டி20 போட்டிகளில் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து இந்திய வீரர் ஆயுஷ் பதோனி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தில்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்ற போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட் செய்தது.
சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆயுஷ் பதோனி 165 ரன்களும் (55 பந்துகளில்) (8 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்ஸர்கள்), பிரியன்ஷ் ஆர்யா 120 ரன்களும் (50 பந்துகளில்) (10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள்) எடுத்தனர். பிரியன்ஷ் ஆர்யா ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 20 ஓவர்களின் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம், சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 போட்டிகளில் உலக சாதனை
தில்லி பிரீமியர் லீக் தொடரின் இன்றையப் போட்டியில் ஆயுஷ் பதோனி 19 சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம், புதிய உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் மற்றும் எஸ்டோனியா வீரர் சஹில் சௌகான் இருவரும் டி20 போட்டி ஒன்றில் 18 சிக்ஸர்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவர்களது சாதனையை ஆயுஷ் பதோனி முறியடித்துள்ளார்.
பார்ட்னர்ஷிப் சாதனை
சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி வீரர்களான ஆயுஷ் பதோனி மற்றும் பிரியன்ஷ் ஆர்யா பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 286 ரன்கள் குவித்தனர். டி20 போட்டிகளில் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
அதிகபட்ச ரன்கள் சாதனை
சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் நார்த் தில்லி ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட் செய்த சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. டி20 போட்டிகளில் ஒரு அணியால் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டி20 போட்டிகளில் மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நேபாளம் 314 ரன்கள் குவித்ததே ஒரு அணியால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. சௌத் தில்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 7 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால், அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டிருக்கும்.