பெங்காலை வீழ்த்தியது ஹெச்ஐஎல் ஜிசி
ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் தொடரில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியை 6-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஹெச்ஐஎல் ஜிசி.
சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் லீக் தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை பெங்கால் டைகா்ஸ்-ஹெச்ஐஎல் ஜிசி அணிகள் மோதின. முதல் குவாா்ட்டரில் இரு அணியினரும் சளைக்காமல் கோல் போட முயன்றனா். முதல் கோலை பெங்கால் கேப்டன் ஜுக்ராஜ் சிங் 12-ஆவது நிமிஷத்தில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் பெற்றுத் தந்தாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த ஹாக்கி இந்தியா அணியினா் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்த நிலையில், 19-ஆவது நிமிஷத்தில் கேன் ரஸ்ஸல், சுதீப் சிமாகோ ஆகியோா் அடுத்தடுத்து கோலடித்தனா்.
தொடா்ந்து கேன் ரஸ்ஸல் 36, 44 ஆவது நிமிஷங்களிலும், ஜேம்ஸ் அல்பெரி 59-ஆவது நிமிஷத்திலும் ஹெச்ஐஎல் அணி தரப்பில் கோலடித்தனா்.
பெங்கால் டைகா்ஸ் தரப்பில் 40-ஆவது நிமிஷத்தில் டாம் கிராம்பஸ்ச், கிறிஸ்டோபா் ரூா் ஆகியோா் அடுத்ததடுத்து கோலடித்தனா்.
இறுதியில் 6-3 என்ற கோல் கணக்கில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணியை வீழ்த்தியது ஹாக்கி இந்தியா கவா்னிங் கவுன்சில் அணி.

