
ஆப்கானிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட்டின் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது.
கத்துக்குட்டி அணியாக இருந்த ஆப்கானிஸ்தான், தலைமைப் பயிற்சியாளரும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரருமான ஜொனாதன் ட்ராட்டின் வருகைக்குப் பின்னர் மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தும் அணியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஜொனாதன் ட்ராட் 2.5 ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பு அளித்தார். அவரின் தலைமையில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளுக்கே அதிர்ச்சியளித்தது.
கடந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகளை தோற்கடித்து வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், அதுமட்டுமல்லாது 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கும் தகுதிபெற்றது.
கடந்த மே மாதத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் சக்திவாய்ந்த அணிகளாகக் கருதப்படும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் அணி தண்ணிகாட்டியது. மேலும், இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பை அடித்து நொறுக்கிய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்க அணியிடம் 56 ரன்களில் ஆல்- அவுட் ஆகி தோல்வியைத் தழுவி வெளியேறியது.
இருப்பினும், முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதிபெற்ற ஜொனாதன் ட்ராட் தலைமையின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான இடத்தைப் பிடித்து அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. மேலும், அவரின் வழிகாட்டுதலில் அதிகளவிலான திறமையுள்ள ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் ஏலத்தில் ஏடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜிம்பாம்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆப்கானிதான் அணி 3 டி20, 3 டெஸ்ட், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரில் மட்டும் ஜொனாதன் ட்ராட் அணியுடன் இருப்பார். மேலும் தனிப்பட்ட காரணங்களால் அணியில் இருந்து விலகுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜொனாதன் ட்ராட் இல்லாத நேரத்தில் ஹமித் ஹாசன் அணியின் பொறுப்பு தலைமைப் பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் நவ்ரவ் மங்கள் அணியின் துணைத் தலைமைப் பயிற்சியாளராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.