உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
ரவீந்திர ஜடேஜாவைப் போன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சிறப்பான ஃபீல்டர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சுரேஷ் ரெய்னாவின் மிகப் பெரிய ரசிகன் நான். அவர் கிரிக்கெட் விளையாடிய நாள்களை மகிழ்ச்சியுடன் பார்த்தேன். தற்போது அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த காலங்களில் இந்தியாவில் கிரிக்கெட் உள்கட்டமைப்புகள் பெரிய அளவில் இல்லை. சுரேஷ் ரெய்னா மிகச் சிறந்த ஃபீல்டர். அவர் போட்டியின்போது அருமையாக ஃபீல்டிங் செய்வார். பந்துகளை டைவ் அடித்து பிடிப்பார்.
ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னாவைக் காட்டிலும் ஃபீல்டிங்கை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவர் டைவ் அடிக்க மாட்டார். ஆனால், பந்துகளை மிகவும் வேகமாக ஓடிச் சென்று தடுப்பதில் வல்லவர். பந்துகளை எடுத்து எறிவதில் ரிக்கி பாண்டிங்கை போன்று துல்லியமாக செயல்படக் கூடியவர். பவுண்டரி லைன், உள்வட்டத்தில் ஃபீல்டிங் என அனைத்து இடங்களிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்பவர். ஃபீல்டிங்கில் அவர் முழுமையான ஆல்ரவுண்டர் என்றார்.
ஜாண்டி ரோட்ஸ்
55 வயதாகும் ஜாண்டி ரோட்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 1992 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். மிகச் சிறந்த ஃபீல்டரான ஜாண்டி ரோட்ஸ், ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்காக 100 கேட்ச்களை பிடித்த முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் செயல்பட்டுள்ளார். கடைசியாக அவர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.