யாதும் ஊரே யாவரும் கேளிர்: வெளிநாடுகளில் பிறந்த வீரர்களைக் கொண்டு சாதித்த இங்கிலாந்து அணி!

யாதும் ஊரே யாவரும் கேளிர்: வெளிநாடுகளில் பிறந்த வீரர்களைக் கொண்டு சாதித்த இங்கிலாந்து அணி!

இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்...

உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அயர்லாந்துடன் தொடங்கினார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இதுபோல இங்கிலாந்து அணியில் இடம்பெற்ற பல வீரர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். பல நாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து இங்கிலாந்து அணிக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்கள். 

இங்கிலாந்து கேப்டன் இயன் மார்கன், அயர்லாந்தில் பிறந்தவர். தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை அயர்லாந்துடன் தொடங்கினார். எனினும் தன்னுடைய தாய், இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தன்னிடம் இங்கிலாந்து பாஸ்போர்ட் உள்ளது என்று கூறி டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணியில் இணைந்துகொண்டார். பிறகு இங்கிலாந்து கேப்டனாகி, உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டார். 

அதேபோல பார்படாஸில் (மேற்கிந்தியத் தீவுகள்) பிறந்து அங்கு கிரிக்கெட் விளையாடி வந்த ஜோஃப்ரா ஆர்ச்சர்,  சமீபத்தில்தான் இங்கிலாந்து அணியில் விளையாடத் தகுதி பெற்றார். ஆனால் தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே சூப்பர் ஓவரில் அற்புதமாகப் பந்துவீசி இங்கிலாந்து அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்துள்ளார்.

இங்கிலாந்தின் அதிரடித் தொடக்க வீரர் ஜேசன் ராய், தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர். அவருக்கு 10 வயதாகும்போது ஜேசன் ராயின் குடும்பம் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது. தற்போது இங்கிலாந்து அணி முக்கிய பேட்ஸ்மேனாக உள்ளார்.

நியூஸிலாந்தில் பிறந்த பென் ஸ்டோக்ஸ், 12 வயதாகும்போது குடும்பத்துடன் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார். தற்போது, இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்ற போட்டியில், இறுதிச்சுற்றில் ஆட்ட நாயகன் விருதை அவர் பெற்றுள்ளார். 

இதுதவிர மொயீன்  அலி, அடில் ரஷித் என பாகிஸ்தான் வம்சாவழியைச் சேர்ந்த இரு வீரர்களும் இங்கிலாந்து அணியில் உள்ளார்கள். அடில் ரஷித் இங்கிலாந்தில் பிறந்தாலும் அவருடைய பெற்றோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். 1967-ல் இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்கள். மொயீன் அலியின் தாத்தா பாகிஸ்தானின் மிர்புரிலிருந்து இங்கிலாந்துக்கு வந்தவர். மொயீன் அலியின் பாட்டி பெட்டி காக்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்.

இப்படி பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்து அணியில் இடம்பெற்று அந்த அணி உலகக் கோப்பையை முதல்முறையாக வெல்ல முக்கியக் காரணமாக இருந்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com