நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெருக்கடியில் பாண்டிங்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து ஆஸ்திரேலியர்களிடையே வலுக்கத் தொடங்கியுள்ளது. "ஆஸ்திரேலியாவில்டிசம்பரில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரா

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:32 pm

ஏ.வி. பெருமாள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து ஆஸ்திரேலியர்களிடையே வலுக்கத் தொடங்கியுள்ளது. "ஆஸ்திரேலியாவில்டிசம்பரில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு அவர் ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும். அதுதான் சரியான தருணம்' என்று முன்னாள் வீரர்கள் டக் வால்டர்ஸ், இயான் ஹீலி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

"பாண்டிங் அடுத்த மாதம் 37 வயதை எட்டுகிறார். எனவே அவர் ஓய்வுபெறுவதன் மூலம் தன்னுடய கெüரவத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும்' என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் சாடியுள்ளன.

பாண்டிங்கின் மிகத் தீவிர ரசிகரான டக் வால்டர்ஸ் "தி டெய்லி கிராப்' பத்திரிகையில் கூறியிருப்பது: "பாண்டிங்கின் மிகத்தீவிர ரசிகன் நான். இப்போது அவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அவர் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் அவரிடம் நாம் எதையும் எதிர்பார்க்க முடியாது' என்று கூறியுள்ளார்.

இயான் ஹீலி கூறுகையில், "இதற்கு முன் பாண்டிங் இவ்வளவு மோசமாக விளையாடி பார்த்ததில்லை. கடந்த 12 மாதங்களில் அவர் மிக மோசமாக விளையாடியிருக்கிறார். வேறு யாரும் இவ்வளவு மோசமான சராசரியோடு நீண்ட காலம் விளையாடியதில்லை. அவர் ஓய்வுபெறுவதே சரியானது என நினைக்கிறேன். அவர் இப்போது சிறப்பாக விளையாடாமல் குறையுடைய வீரராகவே உள்ளார். எனவே அவர் ஓய்வை அறிவித்துவிடலாம்' என்றார்.

அதேநேரத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர், இங்கிலாந்தின் முன்னாள் டோனி கிரேக் ஆகியோர் பாண்டிங்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்க-ஆஸ்திரேலியத் தொடரில் வர்ணனையாளராக உள்ள பார்டர், பாண்டிங்கின் ஓய்வு குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அதேசமயம் பாண்டிங்கின் இடத்தை நிரப்பக்கூடிய தகுதியான வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் பார்டர்.

ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவின் புதிய தலைவர் ஜான், "பாண்டிங்கின் காலம் முடிந்துவிடவில்லை என்று கூறினாலும், அணிக்கு இளம் ரத்தத்தை பாய்ச்சவே தேர்வுக்குழுவினர் விரும்புவதாக' தெரிவித்துள்ளார்.

2002-ல் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் ஆஸ்திரேலியா படுதோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து அப்போதைய கேப்டன் ஸ்டீவ் வாஹிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனானார் பாண்டிங். அதைத் தொடர்ந்து 2003, 2007-ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றதோடு, டெஸ்ட், ஒருநாள் என அனைத்துப் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்தது ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.

இவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 48-ல் வெற்றி கண்டது. இதேபோல் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 164-ல் வெற்றி கண்டுள்ளது. இதுவரை சர்வதேச அளவில் எந்த அணியின் கேப்டனும் இத்தகைய சாதனையை நிகழ்த்தியதில்லை.

சற்றேறக்குறைய 9 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய ரிக்கி பாண்டிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை 2010-ம் ஆண்டின் பிற்பாதியிலேயே இறக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அந்த அணி காலிறுதியோடு வெளியேறியது. இதையடுத்து ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார் பாண்டிங்.

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருந்தாலும், கடந்த ஓர் ஆண்டு கால அவரது சராசரியை பார்த்தால் அது மிகவும் மோசமாகவே உள்ளது.

டெஸ்ட் போட்டியில் கடைசியாக 2010 ஜனவரி 14-ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்தார். அதன்பிறகு இதுவரை ஒரு சதம்கூட அடிக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டாக ஓர் அரைசதம்கூட அடிக்கவில்லை. கடைசி 14 இன்னிங்ஸ்களில் அவரின் சராசரி 25. கடைசி 13 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்க ரன்களிலேயே வெளியேறியுள்ளார்.

இப்போது நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்கத் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் எடுத்த மொத்த ரன்கள் 8 (8,0). 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மீண்டும் டக் அவுட் ஆகியுள்ளார்.

இப்போது அவர் ஓய்வுபெற வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலுத்துள்ள கருத்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய சூழலை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் இப்போது சந்தித்து இருக்கும் நெருக்கடியான சூழல் என்பது அவருக்கு மட்டுமல்ல, அந்த அணியின் முன்னாள் கேப்டன்கள் அனைவருக்கும் ஏற்பட்டதே.

பாண்டிங்கின் சமீபத்திய புள்ளிவிவரங்களை பார்க்கும்போது அவர் அணிக்கு தேவையில்லை என்றுதான் தோன்றும். ஆனாலும் அவரை இவ்வளவு நாள் காப்பாற்றியது அவருடைய பழைய சாதனைகள்தான். இப்படி பழைய சாதனைகளால் தப்பித்தவர் ஆஸ்திரேலிய அணியில் வேறு யாரும் இருக்க முடியாது. ஏன் ரிக்கி பாண்டிங்குக்கு முந்தைய கேப்டனான ஸ்டீவ் வாஹிற்கு இவரைவிட மிக மோசமான நிலை ஏற்பட்டது. முத்தரப்புத் தொடரை இழந்தபோது ஸ்டீவ் வாஹ் இழந்தது கேப்டன் பதவியை மட்டுமல்ல. மாறாக ஒருநாள் போட்டி அணியில் இருந்தே தூக்கிவீசப்பட்டார். அந்த நிலை பாண்டிங்குக்கு ஏற்படவில்லை. அதனால் அவர் கெüரவத்தோடு ஓய்வுபெற இது சரியானத் தருணமாகத்தான் இருக்கும் என்றாலும், அது பாண்டிங்கின் கையில்தான் உள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.