நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை, மே 25: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்துள்ளது. 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சூப்பர் கிங்ஸ், டெல்லி அணியை 86 ரன்கள் வித்தியாச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:28 am

ஏ.வி. பெருமாள்

சென்னை, மே 25: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றுக்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் நுழைந்துள்ளது.

2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய சூப்பர் கிங்ஸ், டெல்லி அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 16.5 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், 58 பந்துகளில் 4 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்தார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் சேவாக், சென்னையை பேட் செய்ய அழைத்தார்.

தொடக்கம் முதலே அதிரடி: சன்னி குப்தா வீசிய முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரியை அடித்தார் விஜய். இதனால் முதல் ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன. மைக் ஹசி நிதானமாக ஆடியபோதும் விஜய் வேகமாக விளையாடியதால் 6 ஓவர்களில் 52 ரன்களை எட்டியது சென்னை. சூப்பர் கிங்ஸ் 68 ரன்களை எட்டியபோது மைக் ஹசி வெளியேறினார்.

22 பந்துகளைச் சந்தித்த அவர் 20 ரன்களே எடுத்தார். இதையடுத்து விஜயுடன் இணைந்தார் ரெய்னா. விக்கெட் விழாததால் 11-வது ஓவரை வீச வந்தார் கேப்டன் சேவாக். ஆனால் அந்த ஓவரை பதம்பார்த்த விஜய், 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தார்.

நெகி வீசிய 14-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்ஸர் அடித்த ரெய்னா, அடுத்த பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து தோனி களம் புகுந்தார். சன்னி குப்தா வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் சிக்ஸர் அடிக்க, 3 மற்றும் 4-வது பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் தோனி.

சென்னை 173 ரன்களை எட்டியபோது தோனியின் விக்கெட்டை இழந்தது. 10 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அல்பி மோர்கல் களம்கண்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விஜய், 51 பந்துகளில் சதமடித்தார். அல்பி மோர்கல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, பிராவோ களமிறங்கினார்.

வருண் ஆரோன் வீசிய 19-வது ஓவரை எதிர்கொண்ட பிராவோ இரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாச அந்த ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டன. ஆட்டத்தின் கடைசிப் பந்தில் முரளி விஜய் ரன் அவுட்டாக 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது சூப்பர் கிங்ஸ். பிராவோ 12 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.

சுருண்டது டெல்லி: பின்னர் பேட் செய்த டெல்லி அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிர் வார்னர் 3 ரன்களில் வெளியேறினார். மூன்றாவது வீரராக களம் கண்ட சேவாக் 1 ரன் மட்டுமே எடுத்தார். அவர் அடித்த பந்தை பாய்ந்து சென்று அற்புதமாக கேட்ச் செய்தார் மைக் ஹசி.

இதையடுத்து ஜெயவர்த்தனாவுடன் இணைந்தார் ராஸ் டெய்லர். இருவரும் அதிரடியாக விளையாட டெல்லியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஆனால் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 14 பந்துகளைச் சந்தித்த டெய்லர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜெயவர்த்தனா அஸ்வின் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அரைசதம் கண்டார்.

ரஸ்ஸல் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார்.

ஜகாதி வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த நமன் ஓஜா, அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு தூக்க அது எல்லையில் நின்ற விஜயிடம் தஞ்சம் புகுந்தது. ஓஜா 7 ரன்கள் எடுத்தார்.அஸ்வின் பந்துவீச்சில் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷார்ட் அடித்து ஸ்டெம்பை பறிகொடுத்தார் ஜெயவர்த்தனா. 38 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார். பின்வரிசை வீரர்கள் விரைவாக வெளியேற 16.5 ஓவர்களில் 136 ரன்களில் சுருண்டது டெல்லி. சென்னை தரப்பில் அஸ்வின் 3.5 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

பந்தை கொடுங்க பாஸ்!

ஜகாதி வீசிய 16-வது ஓவரின் 2-வது பந்தில் ஆஃப் ஸ்ட்ரெய்ட் திசையில் சிக்ஸர் அடித்தார் டெல்லி வீரர் நெகி. அந்த பந்து ரசிகர்கள் கூட்டத்தில் சென்று விழுந்தது. அந்த பந்தை எடுத்த ரசிகர்கள், மைதானத்திற்குள் பந்தை மீண்டும் வீசாமல் பத்திரமாக வைத்துக் கொண்டனர். பந்தை வீசுவார்கள் என்று பொறுத்திருந்து பார்த்த ரெய்னா, பந்து வராததால் ரசிகர்கள் பகுதிக்கு சென்று பந்தை கொடுங்க என்று கேட்டார். அப்போதும் ரசிகர் கொடுக்க தயங்கினர். அதற்குள் மைதான ஊழியர்கள் வந்து பந்தை வாங்கிக் கொடுத்தனர்.



அதிகபட்ச ஸ்கோர்

சென்னை அணி எடுத்த 222 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் எடுத்த 215 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.



அதிவேக சதம்

இந்த ஐபிஎல் போட்டியில் விஜய் அடித்த சதமே அதிகவேக சதமாகும். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் சதம் கண்டார். முன்னதாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (52 பந்துகளில்) அடித்த சதங்களே அதிவேக சதமாக இருந்தது.

இந்த ஐபிஎல் போட்டியில் இதற்கு முன் 12 ஆட்டங்களில் விளையாடிய விஜய், அரைசதம்கூட அடிக்கவில்லை. ஆனால் தனது 13-வது ஆட்டத்தில் சதமடித்து சென்னைக்கு அபார வெற்றியைப் பெற்றுதந்துள்ளார். இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இது. இந்த ஐபிஎல் போட்டியில் தனி ஒரு வீரர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் விஜய் அடித்த 2-வது சதம் இது. இரு சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் அவர்தான்.



இறுதி ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்ற சூப்பர் கிங்ஸýம், முதல்முறையாக பட்டத்தைக் கைப்பற்ற நைட் ரைடர்ஸýம் காத்திருக்கின்றன. ஐபிஎல் வரலாற்றில் 4-வது முறையாக இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ள நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2009-ல் மட்டுமே பிளே ஆஃப் சுற்றில் வெளியேறியது.

இன்றும் டிக்கெட் விற்பனை

13,100 இருக்கைகளுக்கு நீதிமன்ற அனுமதியின்பேரில் வெள்ளிக்கிழமை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டபோதிலும், சென்னை-டெல்லி ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்பனையாகவில்லை.

அதனால் அந்த கேலரிகளில் பாதி இருக்கைகள் காலியாகவே இருந்தன. அதேநேரத்தில் இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட்டுகளில் புதிய கேலரிகளின் மேல்பகுதி டிக்கெட் தவிர அனைத்தும் விற்றுத்தீர்ந்துவிட்டன. மீதமுள்ள டிக்கெட்டுகள் சனிக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் விற்பனைக்கு வருகிறது.

சுருக்கமான ஸ்கோர்

சென்னை 222/5 (20 ஓவர்களில்)

(முரளி விஜய் 113, பிராவோ 33*,

வருண் ஆரோன் 2வி/63)

டெல்லி 136 ஆல் அவுட் (16.5 ஓவர்களில்)

(ஜெயவர்த்தனா 55, டெய்லர் 24,

அஸ்வின் 3வி/23)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.