3 வாரங்களுக்கு தவன் இல்லை: புதிய சிக்கலை எப்படித் தீர்க்கப் போகிறது இந்திய அணி?
இதையடுத்து இந்திய அணி முன்பு சில கேள்விகள் உள்ளன...


இது எதிர்பாராத திருப்பம். உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்தியத் தொடக்க வீரர் ஷிகர் தவன் மூன்று வாரங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து அசத்தினார் ஷிகர் தவன். அப்போது அவருடைய பெருவிரலில் காயம் ஏற்பட்டது. காயத்தைப் பொருட்படுத்தாமல் விளையாடி சதமடித்தார். பிறகு அவர் ஃபீல்டிங் செய்ய வரவில்லை. இந்நிலையில் காயம் காரணமாக மூன்று வாரங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் குணமாக தவன் மூன்று வாரங்கள் ஓய்வெடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. லீட்ஸில் இன்று ஸ்கேன் எடுத்த பிறகு நிலவரம் தெளிவாகத் தெரியவரும் என்று தெரிகிறது. இதையடுத்து இந்திய அணி தவன் குறித்து ஒரு முடிவெடுக்கவுள்ளது.
இதனால் அடுத்து நடைபெறவுள்ள நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தவன் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் ஆட்டங்களில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து கேஎல் ராகுல் விளையாடவுள்ளார்.
தற்போது, இந்திய அணி முன்பு சில கேள்விகள் உள்ளன.
மூன்று வாரங்கள் கழித்து தவன் மீண்டு வந்துவிடுவார் என்பதால் அவரையே அணியில் தக்கவைத்துக் கொள்ளலாமா, அல்லது ஒருவேளை மூன்று வாரங்கள் கழித்தும் குணமாகாமல் போக வாய்ப்பிருப்பதால் இப்போதே அவரை உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து வெளியேற்றி ரிஷப் பந்த் போன்ற புதிய வீரரை அணிக்குள் சேர்த்து விடலாமா என்கிற கேள்விகளை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி.
இப்போதே சமூகவலைத்தளத்தில், தவனுக்குப் பதிலாக ரிஷப் பந்தைத் தேர்வு செய்யவேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இது தேர்வுக்குழுவிர், விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோரை அசைத்துப் பார்க்குமா என்று தெரியவில்லை. எனினும் மூன்று வாரங்கள் வரை தவனுக்காகக் காத்திருக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்யும் என்றே தெரிகிறது. ஒருவேளை காயம் குணமாவதில் முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் அவரைப் போட்டியிலிருந்து விலக்கிவிட்டு புதிய வீரர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவனுக்குப் பதிலாக ரிஷப் பந்த் அல்லது ராயுடு ஆகிய இருவரில் யார் தேர்வு செய்யப்பட்டாலும் அடுத்தச் சிக்கலும் இந்திய அணிக்கு உள்ளது.
தவன் இல்லாத நிலையில் ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்குவார். எனில் 4-ம் நிலை வீரராக யார் விளையாடப் போகிறார்?
ராகுலுக்கு முன்பு அந்த இடத்துக்குத் தேர்வான விஜய் சங்கரை களமிறக்கப் போகிறதா இந்திய அணி? இல்லை புதிதாகத் தேர்வாகவுள்ள ரிஷப் பந்த் அல்லது ராயுடு ஆகிய இருவரில் ஒருவரா? அல்லது அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு அந்த வாய்ப்பு போகப்போகிறதா?
முதல் இரு ஆட்டங்களில் வெற்றி கண்டாலும் இந்திய அணியால் நிம்மதியாக இருக்கமுடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. எனினும் வரும் நாள்களில் இந்தக் கேள்விகளுக்கான விடை கிடைத்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...