பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 51-வது தலமாக இருப்பது திருவையாறு. இத்தலத்தில் குரு தோஷம் நீக்கி அருளும் ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி சந்நிதி மிகவும் சிறப்புடன் போற்றப்படுகிறது.
கோவில் அமைப்பு
திருவையாறு கோயில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், கிழக்கில் ஏழு நிலைகளை உடைய ராஜகோபுரமும், 5 பிராகாரங்களும் உள்ள மிகப்பெரிய கோவிலாகும். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும். இறைவன் சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவி தர்மசம்வர்த்தினி, தனி கோவிலில் எழுந்தருளி இருக்கிறார்.
இறைவன் சந்நிதியின் முதல் பிராகாரத்தில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதி மிகச் சிறப்புடையது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில்.
திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறும். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இரண்டாம் பிராகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசர் மண்டபத்தில் பஞ்சபூத லிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிராகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இரு கோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயமும் அமைந்துள்ளன. இச்சுற்றின் நான்குபுறமும் கோபுரங்கள் இருக்கின்றன.
இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும்தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம். மேலும், இறைவன் கருவறையை சுற்றிவர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம். இறைவனின் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால், கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக் கூடாது என்பது இத்தலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறை.
இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிராகாரத்தின் வடபுறம் ஓலோக மாதேவீச்சுரம் என்ற கற்கோவில் உள்ளது. இது வடகைலாயம் எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் ராஜராஜ சோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிராகாரத்தின் தென்புறம் தென்கைலாயம் எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சந்நிதி முன் உள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்துக்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட மற்றும் சிற்பக் கலைச் சிறப்பு வாய்ந்தவை.

இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் என்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது. திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம். அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது. திருவாரூர் ஆலய மூலவர் வான்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறைவி தர்மசம்வர்த்தினி, காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால், அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவற்றுடனும் காணப்படுவதால், இத்தலத்தில் மகாவிஷ்ணு ஸ்வரூபத்தில் அம்பிகை தோற்றமளிக்கிறாள்.
திருப்புகழ் தலம்
இத்தலத்தில் முருகப் பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக தனுசுசுப்ரமணியர் என்ற பெயருடன் விளங்குகிறார். இவர், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர். அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு பாடல் உள்ளது. அருணகிரிநாதர், முருகப்பெருமான் சந்நிதியை வேலவன் கோட்டம் என்று தனது திருப்புகழில் குறிப்பிடுகிறார்.
*

சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும்போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் ஓலம் ஓலம் என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவர் திருவையாறு வர வழி ஏற்படுத்திக் கொடுத்ததால், இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும். திருவையாறு செல்பவர்கள் இதனையும் அனுபவியுங்கள்.
ஏழூர் விழா (சப்தஸ்தான திருவிழா)
தமிழ்நாட்டில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் திருவையாறு தலத்தில் கொண்டாடப்படும் ஏழூர் விழா என்பது மிகவும் சிறப்புடையது. திருவையாறு இறைவன் ஐயாறப்பர், நந்தியெம்பெருமானுக்கு இத்தலத்தில் திருமணம் நடத்திவைத்தார். இந்த்த் திருமணத்துக்கு திருவையாறைச் சுற்றியுள்ள 6 தலங்களின் இறைவர்கள் கலந்துகொண்டு உதவி புரிந்தனர். அதற்கு நன்றி செலுத்தும்விதமாக, திருவையாறு தலத்து இறைவனும், இறைவியும் நந்திதேவருடன் கண்ணாடி பல்லக்கில் மற்ற 6 தலத்துக்கும் (திருபழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருப்பூந்துருத்தி, திருகண்டியூர், மற்றும் திருநெய்தானம்) எழுந்தருளுவார்கள். இந்த ஏழூர் விழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மிக விமரிசையாக நடைபெறும். பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவர் திருமண விழாவும் மிக சிறப்புடன் கொண்டாடப்படும்.
சித்திரை மாதத்தில் 12 நாட்கள் பெரும் விழா நடைபெறும், இந்த விழாவின் 5-ம் நாள் நடைபெறும் விழா மிகச் சிறப்புடையதாகும். அன்று, இறைவன் ஐயாறப்பர் சைவனாகி தன்னைத்தானே பூஜை செய்துகொண்ட புராண வரலாறு நிகழ்ச்சியை ஐதீகமாக்க் கொண்டாடப்படுகிறது.
திருவையாறு இறைவன் ஐயாறப்பரை தொழுபவர்கள் பரகதி பெறுவது திண்ணம். இதை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்களது பதிகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பந்தர் தனது பதிகப் பாடலில் (1-ம் திருமறை, 130-வது பதிகம், முதல் பாடல்)
புலன் ஐந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி அறிவு அழிந்திட்டு ஐம் மேல் உந்தி
அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள் செய்வான் அமரும் கோவில்
ஐம்புலன்களும் தத்தம் பொறிகளை விட்டு வழிமாறி அறிவழிந்து, கபம் மேற்பட மனம் சுழன்று வருந்தும் இறுதிக்காலத்தில் ‘அஞ்சேல்’ என்று உரைத்து அருள் செய்பவனாகிய சிவபிரான் அமரும் கோயிலை உடையது திருவையாறு என்று பதிவு செய்கிறார்.
*
திருநாவுக்கரசர் தனது பதிகப் பாடலில் (4-ம் திருமுறை, 92-வது பதிகம், 7-வது பாடல்)
களித்துக் கலந்தது ஓர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன் நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே.
காவிரியில் நீராடித் தொழுது தம் முன் நின்ற அடியார்களை மேம்பட்ட செந்தேனைத் தெளியச் செய்து அத்தேனை அமுதோடு உண்பித்துத் தேவர்கள் சூழ்ந்து வழிபடும் பெரிய செல்வத்தை அவர்களுக்கு வழங்கி அவர்கள் முக்தி அடையச் செய்வார் ஐயாரப்பர் என்று பதிவு செய்கிறார்.
*
அப்பர் கைலாயக் காட்சி கண்ட விழா வரும் விளம்பி வருடம் ஆடி மாதம் 26-ம் நாள், ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி சனிக்கிழமை அமாவாசை தினத்தன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் அப்பருக்கு கைலாயக் காட்சி தரும் திருவிழாவை காண வாழ்வில் ஒரு முறையேனும் திருவையாறு சென்று அதைக் கண்டு வழிபடுங்கள்.
திருவையாறில் அப்பர் கைலாயக் காட்சியை தரிசிப்பவர்கள், நேரில் கைலாயம் சென்ற தரிசித்த பலனைப் பெறலாம். திருவையாறு சிவ சேவா அறக்கட்டளை என்ற அமைப்பு இந்நாளில் சிறந்த சேவை செய்து வருகிறது. அவர்களைத் தொடர்புகொண்டு மேற்கொண்டு விவரங்கள் அறியலாம்.
தொடர்புக்கு: +91-9976253220, +91-9444885679, +91-9652234563.
சுந்தரர் அருளிய பதிகம் - பாடியவர்கள் குமாரவயலூர் பாலசந்திரன், முருக சுந்தர்
நாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் குமாரவயலூர் பாலசந்திரன்
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவகுமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


