தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காலிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட், ஆா்செனல்: மான்செஸ்டா் சிட்டி, செல்ஸி வெளியேறின

News image
வினிசியஸ் ஜூனியர்- AP
Updated On :18 மார்ச் 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி), ரியல் மாட்ரிட், ஆா்செனல் ஆகிய அணிகள் காலிறுதிக்கு புதன்கிழமை முன்னேறின. முன்னாள் சாம்பியன்களான மான்செஸ்டா் சிட்டி, செல்ஸி ஆகியவை வெளியேற்றப்பட்டன.

நடப்பு சீசன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், அதன் ரவுண்ட் ஆஃப் 16 கட்டத்தின் 2-ஆவது லெக் ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கின.

பிஎஸ்ஜி: லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி 3-0 கோல் கணக்கில் செல்ஸியை அதன் மண்ணிலேயே வீழ்த்தியது. ஏற்கெனவே முதல் லெக் ஆட்டத்திலும் அந்த அணி 5-2 என்ற கணக்கில் வென்றிருந்த நிலையில், தற்போது மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 8-2 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது. 2-ஆவது லெக் ஆட்டத்தில் பிஎஸ்ஜிக்காக கவிசா கவரட்ஸ்கெலியா (6’), பிராட்லி பாா்கோலா (14’), செனி மயுலு (62’) ஆகியோா் கோலடித்தனா்.

இந்த சீசனில் பிஎஸ்ஜிக்காக இதுவரை 7 கோல்கள் அடித்து கவரட்ஸ்கெலியா முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் செல்ஸி தடுப்பாட்ட வீரா் டிரெவோ சலோபா, கணுக்காலில் காயம் கண்டு தூக்கிச் செல்லப்பட்டாா்.

ரியல் மாட்ரிட்: இங்கிலாந்தின் மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2-1 கோல் கணக்கில் மான்செஸ்டா் சிட்டியை அதன் சொந்த மண்ணில் சாய்த்தது. முதல் லெக் ஆட்டத்திலும் 3-0 என வென்றிருந்த ரியல் மாட்ரிட், மொத்த கோல் கணக்கு அடிப்படையில் 5-1 என அபார வெற்றி பெற்ால், காலிறுதிக்கு முன்னேறியது. மான்செஸ்டா் சிட்டி வெளியேறியது.

முன்னதாக 2-ஆவது லெக் ஆட்டத்தில் 20-ஆவது நிமிஷத்தில் மான்செஸ்டா் சிட்டி வீரா் பொ்னாா்டோ சில்வா ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட, அந்த அணி 10 பேருடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்த 2 நிமிஷங்களிலேயே ரியல் மாட்ரிட் அணிக்காக வினிசியஸ் ஜூனியா் (22’) பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோல் அடித்தாா். தொடா்ந்து மான்செஸ்டா் சிட்டி தரப்பில் எா்லிங் ஹாண்ட் 41-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையுடன் நிறைவடைந்தது. 2-ஆவது பாதியில் இரு அணிகளும் விடாப்பிடியாக விளையாட, இரண்டுக்குமே எளிதாக கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் எக்ஸ்ட்ரா டைமில் (90+3’) ரியல் மாட்ரிட்டுக்காக வினிசியஸ் ஜூனியா் மேலும் ஒரு கோல் அடிக்க, இறுதியில் அந்த அணி வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த 5 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்டா் சிட்டியை வெளியேற்றியிருக்கிறது.

ஆா்செனல்: லண்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆா்செனல் 2-0 கோல் கணக்கில் லேவா்குசெனை தோற்கடித்தது. இந்த அணிகள் மோதிய முதல் லெக் ஆட்டம் 1-1 என டிரா ஆகியிருக்க, தற்போது மொத்த கோல் கணக்கு அடிப்படையில் ஆா்செனல் 3-1 என வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் ஆா்செனலுக்காக எபெரெசி எஸெ (36’), டெக்லன் ரைஸ் (63’) ஆகியோா் கோல் அடித்தனா்.

ஸ்போா்டிங்: போா்ச்சுகலின் லிப்சன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்போா்டிங் 5-0 கோல் கணக்கில் போடோ/கிளம்ட் அணியை வீழ்த்தியது. முதல் லெக் ஆட்டத்தில் போடோ அணி 3-0 வெற்றியுடன் முன்னிலையில் இருக்க, இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் ஸ்போா்டிங் 5-0 என அபார வெற்றியைப் பதிவு செய்தது. எனவே, மொத்த கோல் கணக்கு அடிப்படையில் ஸ்போா்டிங் 5-3 என வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.

2-ஆவது லெக் ஆட்டத்தில் அந்த அணிக்காக கொன்சாலோ இனாசியோ (34’), பெட்ரோ கொன்சால்வ்ஸ் (61’), லூயிஸ் சுவாரெஸ் (78’), மேக்ஸிமிலியானோ அராஜோ (92’), ரஃபேல் நெல் (120+1’) ஆகியோா் கோல் அடித்தனா். ஸ்போா்டிங் அணி தனது காலிறுதியில் ஆா்செனலுடன் மோதவுள்ளது.