தலைநகரில் தெற்காசிய கராத்தே போட்டி
புது தில்லி, நவ.19: கைகளால் தாக்கி எதிரியை நிலைகுலையச் செய்யும் தற்காப்புக் கலைக்குப் பெயர் கராத்தே. குத்துதல், உதைத்தல், முழங்கால், முழங்கையால் தாக்குதல் என முற்றிலும் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி ச


புது தில்லி, நவ.19: கைகளால் தாக்கி எதிரியை நிலைகுலையச் செய்யும் தற்காப்புக் கலைக்குப் பெயர் கராத்தே. குத்துதல், உதைத்தல், முழங்கால், முழங்கையால் தாக்குதல் என முற்றிலும் உடல் உறுப்புகளைப் பயன்படுத்தி சண்டையிடும் ஓர் தற்காப்புக் கலை.
உலகம் முழுதும் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பிப் பயிலப்படும் ஒரு கலையாக வளர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் தேசிய அளவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியாகவும் கராத்தே புகழ்பெற்றுத் திகழ்கிறது. இது சண்டைக் கலையாக மட்டுமின்றி மனத்தை வளப்படுத்தி, உடலை கட்டுக்குள் வைக்கும் பயிற்சி முறையாகவும் இருந்து வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தெற்கு ஆசிய கராத்தே போட்டி, தில்லி தால்கோட்ரா உள் விளையாட்டரங்கில் வரும் 22, 23-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தெற்கு ஆசிய கராத்தே சம்மேளனம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. முதுநிலை வீரர், வீரர்களுக்கான போட்டிகளில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இந்தியா, நேபாளம் ஆகிய 6 நாடுகளில் இருந்து சுமார் 120 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாக அகில இந்திய கராத்தே சம்மேளனம், தெற்கு ஆசிய கராத்தே சம்மேளனம் ஆகியவற்றின் தலைவராக இருந்துவரும் கராத்தே ஆர். தியாகராஜன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:அரசின் முறையான அனுமதியுடன் முதல் முறையாக தெற்கு ஆசிய கராத்தே போட்டி தில்லியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட், ஹாக்கி வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்வது போன்று பாகிஸ்தானிய கராத்தே வீரர்களும் இங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து போட்டி நடுவர்கள், நிர்வாகிகள், கராத்தே வீரர்கள் உள்பட 21 பேர் இந்தியா வருகின்றனர். போட்டிகள் ஆடவர், மகளிர் என 15 பிரிவுகளில் நடைபெற உள்ளன. குமித்தி, கட்டா (செய்முறை) ஆகிய முறைகளில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன.
அந்தந்த நாடுகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற தேசிய கராத்தே குழு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய அணியில் இருந்து 20 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமித்ரா, சபரி கார்த்திக், அஜய் கேசன் ஆகியோரும் உள்ளனர்.
இப் போட்டிகளை இந்திய ஒலிம்பிக் சங்க (பொறுப்பு) தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா தொடங்கி வைக்க உள்ளார். ஆசிய கராத்தே சங்கத் தலைவர் சாங் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகளுக்குப் பிறகு அடுத்த மாதம் தில்லியில் தேசிய கராத்தே போட்டிகளும் நடைபெற உள்ளன என்றார் தியாகராஜன்.
அகில இந்திய கராத்தே சங்கத்தின் தலைமைப் புரவலர் கார்த்தி சிதம்பரம் கூறியது:பாகிஸ்தான் - இந்தியா இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும், மக்களை பரஸ்பரமாக ஒன்றிணைக்கும் விஷயமாக கராத்தே போட்டிகள் உதவிடும் என்று நம்புகிறேன் என்றார். பேட்டியின் போது அகில இந்திய கராத்தே சங்கப் பொதுச் செயலர் பரத் சர்மா உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...