இந்திய அணி தோல்வி! புள்ளி விவரங்களை பொய்யாக்கிய இலங்கை!
புள்ளி விவரங்களை பொய்யாக்கி தொடரை வென்றுள்ளது இலங்கை அணி.


இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்தியா-இலங்கை மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி பிரேமதசா மைதானத்தில் நடைபெற்றது. டாஸை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இந்திய அணியில் கே. எல்.ராகுல், அர்ஷ்தீப் சிங் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ரிஷப் பண்ட், ரியான் பராக் சேர்க்கப்பட்டனர். இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் 256 வீரர் ரியான் பராக் ஆவார்.
அவருக்கு விராட் கோலி தொப்பி வழங்கினார். இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வான முதல் அஸ்ஸாம் மாநில வீரர் என்ற பெருமையை 23 வயதான ரியான் பராக் பெற்றார்.

ரியான் பராக்கிற்கு தொப்பி வழங்கிய விராட் கோலி.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கையின் பதும் நிசங்கா, ஃபெர்னாண்டோ ஆகியோர் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்த நிலையில் நிசங்கா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரரான ஃபெர்னாண்டோ அதிகபட்சமாக 96 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த குஷல் மெண்டிஸ் 59 ரன்களும், கேப்டன் அசலங்கா 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்களும், சிராஜ், அக்ஷர் படேல், சுந்தர், குல்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர்.
அதிரடியாக ஆடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 20 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணி இலங்கையின் சுழலில் சிக்கி 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
சுப்மன் கில் 6 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 6 ரன்னிலும், ஸ்ரேயாஸ் அய்யர் 8 ரன்னிலும், அக்ஷர் படேல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த தூபே 9 ரன்னிலும், ரியான் பராக் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
26.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 110 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த இலங்கை அணி இந்தப் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் 27 ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது.

கம்பீரின் தலைமையில்...
கௌதம் கம்பீரின் தலைமைப் பயிற்சியின்கீழ் 20 ஓவர் தொடரில் 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணியின், மோசமான அணித் தேர்வு, எந்த வீரரை எந்த வரிசையில் இறக்குவது போன்ற குழப்பங்களும் இந்திய அணியில் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய அணியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
புள்ளி விவரங்களை பொய்யாக்கிய இலங்கை
கடந்த 1997 ஆம் ஆண்டு சச்சின் தெண்டுல்கர் தலைமையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவிய நிலையில் அதற்குபின் எல்லாத் தொடர்களிலும் வெற்றியையும், சமனிலும் பெற்றிருந்தது.
ஆனால், 27 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையுடனான தொடரை இழந்தது இந்திய அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...