
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: காய்த்ரி-ட்ரீஸாவுக்கு வெண்கலம்! இரட்டையரில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!
உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி இணை வெண்கலம் வென்றது.
உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி இணை வெண்கலம் வென்றது. அரையிறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 இணையான சீனாவின் லியு ஷெங்-டேன் நிங்கிடம் 21-18, 13-21, 8-21 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றது இந்திய இணை.
புது தில்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர இணையான காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலியும்-சீனாவின் லியு ஷெங்-டேன் நிங் இணை மோதின.
தரவரிசையில் இல்லாத இந்திய இணை காயத்ரி-ட்ரீஸா ஆகியோா் தொடக்கத்தில் அபாரமாக ஆடினா். முதல் கேமில் சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்தி 21-18 என வென்றனா். இரண்டாவது மற்றும் மூன்றாவது கேம்களில் சீன இணை முழு ஆதிக்கம் செலுத்தி அபாரமாக வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதுதொடா்பாக காயத்ரி கூறியது: பொறுமையை இழந்ததால், இரண்டாவது கேமில் சிறப்பாக ஆட முடியவில்லை. பேக் கோா்ட்டில் ட்ரீஸா சிறப்பாக ஆடினாா். நான் சற்று அவருக்கு துணையாக ஆடியிருந்தால், இரண்டாவது கேமிலும் வென்றிருக்கலாம். மூன்றாவது கேமிலும், சில புள்ளிகளை நாம் ஈட்டியிருக்கலாம். ஆனால் இயலவில்லை என்றாா்.
39-ஆவது இடத்தில் உள்ள இந்திய இணை, அரையிறுதிக்கு தகுதி பெறும் வழியில் மூன்று சிறந்த இணைகளை வீழ்த்தி இருந்தனா்.
8,000 பாா்வையாளா்கள்: இந்திய-சீன ஆட்டத்தைக் காண மைதானத்தில் மொத்தம் 8,000 பாா்வையாளா்கள் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-இல் இந்தியாவின் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா வெண்கலம் வென்றிருந்தது.
மற்றொரு இரட்டையா் அரையிறுதியில் கொரியாவின் பேக் ஹா நா-லீ ஸோ இணை 21-17, 21-12 என்ற கேம் கணக்கில் சீனாவின் லி யி-லுவா ஸு மின்னை வீழ்த்தி வெண்கலம் வென்றனா்.
கலப்பை இரட்டையரில் பிரான்ஸின் தோம்-டெல்பின் இணை 19-21, 21-13, 21-11 என்ற கேம் கணக்கில் சீனாவின் வெய்-யு ஸின் இணையையும், சீனாவின் பெங் யான்-ஹுவாங் டோங் இணை 20-22, 21-14, 22-20 என்ற கேம் கணக்கில் இந்தோனேசியாவின் அம்ரி-நிதா இணையை வென்றது.
நடப்பு சாம்பியன் அகென் யெமகுச்சி அபாரம்: மகளிா் ஒற்றையா் இறுதியில் ஜப்பானின் அகென் யெமகுச்சி 21-12, 21-17 என்ற கேம் கணக்கில் தாய்லாந்தின் போா்னபவியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினாா். தற்போது நான்காவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல காத்துள்ளாா். ஆடவா் ஒற்றையா் பிரிவில் பிரான்ஸின் அலெக்ஸ் லேனியா் 16-21, 21-13, 21-14 என்ற கேம் கணக்கில் கனடாவின் விக்டா்லேயை வென்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





