

சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் கலந்துகொள்ளும் முத்தரப்பு ஒருநாள் போட்டியின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள வணிக வளாகம் ஒன்றிற்கு சென்று உணவு அருந்தினர். அந்த உணவு அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெற்ற போதே குவின்டன் டி காக், தோகோசிசி ஷேசி ஆகியோர் பாதியில் விலகினர். மாலையில், வேன் பர்னல், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், கோடி செட்டி, கேமரான் டெல்போர்ட், பயிற்சியாளர் வின்சென்ட் பர்னெஸ், செய்தித் தொடர்பாளர் வால்வோ ஆகியோருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் நிலவும் வெப்பநிலையும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு களைப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் போட்டி அட்டவணையில் மாற்றம் ஏற்பட்டது. போட்டி அட்டவணைப்படி திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணியின் 10 வீரர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்த போட்டியில் இந்திய அணியை விளையாடுமாறு தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம், இந்திய ஏ அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட்டிடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு திராவிட்டும் ஒப்புக் கொண்டார். இதனால் திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய ஏ அணிகள் மோதின.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர்கள் பிறகு டிஸ்சார்ஜ் ஆகி நலம் பெற்றுவிட்டாலும் வீரர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு அட்டவணையில் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஆகஸ்ட் 12-ம் தேதி ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 13-ம் தேதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஏ அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 14 அன்று இறுதிப் போட்டி நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.