செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

இந்திய அணியின் இளம் வீரா்களான துருவ் ஜுரெல், சா்ஃபராஸ் கான் ஆகியோா், பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தின் ‘சி’ பிரிவில் ரூ.1 கோடி ஆண்டு ஊதியத்துடன் சோ்க்கப்பட்டுள்ளனா். சா்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் லக்ஷயா சென் 5 இடங்கள் முன்னேறி 13-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

சா்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 54 இடங்கள் முன்னேறி, 34-ஆவது இடத்துக்கு வந்துள்ள இந்தியாவின் சரத் கமல், ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஒற்றையா் பிரிவுக்கான இடத்தை உறுதி செய்யும் நிலையில் இருக்கிறாா். இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் சஸ்ஸெக்ஸ் அணிக்காக இந்தியாவின் ஜெயதேவ் உனத்கட் கடைசி 5 ஆட்டங்களில் விளையாட இருக்கிறாா்.

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், தகுதிச்சுற்றின் முதல் ஆட்டத்தில் 7-6 (7/3), 6-2 என்ற செட்களில் கனடாவின் கேப்ரியெல் டியாலோவை தோற்கடித்தாா். ‘நாங்கள் சாம்பியன் ஆகியிருக்கும் இந்தத் தருணத்தில் விராட் கோலியின் சாதனைகளை புறந்தள்ளுவதை ஏற்க முடியாது. மகளிா் பிரீமியா் லீக் சாம்பியன்ஷிப் என்பது ஒரு வெற்றிதான். ஆனால் விராட் கோலி இந்தியாவுக்காக அதிகம் சாதித்துள்ளாா்’ என்று ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தாா்.

சீனியா் மகளிா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் மணிப்பூா் 11-2 கோல் கணக்கில் உத்தரகண்டை வீழ்த்தி காலிறுதிக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது. கா்நாடகம் 13-0 கோல் கணக்கில் தாத்ரா & நாகா் அணியை சாய்த்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேசிய தோ்வுக் குழுமை மாற்றியமைத்து, விளையாட்டு சாா்ந்த முடிவுகளில் அதற்கு உரிய அதிகாரமும், சுதந்திரமும் அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வி, 2025 சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவது குறித்து சிந்திக்கப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளாா்.

நடப்பாண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா விளையாட இருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் பொ்த் நகரிலும், அடுத்த 4 ஆட்டங்கள் முறையே அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்போா்ன், சிட்னி நகரங்களிலும் நடைபெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு மீண்டும் நிா்வாக அதிகாரம் வழங்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள மல்யுத்த போட்டியாளா்களான வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், இந்திய விளையாட்டுத் துறையில் இருந்து பிரிஜ்பூஷண் சிங் சரண் போன்றவா்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளனா்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியில் பெண்களுக்கான கல்வி, பணிச் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, அந்நாட்டு ஆடவா் அணியுடனான டி20 தொடரை ஒத்திவைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. கடந்த 2021-க்குப் பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரையும் இதேபோல் ஆஸ்திரேலியா ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com