அணிகளின் பலம், பலவீனம் என்ன?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிப்ரவரி 19-ல் தொடங்கி பிப்ரவரி 28 வரை தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகள் தவிர மற்ற எல்லா அணிகளும் தலா 2 ஆட்டங்கள் விளையாடியுள்ளன. இந்நிலையில், அந்த அணிகளின் பலம்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிப்ரவரி 19-ல் தொடங்கி பிப்ரவரி 28 வரை தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகள் தவிர மற்ற எல்லா அணிகளும் தலா 2 ஆட்டங்கள் விளையாடியுள்ளன.
இந்நிலையில், அந்த அணிகளின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது பற்றிய ஓர் அலசல்:.
ஆஸ்திரேலியா: இந்தப் போட்டிக்கு முன்னர் தொடர்ந்து 3 கோப்பைகளைக் கைப்பற்றியிருந்தாலும், இந்த முறையும் ஆஸ்திரேலியாதான் கோப்பையை வெல்லும் என கூற முடியாத நிலை இருந்தது.
ஆனால், மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதோ என்னும் அளவுக்கு ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்பார்த்ததுபோலவே ஷேன் வாட்சன் (62, 79) சிறப்பாக விளையாடுவதும், மிட்செல் ஜான்சன் (4-19, 4-33), ஷான் டெய்ட், பிரெட் லீ ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசுவதும் அணியின் பலம். பாண்டிங் பிரகாசிக்காதது, ஜிம்பாப்வேயை வென்றாலும் தொடக்கத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்டது ஆகியவை அணியின் பலவீனங்கள்.
இந்தியா: உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் களம் இறங்கியுள்ளது இந்தியா.
வங்கதேசம், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் அபாரமாக விளையாடினர்.
சேவாக் 175 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும், சச்சின் 120 ரன்களும் எடுத்துள்ளனர். பேட்டிங் இந்திய அணியின் பலமாக இருந்தபோதும், இங்கிலாந்துக்கு எதிராக 33 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது. இதை சரிசெய்வது முக்கியமானது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. நெஹ்ரா காயமடைந்து உள்ளதும், ஜாகீர் கான் போன்றவர்கள் கூட இங்கிலாந்துக்கு எதிராக தொடக்கத்தில் சிறப்பாகப் பந்துவீசாததும் பலவீனங்கள்.
தென் ஆப்பிரிக்கா: இதுவரை கோப்பையை வென்றதில்லை என்றாலும் வலுவான அணி. தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் ஏ.பி.டிவில்லியர்ஸ் (107 நாட் அவுட்), புதுமுக சுழற் பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் (4-41), ஸ்டெயின் (3-24) ஆகியோர் கவனத்தை ஈர்த்தனர்.
டிவில்லியர்ஸ், காலிஸ் தவிர மற்றவர்கள் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவர் என்று உறுதி சொல்ல முடியாததே பலவீனம்.
பாகிஸ்தான்: இந்த உலகக் கோப்பை போட்டியின் ஆச்சரியம் என்றால் அது பாகிஸ்தான்தான். பலவீனமாக அணியாக இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தான், தனது முதலிரண்டு ஆட்டங்களில் கென்யா, இலங்கை அணிகளை வென்று அசத்தியுள்ளது.
அப்ரிதி (5-16, 4-34) அபாரமாகப் பந்துவீசி அசத்தி வருகிறார். மிடில் ஆர்டரில் மிஸ்பா உல் ஹக் (83, 65), யூனிஸ் கான் (72, 50), கம்ரான் அக்மல் (55, 39), உமர் அக்மல் (71) ஆகியோர் கைகொடுத்து வருகின்றனர். நல்ல தொடக்க ஆட்டக்காரர்கள் இல்லாததும், படு மோசமான பீல்டிங்கும்தான் இந்த அணிக்கு வில்லன்கள்.
இங்கிலாந்து: ஸ்டிராஸ் (88, 158), பெல் (69), காலிங்வுட், பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மேன்கள் அணியின் பலமாகத் திகழ்கின்றனர். பந்துவீச்சு இந்த அணியின் மிகப் பெரிய பலவீனமாக உள்ளது. நெதர்லாந்து கூட இந்த அணிக்கு எதிராக 292 ரன்கள் விளாசிவிட்டது.
இலங்கை: பேட்டிங்கில் சங்ககராவையும், மஹேல ஜெயவர்த்தனேவையும், பந்துவீச்சில் முரளீதரனையும், லசித் மலிங்காவையுமே நம்பியுள்ளது. தில்ஷான், சமரசில்வா, சமரவீரா, குலசேகரா, மென்டிஸ் போன்றவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடினால் மட்டுமே எதிரணிகளுக்கு ஆச்சரியம் அளிக்க முடியும்.
நியூசிலாந்து: இந்த அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டுமே பலவீனமாக உள்ளது. இந்த அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்றால் அது மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியாக அமையும்.
மேற்கிந்தியத் தீவுகள்: கிறிஸ் கெயில், பொல்லார்டு, கெமர் ரோச் போன்றவர்களைத் தவிர மற்றவர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவார்கள் என கணிக்க முடியாததே அணியின் பலவீனம்.
கென்யா, ஜிம்பாப்வே, கனடா, வங்கதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளில் ஓரிருவர் சிறப்பாக விளையாடினாலும், ஒட்டுமொத்தமாக இந்த அணிகள் இதுவரை மிகச் சாதாரண ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக நெதர்லாந்து விளையாடிய ஆட்டம் விதிவிலக்காக அமைந்தது.
இதன் பின்னர், நடைபெறும் ஆட்டங்களில் இந்த அணிகள் எப்படி விளையாடுகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் ஓரளவு சமபலத்துடன் உள்ளதால் அடுத்து வரும் ஆட்டங்கள் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...