பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் தனது இன்ஸ்டா பக்கத்தில் கே.எல்.ராகுல், “நான் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன். காத்திருங்கள்” என சமீபத்தில் கூறியிருந்தார்.
32 வயதாகும் கே.எல்.ராகுல் 50 டெஸ்ட் போட்டிகளில் 2863 ரன்களும் 77 ஒருநாள் போட்டிகளில் 2851 ரன்களும் 72 சர்வதேச டி20களில் 2265 ரன்களும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 4,683 ரன்கள் குவித்துள்ளார்.
கே.எல்.ராகுல் இந்திய ஒருநாள் அணிக்கு தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தியுள்ளார். தற்போது இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌ அணிக்கு 2022 முதல் கேப்டனாக செயல்படுகிறார்.
கடந்த முறை ஒரு போட்டியின்போது கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா கோபமாக பேசிய விடியோ வைரலானது. இதனால் கே.எல்.ராகுல் அந்த அணியில் இருந்து விலகுவாரா என சர்ச்சை கிளம்பியது.
தற்போது லக்னௌ அணிக்கு ஜாகீர் கான் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சஞ்சீவ் கோயங்கா பேசியதாவது:
கடந்த 3 வருடங்களாக அவ்வப்போது கே.எல்.ராகுலை சந்தித்து வருகிறேன். ஆனால் இது ஊடகங்களில் ஏன் இவ்வளவு பெரிதுபடுத்தப்படுகிறது எனப் புரியவில்லை.
லக்னௌ அணியின் ஒரு பகுதி கே.எல்.ராகுல். எல்.எஸ்.ஜி. அணியின் துவக்கத்தில் இருந்து ராகுல் இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கும் எனது மகனுக்கும் கே.எல்.ராகுல் குடும்ப உறுப்பினர் போன்றவர்.
யாரையெல்லாம் தக்கவைப்பது என்பதைக் குறித்து சிந்திக்க செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என பல மாதங்கள் இருக்கின்றன. முதலில் ஐபிஎல் நிர்வாகம் என்ன விதியை சொல்கிறது எனப் பார்ப்போம். முடிந்த அளவுக்கு அதே அணியை தக்க வைக்க முயற்சிப்போம் எனக் கூறினார்.