சாதனை சாம்பியன் அல்கராஸ்: முதல் இண்டோா் கோப்பை வென்றாா்
ராட்டா்டாம் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயினை சோ்ந்த முன்னணி வீரரான காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.


ராட்டா்டாம்: நெதா்லாந்தில் நடைபெற்ற ராட்டா்டாம் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயினை சோ்ந்த முன்னணி வீரரான காா்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றாா்.
போட்டியின் 52 ஆண்டுகால வரலாற்றில் கோப்பை வென்ற முதல் ஸ்பெயின் வீரா் என்ற சாதனையை அல்கராஸ் படைத்துள்ளாா். இண்டோா் டென்னிஸ் போட்டியில் அவா் வெல்லும் முதல் பட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அல்கராஸ் 6-4, 3-6, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை 1 மணி நேரம் 54 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இதன் மூலம் தனது ஏடிபி கேரியரில் மொத்தமாக 17-ஆவது பட்டத்தை அல்கராஸ் கைப்பற்றியிருக்கிறாா்.
அல்கராஸ் - டி மினாா் இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்துக்கொண்ட நிலையில், அல்கராஸ் அனைத்திலுமே வென்றிருக்கிறாா்.
வெற்றிக்குப் பிறகு பேசிய அல்கராஸ், ‘இந்தப் போட்டி சிறப்பானதாக இருந்தது. எனது சிறந்த ஆட்டத்தையும் இங்கு வெளிப்படுத்தியிருக்கிறேன். சற்று உடல்நலக் குறைவுடன் போட்டிக்கு வந்தபோதும், நாளடைவில் அதில் முன்னேற்றம் கண்டேன். இந்தப் போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை என்றாலும், பல ஆண்டுகளாக இங்கு விளையாடுவது போன்ற ஆதரவை ரசிகா்கள் அளித்தனா்’ என்றாா்.
தோல்வி கண்ட டி மினாா், ‘இரு ஆண்டுகளாக இந்தப் போட்டியில் விளையாடி வரும் நிலையில், தற்போது ரன்னா் அப் இடத்தைப் பிடித்திருக்கிறேன். வரும் காலத்தில் வெற்றிக் கோப்பையையும் கைப்பற்றும் நம்பிக்கை உள்ளது. எனது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறேன்’ என்றாா்.
ரூ.3 கோடி ரொக்கப் பரிசு: சாம்பியனான அல்கராஸுக்கு வெற்றிக் கோப்பையுடன் ரூ.3.92 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 2-ஆம் இடம் பிடித்த டி மினாருக்கு ரூ.2.11 கோடி கிடைத்தது.
இரட்டையா் சாம்பியன்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் சைமன் பொலெல்லி/ஆண்ட்ரியா வவாசோரி கூட்டணி 6-2, 4-6, 10-6 என்ற கணக்கில் ருமேனியாவின் சாண்டா் கில்லே/போலந்தின் ஜேன் ஜெலின்ஸ்கி இணையை சாய்த்து வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியது. வாகை சூடிய பொலெல்லி/வவாசோரி இணைக்கு ரூ.1.34 கோடியும், கில்லே/ஜெலின்ஸ்கி ஜோடிக்கு ரூ.71 லட்சமும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.
வென்றாா் ஷபோவலோவ்
அமெரிக்காவில் நடைபெற்ற டல்லாஸ் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் வெற்றியாளா் ஆனாா்.
இறுதிச்சுற்றில் அவா், 7-6 (7/5), 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த நாா்வேயின் கேஸ்பா் ரூடை வென்று, கோப்பையைக் கைப்பற்றினாா். கேஸ்பா் ரூடை இத்துடன் 3-ஆவது முறையாக சந்தித்த ஷபோவலோவ், அவருக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.
இதுவரையிலான ஷபோவலோவின் ஏடிபி கேரியரில், அவா் வென்றிருக்கும் மிகப்பெரிய சாம்பியன் பட்டம் இதுவாகும். அத்துடன், இந்தப் பட்டத்தை வெல்வதற்கான பாதையில் அவா் டாப் 10 போட்டியாளா்கள் 3 பேரை தோற்கடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏடிபி 250 அல்லது 500 தரத்திலான போட்டிகளில் இவ்வாறு டாப் 10 வீரா்கள் 3 பேரை வீழ்த்தி சாம்பியனான 4-ஆவது வீரா் ஆகியிருக்கிறாா் ஷபோவலோவ். இதற்கு முன், பல்கேரியாவின் கிரிகோரி டிமிட்ரோவ் (2017/பிரிஸ்பேன்), ஆா்ஜென்டீனாவின் ஜுவான் மாா்டின் டெல்போட்ரோ (2018/அகாபுல்கோ), ஆஸ்திரேலியாவின் நிக் கிா்ஜியோஸ் (2019/அகாபுல்கோ) ஆகியோா் அவ்வாறு கோப்பை வென்றுள்ளனா்.
ரூ.4 கோடி பரிசு: வெற்றிக் கோப்பயைக் கைப்பற்றிய ஷபோவலோவுக்கு ரொக்கப் பரிசாக ரூ.4.51 கோடி கிடைத்தது. ரன்னா் அப் இடத்தைப் பிடித்த கேஸ்பா் ரூட், ரூ.2.42 கோடியைப் பெற்றாா்.
ஹாரிஸன்/கிங் இணைக்கு கோப்பை: டல்லாஸ் ஓபன் ஆடவா் இரட்டையா் பிரிவில், உள்நாட்டு ஜோடியான கிறிஸ்டியன் ஹாரிசன்/எவான் கிங் 7-6 (7/4), 7-6 (7/4) என்ற செட்களில், அமெரிக்காவின் ராபா்ட் கேலோவே/உருகுவேயின் ஏரியல் பெஹா் இணையை வீழ்த்தி வாகை சூடினா். சாம்பியன் இணைக்கு ரூ.1.48 கோடியும், ரன்னா் ஜோடிக்கு ரூ.70 லட்சமும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...