சேவாக்கின் நீக்கமும்...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் வீரேந்திர சேவாக் நீக்கப்பட்டதும், விராட் கோலிக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சேவாக் விவகாரத்த


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணியில் வீரேந்திர சேவாக் நீக்கப்பட்டதும், விராட் கோலிக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சேவாக் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அவர் நீக்கப்படவில்லை, அவருக்கு ஓய்வுதான் அளிக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டாலும், தோனியுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாகவும், விராட் கோலியை துணை கேப்டனாக்கும் நோக்கத்தோடுமே சேவாக் நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மும்பையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்துக்குப் பிறகு பேசிய தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், "காயம் காரணமாக சேவாக்குக்கு ஓய்வுதான் அளிக்கப்பட்டுள்ளது, நீக்கப்படவில்லை' என்று தயக்கத்துடனே கூறினார்.
இதனிடையே தங்களுக்குள் மோதல் இல்லை என்று தோனியுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளிக்க மறுத்ததாலேயே சேவாக் நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
சேவாக்குக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு ஓய்வளிக்குமாறு மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் அணியின் பிசியோதெரபிஸ்ட் கூறியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார் ஸ்ரீகாந்த்.
அணி நிர்வாகமோ சேவாக்குக்கு தோள்பட்டையில் காயம் என்று கூறியது. ஆனால் சேவாக்கோ பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் முதுகு வலி காரணமாகவே ஓய்வு கேட்டதாகக் கூறியுள்ளார்.
சேவாக்குக்கு உண்மையிலேயே காயம் என்றால், சேவாக்கும், அணி நிர்வாகமும் ஏன் மாறுபட்ட காரணங்களைத் தெரிவிக்க வேண்டும். ஒருவேளை எனக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நான்தான் ஓய்வு கேட்டேன் என்று கூறுமாறு சேவாக் நிர்பந்திக்கப்பட்டாரா?
காயம் காரணமாகவே சேவாக் நீக்கப்பட்டார் என்றால் அதைத் தெரிவிப்பதில் தேர்வுக்குழு தலைவர் என்ற பொறுப்பான பதவியில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஏன் அவ்வளவு தயக்கம் காட்டினார்.
அனைவருக்கும் சந்தேகம் ஏற்படும் வகையில், "சேவாக் நீக்கப்படவில்லை, ஓய்வுதான் அளிக்கப்பட்டுள்ளது' என்று ஸ்ரீகாந்த், மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? சேவாக்கின் நீக்கம் குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்களிடம் ஏன் கடுகடுப்பைக் காட்ட வேண்டும்.
ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த மாபெரும் கேப்டனான ரிக்கி பாண்டிங், முத்தரப்புத் தொடரில் சரியாக விளையாடாததால் அவரை பாதியிலே கழற்றிவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு இருக்கும் துணிச்சல், நம்முடைய தேர்வுக்குழு தலைவருக்கும், கிரிக்கெட் வாரியத்துக்கும் இல்லாமல் போனது ஏன்?
ஆஸ்திரேலியத் தொடரில் சேவாக் சரியாக விளையாடவில்லை என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் அதைக் காரணம் காட்டி சேவாக்கை நீக்கிவிட முடியாது. ஏனென்றால் ஆஸ்திரேலியத் தொடரில் ஒட்டுமொத்த அணியுமே சரியாக விளையாடவில்லை. அந்தத் தொடரில் சரியாக விளையாடாத சச்சின், ரெய்னா, ஜடேஜா என எல்லா வீரர்களுமே ஆசிய கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.
அப்படியிருக்கையில் சேவாக்கை மட்டும் சரியாக விளையாடாததால் நீக்கினோம் என்று கூறி பிசிசிஐ தப்பித்துக்கொள்ள முடியாது. இதனாலேயே காயம் என்ற புதிய காரணத்தை பிசிசிஐ கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தோனியுடனான மோதல், விராட் கோலியை துணை கேப்டனாக்குவது, தோனிக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள கம்பீர் போன்ற வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலேயே சேவாக் நீக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியத் தொடரின்போது சேவாக்கை கேப்டனாக்குவதற்கு சில வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த புதிய உத்தியைக் கையாண்டுள்ளது பிசிசிஐ.
ஆசிய கோப்பை போட்டியில் சேவாக் விளையாடும்பட்சத்தில் அவரை துணை கேப்டனாக நியமித்தால் மீண்டும் தோனி-சேவாக் இடையே மோதல் வரலாம் என்ற அச்சமும் பிசிசிஐக்கு ஏற்பட்டிருக்கலாம். சமீப காலமாக அணியில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில்கூட பிசிசிஐ இப்படி செயல்பட்டிருக்கலாம்.
ஆனாலும் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்துள்ள சேவாக்கை நீக்கியிருப்பது என்பது சரியான முடிவாக இருக்க முடியாது. ஆசிய கோப்பை போட்டியில் சச்சின்-கம்பீர் சிறப்பான தொடக்கத்தை அளிக்கும் பட்சத்தில், அடுத்து வரக்கூடிய ஒருநாள் போட்டிகளில் கோலிக்கு அடுத்தபடியாக சேவாக்கை 4-வது வீரராக களமிறக்கும் திட்டத்தையும் தேர்வுக்குழு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சேவாக்கின் நீக்கம் ஒருபுறம் இருந்தாலும், ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சென்னையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த மனோஜ் திவாரிக்கு ஆஸ்திரேலியத் தொடரில் ஓர் ஆட்டத்தில்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.
முன்னணி கிரிக்கெட் அணிகள் எல்லாமே 2015 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அணியை பலப்படுத்தி வருகின்றன. இனியாவது இந்திய அணி சர்ச்சைகளில் இருந்து விடுபட்டு முன்னேற்றத்தில் கவனம் செலுத்தவேண்டும். இல்லாத பட்சத்தில் கிரிக்கெட்டில் கடுமையான சரிவைச் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்படும். மொத்தத்தில் தவறுகளை சரிசெய்து சரியான தடத்தில் பயணிக்க வேண்டிய நேரமிது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...