க காலம் அடியொற்றித்
     தமிழை வளர்க்கும் தனிமதுரை !
எங்கும் சதுரம் சதுரம்போல்
     ஏற்ற வீதி எழில்மதுரை !
எங்கும் சாதி மதமின்றி
     இணைந்து வாழும் ஊர்மதுரை !

ஓங்கி உயர்ந்த கோயில்கள்
     உவக்கப் பெற்ற உயர்மதுரை !
தூங்கா நகரம் எனும்பெயரால்
     துலக்கும் பேரூர் தொல்மதுரை !
பாங்கார் பண்பைப் பரப்புவதில்
     பாரே போற்றும் பதிமதுரை !
தாங்கித் தமிழை வளர்த்ததிலே
     தன்னேர் இல்லாத் தகுமதுரை !

பிட்டுக் காக மண்சுமந்த
     பெருமை பேசும் பெயர்மதுரை !
சிட்டு ஆண்டாள் திருமாலின்
     சீரார் சிறப்பால் திகழ்மதுரை !
வெட்டப் பட்ட கோவலனால்
     வீழ்பாண் டியன்தன் கதைமதுரை !
மட்டில் கற்புக் கண்ணகியால்
     மாய்ந்தே தீய்ந்த மண்மதுரை !

அன்றும் இன்றும் புகழ்பெற்ற
     அரிய நகரம் நம்மதுரை !
இன்றும் என்றும் ஏற்றமுடன்
     இலங்கும் நகரம் நம்மதுரை !
முன்னோர் வழியே வீரத்தின்
     முதலாய் இன்றும் நம்மதுரை !
தன்னேர் இல்லாத் தமிழர்தம்
     சான்றாய்த் திகழும் நம்மதுரை !

- 'படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி ,ஆர்க்காடு.

**

சிவன் மகிழ்வுடன் தூவினான் தேன்—
மதுராபுரியாய் பிறந்தது ஒரு ஊர் !!
மக்கள் சொற்களில் மதுரம் பொங்கும் –
மதுரையாய் வழுவியதைப் பார் !!
சந்து பொந்துகளில் சங்கத்தமிழ் கிளைகள் –
கீழே பாய்ந்து பரவியது வேர் !!
தூங்கா நகரம் – தூய்மையில் தோய்ந்த உழைப்பு –
செழிக்கச்செய்தது வைகை ஆற்று நீர் !!
மண்ணிற்கு மேலேயும் வைரங்கள் மொட்டு மொட்டாய்—
ஆம் – அந்த மல்லிகையை அணைக்க போட்டியிட்டது நார் !!
காளைகள் அடக்க காளைகள் ஆர்வம் எதற்கு ?
விடை வேண்டும் ! வெற்றிச்சாறை பருகுவது யார் ?
நகரமுண்டோ இது போல் வியந்தது இந்த பார் !!
பெருமை சொல்ல ஏது மொழியிலே சீர் ?

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி -- MD DNB PhD

**

சங்கம் வைத்துதமிழ் வளர்த்தஇடம்
....சமுதாய வாழ்வு செழித்தஇடம்
தூங்கா நகரமாய் விளங்கும்இடம்
....தமிழரின் வரலாறு நின்றஇடம்
பாண்டிய மன்னனின் தலைநகரம்
....பண்பாடு சொல்லும் பழம்பெருநகரம்
கண்ணகி கோவலன் வாழ்ந்தநகரம்
....கன்னித்தமிழோடு காலம்நின்ற நகரம்
திருவிழாக் கொண்டாடும் கோயில்மாநகர்
....தமிழ்த்திருமகன் நக்கீரர் பிறந்த ஊர்
திருமலைநாய்க்கர் மகால்உள்ள அழகுஊர்
....தமிழ்நாட்டின் ஏதேன்சுபெயர் பெற்ற ஊர்
மதுரையின் உதிரமாகவைகை நதிஓடும்
....மதுரைக்காஞ்சி அதன்பெருமை பாடும்
மதுரை என்றால்பொருள் இனிமை
....மதுரைமண் பேசும் அதன்தொன்மை

- கவிஞர் நா. நடராஜ், கோயமுத்தூர்

**

மெகஸ்தனிஸ் போற்றிய 'கிழக்கு ஏதென்ஸ்' நகரம்-
மோகன்தாஸின் மனதை மாற்றிய 'சீவன்முத்திபுர' நகரம்-
மல்லிகை மணம் வீசும்  'மணமதுரை' நகரம்-
மீனாட்சி ஆ(ட்)சி புரியும் 'கடம்பவன' நகரம்-

கள்ளழகர் பெருமையுடைய 'விழாமலி மூதுாா்' நகரம்-
கள்ளமில்லா மக்கள்வாழும் 'துவாத சாந்தபுர' நகரம்-
சிவனுக்கே பாடம் சொன்ன 'சிவராஜதானிபுர' நகரம்-
சங்கம்வைத்து தமிழ் வளர்த்த 'மூதூா் மா நகரம்'-

சல்லிக்கட்டுக்கு புகழ்வாய்ந்த'ஓங்குசீர் மதுரை' நகரம்-
நகர கட்டமைப்பை சொல்லித்தரும் கூடல் நகரும்-
ஒன்றுக்கூடி விழாக்கள் தொடுக்கும் 'நான்மாடக்கூடல்' நகரம்-
ஒப்பற்ற வீரத்தைக் கொண்ட மருதை நகரம்-

பல பெருமைகளை தாங்கிய மதுரை  நகரம்-
பல கலைஞர்களை தந்தருளிய கன்னிபுரிச நகரம்-
அன்பை அள்ளிக் கொடுக்கும் ஆலவாய் நகரம்-
அளவில்லாத அற்புதங்கள் நிறைந்த தூங்கா நகரம்-

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

குறிப்பு 1 : மதுரைக்கு வழங்கபடும் சிறப்பு பெயர்கள் - 'கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ், 'சீவன் முத்திபுரம்', கடம்பவனம், மணமதுரை, சிவ ராஜதானிபுரம், மூதூா் மாநகரம்',விழாமலி மூதுாா்' , 'துவாத சாந்தபுரம்,ஓங்குசீர் மதுரை', கூடல், நான்மாடக்கூடல், மருதை, கன்னிபுரிசம், ஆலவாய், தூங்கா நகரம்  
குறிப்பு 2 : மெகஸ்தனிஸ் - கிரேக்க யாத்திரிகர் , மோகன்தாஸ் - கரம்சந்த் காந்தி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com