
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 118 ரன்களும், பென் டக்கெட் 40 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிலன் ரத்நாயகே மற்றும் லகிரு குமாரா தலா 2 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்யா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இலங்கை திணறல்
இங்கிலாந்து அணி 427 ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. அந்த அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிஷான் மதுஷ்கா (7 ரன்கள்), திமுத் கருணாரத்னே (7 ரன்கள்), பதும் நிசங்கா (12 ரன்கள்), ஏஞ்சலோ மேத்யூஸ் (22 ரன்கள்), தனஞ்ஜெயா டி சில்வா (0 ரன்), தினேஷ் சண்டிமால் (23 ரன்கள்) என இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
காப்பாற்றிய கமிந்து மெண்டிஸ்
இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து கமிந்து மெண்டிஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதானமாக விளையாடிய அவர் அரைசதம் எடுத்தார். அவர் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கை அணி 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஆலி ஸ்டோன் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோயப் பஷீர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
வலுவான முன்னிலை
231 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்திருந்தது. இலங்கையைக் காட்டிலும் இங்கிலாந்து 256 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று வலுவான முன்னிலையுடன் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.