76 அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் இல்லை: கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 76 அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள்


தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 76 அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
8 கல்லூரிகளில் மட்டுமே உடற்கல்வி இயக்குனர்கள் பணியில் உள்ளனர். இதில் மூவர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் விளையாட்டை ஊக்குவிக்க மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகின்றன. ஆனால் அரசு கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர்கள் இல்லாததால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
76 கல்லூரிகளில்...தமிழகத்தைப் பொறுத்தவரை கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில், 76-இல் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் கல்லூரி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் 8 கல்லூரிகளில் மட்டுமே உடற்கல்வி இயக்குநர்கள் பணியில் இருப்பதாகவும், அதில் மூவரது பணிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைவதாகவும் கல்லூரி கல்வித் துறை அளித்த தகவலின் மூலம் தெரியவந்துள்ளது.
முக்கியத்துவம் என்ன? தமிழகத்தில் பெரும்பாலும் அரசு பள்ளி, கல்லூரிகளில் தனியார் கல்வி நிலையங்களைப் போன்று ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாக பயிற்சியாளர் நியமிக்கப்படுவதில்லை. இதனால் அரசு பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
திருப்பூரில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் திறமையான வீரர்களை ஒருங்கிணைக்க ஆள் இல்லை என்கிறார், அக்கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் கதிர்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், எனக்கு தெரிந்து கல்லூரி விளையாட்டு விழாவை நடத்தக்கூட இங்கு ஆள் இல்லை. தனியார் கல்லூரிகளில் இருந்து விளையாட்டுத் துறை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிற நாள்களில் பெயரளவில் பொருளாதாரத் துறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விளையாட்டு பணிகளை கவனித்து வருகிறார் என்றார்.
இதே நிலைதான் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு கல்லூரிகளில் நிலவுகிறது. விளையாட்டுத் துறையை வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பெயரளவில் கவனித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு விளையாட்டு விதிகள் பற்றி தெரியாது என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஏன் நியமனம் இல்லை? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2009-ஆம் ஆண்டு 43 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போது தொடரப்பட்ட ஒரு வழக்கின் விசாரணை இன்னும் முடியவில்லை. அதன் காரணமாகவே புதிதாக உடற்கல்வி இயக்குநர்கள் பணியமர்த்தப்படவில்லை என கூறப்படுகிறது.
2009-இல் நடைபெற்ற உடற்கல்வி இயக்குநர்களுக்கான தேர்வில் பங்கேற்ற பி.பிரசன்ன குமார் கூறுகையில், "2009-இல் 43 பணியிடங்களுக்கு 635 பேர் எழுத்துத் தேர்வில் பங்கேற்றோம். அதில், 90 பேர் அடுத்தகட்ட தேர்வுக்கு தகுதி பெற்றோம். தேர்வு முடிவு அறிவிக்கப்பட இருந்த நிலையில், எழுத்துத் தேர்வில் பங்கேற்ற 635 பேரில் சிலர் சார்பில், தங்களுக்கும் இப்பதவிக்கான கல்வித்தகுதி இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தேர்வு முடிவுகளை வெளியிட தடையாணை பெறப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை விரைந்து முடித்து கல்லூரிகளில் காலியாக உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்புமாறு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் கடிதம் அளித்து வருகிறோம். அவர்களும் தங்களது வழக்குரைஞர்கள் வழக்கை முடிக்க சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறுகின்றனர் என்றார்.
விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பணத்தை செலவிடும் தமிழக அரசு, காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர்களின் பணியிடத்தை விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
என்ன சொல்கிறார் கல்லூரி கல்வி இயக்குநர்?
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் சேகரிடம் கேட்டபோது, "உடற்கல்வி இயக்குநர்கள் எந்தெந்த கல்லூரிகளுக்கு தேவை என்பதை மட்டுமே நாங்கள் முடிவு செய்வோம். ஆனால் அவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் உள்ளது. அவர்கள் தகுதியானவர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை எங்களிடம் அளிப்பார்கள்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...