ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளரைப் பார்த்து சோயப் பஷீர் சிறப்பாக பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டுமென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரே பாய்காட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக நாதன் லயன் வலம் வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் நாதன் லயன் 530 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். வலதுகை சுழற்பந்துவீச்சாளர்களில் அனுபவமிக்கவராகவும் நாதன் லயன் உள்ளார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனைப் பார்த்து சோயப் பஷீர் சிறப்பாக பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டுமென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜியாஃப்ரே பாய்காட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சோயப் பஷீர் மிகவும் திறமையான வீரர். அவரது உயரம் பந்துவீச்சுக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. அவர் விக்கெட் எடுப்பதற்காக பல்வேறு விதமான பந்துவீச்சை முயற்சிப்பதாக நினைக்கிறேன். அவர் பந்துவீச்சில் சிறிது தெளிவு இல்லாமல் இருப்பதாக நினைக்கிறேன். உலகின் மிகச் சிறந்த ஆஃப் ஸ்பின்னராக நாதன் லயன் உள்ளார். நாதன் லயனின் பந்துவீச்சு விடியோக்களைப் பார்த்து சோயப் பஷீர் கற்றுக்கொள்ள வேண்டும். நாதன் லயனின் லைன் அண்ட் லென்த்தை பஷீர் உன்னிப்பாக கவனித்து சிறப்பாக பந்துவீச கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.