
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் செயலராக அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகனும் தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான ரோஹன் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் அடுத்த செயலராக தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் செயலராக உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷா, அடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ள நிலையில் அந்தப் பதவிக்கு ரோஹன் ஜெட்லியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ரோஹன் ஜெட்லி மாற்றப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவு ஜெய் ஷாவுக்கு இருப்பதால் அவர் ஐஐசி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. எனவே, தலைவர் தேர்வு வெறும் ஒரு சம்பிரதாயத்திற்காக நடத்தப்படவுள்ளது.
ரோஹன் ஜெட்லியின் பெயர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலராக ஆவதற்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறது.
பிசிசிஐயின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னி உள்பட மற்ற உயர்மட்ட அதிகாரிகளின், பதவிக்காலத்தில் இன்னும் ஒரு வருடம் மீதமுள்ளதால், அவர்கள் அதேப் பதவிகளில் தொடர்வார்கள்.
ஐஐசி தலைவரான நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே, மூன்றாவது முறையாக போட்டியிடப் போவதில்லை என்றும், அவரது தற்போதைய பதவிக்காலம் நவம்பர் மாத இறுதியில் முடிவடையும் போது பதவியில் இருந்து விலகுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
கிரேக் பார்க்லே 2020 நவம்பரில் ஐஐசி தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் 2022 ஆம் ஆண்டில் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.