நாட்டிலேயே ஒரே இடத்தில் மட்டும் தயாரிக்கப்படும் தேர்தல் மை விரைவில் அழிவதில்லை.
நாம் தேர்தலில் வாக்களிக்க செல்வதற்கு முன் தகவல்கள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு, இடது கையின் ஆள்காட்டி விரலின் மேற்பரப்பில் விரல் நகமும், தோலும் இணையும் இடத்தில் ஒரு கோடு போன்று இந்த மை தீட்டப்படுகிறது.
முதன்முதலில் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்த மை பயன்படுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் அப்போதைய சூழலில் வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் நடைமுறை இல்லை.
ஆனால், வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்த பிறகும் விரலில் இந்த மை தீட்டும் வழக்கம் தற்போது வரை பயன்பாட்டில்தான் உள்ளது. இதுமாதிரியான விரைவில் அழிக்க முடியாத குறியீடு ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அளவில் வாக்களிப்பதைத் தடுக்க வழிவகை செய்கிறது.
இது விரைவில் அழியாததற்குக் காரணம் மையில் உள்ள ‘சில்வர் நைட்ரேட்’ ஆகும். இது பாட்டிலில் உள்ளவரை திரவ நிலையில் இருக்கும். ஆனால், விரலில் தடவிய உடன் தோலில் உள்ள உப்பு மற்றும் சூரிய ஒளியுடன் வினைபுரிந்து ‘சில்வர் குளோரைடு’ ஆக மாறி தோலில் நன்கு ஒட்டிக்கொள்கிறது. ஆகையால், விரலில் வைக்கப்படும் மை அழிய இரண்டு வாரங்களுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்கிறது. நகத்தில் உள்ள மை நகம் வளர்ந்து வெட்டப்பட்டும் வரை பல மாதங்கள்கூட அழியாமல் இருக்கிறது.
இத்தகைய சிறப்பைப் பெற்ற இந்த மை தேசிய இயற்பியல் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் பெயின்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் என்ற அரசு நிறுவனம் மட்டுமே இந்தியாவிலேயே இந்த மை தயாரிக்கும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்தியா தவிர தாய்லாந்து, சிங்கப்பூர், நைஜீரியா, மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த மை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும், தற்போதைய தலைமுறையைச் சார்ந்த இளைஞர்கள் மற்றும் மக்களிடையே வாக்களித்து முடித்த பிறகு, விரலில் தீட்டப்பட்ட அந்த மையுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன் என கருத்துகளைத் தெரிவிப்பது ஒரு நடைமுறையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The electoral ink, which is manufactured at only one location in the entire country, does not fade easily.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









