ஜெர்மனியின் கொலோன் பல்கலை.யில் தமிழ் இருக்கை: ஐரோப்பிய தமிழர்கள் வேண்டுகோள்
By -ஜேசு ஞானராஜ், ஜெர்மனி | Published On : 01st March 2021 02:57 PM | Last Updated : 01st March 2021 03:05 PM | அ+அ அ- |

ஜெர்மனியின் கொலோன் பல்கலை.யில் தமிழ் இருக்கை: ஐரோப்பிய தமிழர்கள் வேண்டுகோள்
நம் தேசப்பிதா மகாத்மா காந்தியிடம், "ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டபோது 'ஒரு நூலகம் கட்டுவேன்' என்றார். ஆனால் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் துறையில் உள்ள 40,000-க்கும் அதிகமான தமிழ் புத்தகங்கள், தங்களின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் தற்போது தத்தளித்துக்கொண்டிருக்கின்றன.
வரும் மார்ச் மாதம் இந்த தமிழ் துறையின் 'தமிழ் இருக்கை' யின் காலம் முடிவுறவுள்ள நிலையில், அடுத்த வருடம் தமிழ்த் துறையும் மூடப்படவிருக்கிறது.
ஏற்கனவே ஜெர்மனியின் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறை அஸ்தமித்துவிட்டது. அந்த அறியாமை, கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறைக்கும் வராமல் இருக்க தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 2006?ம் ஆண்டு முதல் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் தலைவராக இருக்கிற உல்ரிக்கே நிக்லாஸின் பணி காலம் அடுத்த ஆண்டு நிறைவுறுவதை ஒட்டி, நிதி நெருக்கடி காரணமாக இந்த தமிழ் துறையையும் மூட முடிவெடுத்துள்ளனர்.
1963 முதல் செயல்பட்டு வந்த இந்தியவியல் மற்றும் தமிழ்த் துறை, தற்போது கை பிடித்து நடக்க யாருமின்றி திக்குத் தெரியாமல் தவிக்கிறது. தமிழர்களாகிய நாம் அனைவரும் கை தூக்கி விடும் பட்சத்தில் இன்னும் பல சாதனைகள் ஈடேற ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை உந்து சக்தியாக விளங்கும்.
இந்த தமிழ்த் துறை இதுவரையிலும் பல சாதனைகளை செய்துள்ளது. நம் பாரம்பரிய கலைகள், விளையாட்டுகள், ஜல்லிக்கட்டு போன்ற நம் வீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் அனைத்தையும் இங்கு ஆவணப்படுத்தியுள்ளனர். தமிழின் பழமை நூலான தொல்காப்பியம், அதற்கு அடுத்தபடியான தமிழ் இலக்கிய நூலான யாப்பருங்கலக் காரிகை, அதையடுத்து சங்கம் மருவிய காலங்களில் வெளியான நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், என பலவற்றை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கு புதுச்சேரியில் கோடை கால வகுப்புகள், கள ஆய்வுகள் என தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தமிழ்த் துறை மூடப்படும் பட்சத்தில் இவைகளின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறி தான்!
2006ம் வருடம் முதல் இன்று வரை 8 பேர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருக்கின்றனர். அது போல 250 மாணவர்கள் தமிழ் பயின்றிருக்கின்றனர். இப்படி, தமிழ் பால் வெளிநாட்டவர் கொண்ட அன்புக்கு மூடுவிழா என்று வரும் போது உள்ளம் பதறுகிறது.
பிராங்க்பர்ட் தமிழ் சங்க செயலாளர் திரு. ஸ்ரீதர் சண்முகம் நம்மிடம் பேசும் போது " கொலோன் பல்கலைக்கழகத்திடமும், ஜெர்மனியின் கொலோன் மாநில அரசிடமும் ஏற்கனவே ஜெர்மனியில் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழ் துறையை தொடர்ந்து நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அது போல, தமிழக அரசிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படும் பட்சத்தில் தமிழ் இருக்கையை கொலோன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நீட்டிக்கச் செய்ய முடியும்" என்றார்.
மேலும் அவர் கூறும் போது "இப்போதைய நிலவரப்படி, 1,37,500 யூரோ (ஏறத்தாழ ஒண்ணேகால் கோடி ரூபாய்) மூலம் அடுத்த வருடம் (மார்ச் 2022) வரை கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நீட்டிக்க முடியும். நமக்கு கிடைக்கும் ஒரு வருட கால இடைவெளியில் தமிழக அரசிடமும் இந்திய அரசாங்கத்திடமும் மீண்டும் இந்த பிரச்னையைக் கொண்டுச் சென்று நிரந்தரமாக தமிழ் இருக்கையை செயல்படுத்த வைக்க முடியும்" என்றார்.
இதற்காக, ஐரோப்பாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து "ஐரோப்பிய தமிழர்கள்" என்ற கூட்டமைப்பை உருவாக்கி, கூட்டு நிதி (crowd funding) மூலம் நன்கொடை திரட்ட முடிவுசெய்துள்ளனர். நன்கொடை வழங்க விரும்புவோர் கீழ் கண்ட லிங்கை 'க்ளிக்' செய்யவும்.
https://www.betterplace.org/en/projects/90770-save-cologne-tamil-studies
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி'யின் பெருமையை ஐரோப்பியர்கள் தொடர்ந்து படிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகளிலும் தமிழின் வாசத்தை நுகர வைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய தமிழர்களின் அவா.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...