

இங்கிலாந்து அணியை 423 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவந்தது.
இந்தத் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று முன்னிலையில் இருந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசிப் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 347 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களும், நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 453 ரன்களும் எடுத்து ஆல்- அவுட் ஆனது. நியூசிலாந்து அணித் தரப்பில் 2-வது இன்னிங்ஸில் அசத்தலாக விளையாடிய நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியம்சன் 156 ரன்கள் விளாசி அசத்தினார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 3-வது நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து அணி 18 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் இருவரும் நிதானமாக ஆடி 3-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பாட்னர் ஷிப் அமைத்தனர்.
ஜோ ரூட் 54 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 76 ரன்களும் சேர்த்தனர். அதன்பின்னர் வந்தவர்கள் சரியாக சோபிக்காததால் இங்கிலாந்து அணி 47.2 ஓவர்களில் 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து கேப்டன் தொடையில் ஏற்பட்ட காயத்தால் பேட்டிங் செய்ய வரவில்லை.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 423 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.
நியூசிலாந்து தரப்பில் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும், 4 விக்கெட்களும் வீழ்த்திய மிட்செல் சாண்டனர் ஆட்டநாயகன் விருதை வென்றார். முதல் டெஸ்ட்டில் 171 ரன்களும், 2-வது டெஸ்ட்டில் 123 ரன்களும் விளாசிய ஹாரி புரூக் தொடர் நாயகன் விருதை வென்றார்.
முன்னதாக, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி கடைசி போட்டியில் வெற்றியுடன் ஓய்வுபெற்றார்.
2-வது போட்டியில் 323 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.