சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசல்
மூன்றாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, இந்திய அணியை நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார்.
களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி, டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசினார். அவர் 176 பந்துகளில் 105 ரன்கள் (10 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து களத்தில் உள்ளார்.
பரிசுத் தொகை அறிவிப்பு
இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்காக சதம் விளாசியதுடன், டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக நிதீஷ் குமார் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் ரூ.25 லட்சத்தை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கெசினேனி சிவநாத் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : ஆந்திர கிரிக்கெட் வாரியத்துக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டவசமான மற்றும் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஆந்திரத்தைச் சேர்ந்த இளம் வீரர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரை கௌரவிக்கும் விதமாக ஆந்திர கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அவருக்கு ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.