புதுப்பிக்கப்படாத விளையாட்டு ஆணைய இணையதளம்
சென்னை, ஜூன் 21: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) இணையதளம் புதுப்பிக்கப்படாமலேயே உள்ளது. இதனால் அரசின் புதிய தகவல்கள் ஏதும் இடம்பெறவில்லை. தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளை ம


சென்னை, ஜூன் 21: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) இணையதளம் புதுப்பிக்கப்படாமலேயே உள்ளது. இதனால் அரசின் புதிய தகவல்கள் ஏதும் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இத்திட்டங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுத்தி வருகிறது. இதற்கென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பிரத்யேகமான இணையதளமும் உள்ளது.
இந்த இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள விளையாட்டுகள், விளையாட்டு சங்கங்கள், மைதானங்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றால் அதற்கான பரிசுத்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காணப்படுகின்றன.
ஆனால் இந்த இணையதளம் புதுப்பிக்கப்படாததால் பழைய தகவல்களே காணப்படுகின்றன. தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட விளையாட்டு தொடர்பான அறிவிப்புகள், புதிய தகவல்கள் ஏதும் இடம்பெறவில்லை. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ. 2 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.1 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ. 50 லட்சமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதேபோல் காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வோருக்கான பரிசுத்தொகையையும் உயர்த்தி கடந்த ஜனவரியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த பரிசுத்தொகை உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி 6 மாத காலம் ஆனபோதிலும், இதுவரை இணையதளத்தில் அது இடம்பெறவில்லை.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால் ரூ. 1 கோடி, வெள்ளி வென்றால் ரூ. 50 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ.25 லட்சம் என்ற பழைய அறிவிப்புகளே காணப்படுகின்றன. அது மட்டுமின்றி விளையாட்டு வீரர்களைப் (ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்) பற்றிய பகுதியில் அவர்கள் குறித்த தகவல் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு புதுப்பிக்கப்படவில்லை.
"இணையதளம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதால் புதிய தகவல்களை உடனடியாகப் பெறமுடியவில்லை. பழைய தகவல்களே இடம்பெற்றிருப்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. அரசின் புதிய திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் இணையதளத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இணையதளத்திற்கு சென்று பார்த்தால் அங்கு அதுதொடர்பான அறிவிப்புகள் காணப்படுவதில்லை. புதிய திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது அதை எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட வேண்டும்' என்று விளையாட்டு வீரர்களும், விளையாட்டு சங்க நிர்வாகிகளும் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் விஜயகுமாரிடம் கேட்டபோது, "புதிய தகவல்களை இணையதளத்தில் இடம்பெறச் செய்வதற்காக ஒருவரை நியமித்திருக்கிறோம். அனைத்து தகவல்களையும் அவ்வப்போது இடம்பெறச் செய்யுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும். மேலும் அனைத்து தகவல்களும் இணையதளத்தில் இடம்பெறும் வகையில் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்' என்றார்.
விளையாட்டுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த இணையதளம், அவ்வப்போது புதுப்பிக்கப்படாத பட்சத்தில் மின்னணுமயமாக்கலால் எவ்வித பயனுமில்லை என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...