
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கானை நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநராக ஜாகீர் கான் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். 45 வயதாகும் ஜாகீர் கான் 100-க்கும் அதிகமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உடையவர்.
அவர் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் தில்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஜாகீர் கான் 102 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்த நிலையில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கானை நியமிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஐபிஎல் தொடரில் லக்னௌ அணியின் ஆலோசகராக ஜாகீர் கானை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கௌதம் கம்பீர் லக்னௌ அணியில் ஆலோகர் பதவியிலிருந்து விலகியதால், டி20 போட்டிகளில் அனுபவம் வாய்ந்தவர்களில் ஒருவரான ஜாகீர் கானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட்ட இரண்டு ஆண்டுகளும் (2022 மற்றும் 2023) லக்னௌ அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு அந்த அணி கோப்பையை வெல்ல உதவி புரிந்தார்.
அண்மையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.