கார் ஓட்டுநர் டூ ராணுவ வீரர்... படகுப் போட்டியில் வெண்கலம் வென்றவரின் சோக வரலாறு!!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வாடகை கார் ஓட்டுநரான சல்மான் கான் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளதைப் பற்றி...

சத்நாம் சிங், சல்மான் கான்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வாடகை கார் ஓட்டுநரான சல்மான் கான் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டு 20-வது தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தத் தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
வியாழக்கிழமை காலை நடைபெற்ற 2000 மீட்டர் துடுப்பு படகுப் போட்டி இந்தியாவின் சல்மான் கான் மற்றும் சத்நாம் சிங் இருவரும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் இந்திய ஜோடியான சல்மான் மற்றும் சத்நாம் இவரும் 6 நிமிடங்கள் 13 விநாடிகளில் இலக்கைக் கடந்து 3-வது இடத்தைப் பிடித்தனர்.
500 மீ, 1000 மீ மற்றும் 1500 மீ தூரங்களில் இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட இந்த ஜோடி, கடைசி 500 மீட்டரில் 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டாலும் வெண்கலத்தை தன்வசப்படுத்தினர்.

சல்மான் கான்
யார் இந்த சல்மான் கான்?
உத்தரப் பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள புரே திங்காய் என்ற ஊரில் பிறந்தவர் சல்மான் கான். குடும்பத்தில் மூத்தவரான இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள்.
இவரின் தந்தை முகமது காஷிம் கான், ஹரியாணாவில் உள்ள தௌருவில் கனரக வாகனங்களில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். சல்மான் கான் தனது பள்ளிப் படிப்பை ஹரியாணாவிலேயே முடித்தார்.
சல்மானுக்கு 18 வயது இருக்கும்போது, டெங்குவால் பாதிக்கப்பட்ட தந்தை உயிரிழந்த நிலையில், சல்மானின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. தனது சகோதர, சகோதரிகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது ராணுவத்துக்குச் செல்லும் கனவை விட்டுவிட்டு தில்லியில் ஊபர் வாடகை கார் ஓட்டி, இரவும் பகலும் உழைத்து பிழைப்பு நடத்தி வந்தார்.
ஒருகட்டத்தில் தன்னுடைய உயரமான தோற்றம் மற்றும் ராணுவத்துக்குச் செல்ல வேண்டும் என்ற வேட்கையில், அந்த வாடகைக் காரை மற்றொரு ஓட்டுநரிடம் ஒப்படைத்துவிட்டு, ஆள்சேர்ப்பு, மருத்துவப் பரிசோதனை, எழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெற நான்கு மாதங்கள் மட்டும் பயிற்சி பெற்று தன்னைத் தயார்படுத்திக்கொண்டார்.
புணேயில் உள்ள இந்திய ராணுவ பிரிவான பாம்பே இன்ஜினியரிங் குரூப்பில் 2018 ஆம் ஆண்டு செப். 25 ஆம் தேதி இணைந்தார் சல்மான். அப்போதுதான் அவருக்கு துடுப்பு படகோட்டுதல் விளையாட்டு அறிமுகமானது.
சல்மான் கான் 2022-ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றார். அதே ஆண்டில் நடைபெற்ற 5-வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். 2023-ஆம் ஆண்டில் லூசெர்னில் நடைபெற்ற மூன்றாம் உலகப் படகுப் போட்டித் தொடரிலும் அவர் பங்கேற்றார்.
கோவாவில் நடைபெற்ற 37ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அவர், அதனைத் தொடர்ந்து 2024-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய படகுப் போட்டியிலும் தங்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவருக்கு இந்திய ராணுவத்தில் நைப் சுபேதார் பதவிக்கு பதவி உயர்வு கிடைத்தது.
Summary
Salman Khan used to drive a cab in New Delhi, now he has a medal at the Asian Games. Alongside Satnam Singh, Salman won India's first ever bronze medal in the men's double sculls in September 24.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






